தானே அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படைகள் இன்று அகோர பீரங்கித் தாக்குதல்: 12 பேர் பலி; 20 பேர் காயம்

வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படைகள் நடாத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 78 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 243 ஆகவும் அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பினை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை 7:55 நிமிடத்தில் இருந்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

விழி மற்றும் செவி மாற்றுத் திறனுடையோர் இல்லமான இனிய வாழ்வு இல்லம், வீதியால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தோர்கள், இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்தவர்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இதில் 12 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இழப்பு விவரம் மேலும் அதிகரிக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்பகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த வீடொன்றில் நேற்று இரவு 11:30 நிமிடமளவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவரினதும் காயமடைந்தோரினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.



Comments