வன்னியில் இருந்து நோயாளர்களுடன் உதவிக்கு வந்த 122 பேர் கைது

வன்னிபெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளர்களுடன் உதவிக்கு வந்த 122 பேர் ஓமந்தை சோதனை சாவடியில் படையினரால் கைது செய்யப்பட்டு நெடுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் நோயாளர்களுடன் வந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

உதவிக்கு வந்த உறவினர்கள் கைது செய்யப்பட்டமையினால் நோயாளர்கள் பெரும் சிரமப்படுவதாக இந்திய தூதுவரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 25 சிறுவர்களும் 33 ஆண்களும் 64 பெண்களும் உள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, அவ்வாறு எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் நோயாளர்களுடன் உதவிக்கு வந்த 122 பேர் பாதுகாப்பாக வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


Comments