சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் உயிரைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளின் மனிதாபிமானம்


மோதலில் இறந்த எட்டு இராணுவத்தினரின் சடலங்களுக்கு மத்தியில் கழுத்திலும், கையிலும் காயமடைந்த நிலையில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய் கிடந்தார். வாழ்வதற்கான இந்த அதிர்ஸ்டம் கிடைத்ததற்கு அவர் விடுதலைப் புலிகளின் மனிதாபிமானத்திற்கு நன்றி கூறவேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினருக்கு எதிரான உக்கிர தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பெரும்பான்மை ஒன்றைப் பெறும் மகிந்த அரசின் கனவுகளை நிறைவு செய்வதற்கு இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் நாள் அதிகாலை 1:30 மணியளவில் விடுதலைப் புலிகளின் வடபோர்முனை முன்னரங்கான முகமாலை - கிளாலி அச்சில் நகர்வை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு எதிரான மோதல்கள் ஆரம்பமாகியிருந்தன. பிரிகேடியர் கமால் குணரட்னா தலைமையில் 53 ஆவது படையணியின் இரு பிரிகேட்டுக்கள் இந்த நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தன. விடுதலைப் புலிகளின் முன்னணி பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றுவதே அவர்களின் பிரதான இலக்கு. ஆனால் 9 மணிநேர கடும் சமரின் பின்னர் இராணுவம் கடுமையான இழப்புக்களுடன் பின்வாங்கியது.

படை நடவடிக்கை நிறைவு பெற்ற பின்னர் மாலை 7:00 மணியளவில் இறந்த இராணுவத்தினரின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் இராணுவ சிப்பாய் ஒருவர் சுவாசிப்பதை அவதானித்துள்ளார். களமுனை மருத்துவ போராளிகள் உடனடியாக அவருக்கு முதலுதவிகளை வழங்கினர். சுயநினைவு திரும்பிய படைச் சிப்பாய் தனக்கு குடிப்பதற்கு நீர் தருமாறு கேட்டார்.

விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு அவரை காப்பாற்றுவதற்கு அதிக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. தமது உறுப்பினரைப் போலவே அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வடபோர்முனையில் உள்ள களமுனை வைத்தியசாலையில் வைத்து அவர்கள் வழங்கினர்கள். அதன் பின்னர் அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்கைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்தார்.

அனுராதபுரத்தை சேர்ந்த இளம் படைச்சிப்பாயான ஆர் ஏ நிசன் ரணசிங்க (வயது 22) சிறிலங்கா இராணுவத்தின் சிங்க றெஜிமென்டைச் சேர்ந்தவர். தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்றுவிக்கப்பட்ட ரணசிங்க பலவந்தமாக முன்னனிக் களமுனைக்கு அனுப்பப்பட்டிருந்தார். விருப்பத்திற்கு மாறாக முன்னனிக் களமுனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட படைச்சிப்பாய் பலவந்தமாக போரிட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

கிளாலி மோதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிப்பு
சிறிலங்கா இராணுவத்தின் பெரும்பாலான படைச்சிப்பாய்கள் தேவையான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படாது களமுனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நவீன இராணுவத்தில், எல்லா இராணுவ சிப்பாய்களுக்கும் ஏனைய பயிற்சிகளுக்கு முன்னர் இலகு காலாட் படையினருக்குரிய அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் போருக்கு ஏற்ற தகமைகள் உடைய படையினராக தம்மை தயார்படுத்தி கொள்வார்கள்.

ஆனால், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் நாள் பயிற்சிகளை நிறைவு செய்த ரணசிங்க உடனடியாகவே களமுனைக்கு அனுப்பட்டிருந்தார். கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஊடகவியலாளர்களுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏழாம் தரம் வரையிலும் கல்வி கற்ற ரணசிங்க வறுமை காரணமாக இராணுவத்தில் இணைந்து கொண்டதாகவும், எனினும் உடனடியாக உக்கிரமான போர் நடைபெறும் களமுனைக்கு அனுப்பப்படுவேன் என தான் நம்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் நாள் இராணுவத்தில் இணைந்த தான் ஆயுதங்களை பயன்படுத்துவது எவ்வாறு என்ற பயிற்சிக்கு 659 பேருடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்ததாகவும், மூன்று மாத பயிற்சியின் பின்னர் 53 ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ள கிளாலி களமுனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணசிங்க பயிற்சிகளை நிறைவு செய்த 15 தினங்களில் பெரும் படை நடவடிக்கை ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தார். டிசம்பர் 9 ஆம் நாள் இரவு அவர் தாக்குதல் களமுனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மறு நாள் அதிகாலை 2:30 மணியளவில் முன்நகரும் படி பணிக்கப்பட்டிருந்தார்.

எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல் காரணமாக படைத்தரப்பு விரைவாகவே பின்வாங்கியிருந்தது. ஆனால், ரணசிங்க அதிகாலை 6:30 மணியளவில் காயமடைந்ததுடன், ஏறத்தாழ 12 மணிநேரம் களமுனையில் கிடந்துள்ளார். அவரை இராணுவம் காப்பாற்ற முயலவில்லை.

'நான் காயமடைந்த போதும் என்னை எனது சக படையினர் கைவிட்டு விட்டனர். விடுதலைப் புலிகள் என்னை மீட்ட போது நான் இறந்த படையினர் மத்தியில் கிடந்தேன், அவர்கள் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

ஊதியம் அதிகம் என்பதனாலும், இரு வருடங்களுக்கு களமுனைகளுக்கு செல்ல தேவையில்லை என்ற உறுதி மொழியையும் நம்பியே நான் இராணுவத்தில் இணைந்தேன். ஆனால், இணைந்த சில மாதங்களில் யாழ். குடாநாட்டிற்கு அனுப்பப்பட்டதுடன், ஆறு நாட்களில் முன்னணி களமுனைக்கும் நகர்த்தப் பட்டேன்."

இராணுவத்தில் இணையும் பல சிங்கள இளைஞர்கள் இவ்வாறு முட்டாளாக்கப்படுகின்றனர். இந்த சமரில் ஈடுபட்ட 35 இராணுவத்தினரை கொண்ட ஒரு பிளட்டூன் படையணியில் நானும் ஒருவன். எனக்கு இராணுவத்தில் இணைந்த பின்னரே உண்மையான களநிலைமைகள் தெரிய வந்துள்ளது. இந்த பிளட்டூன் படையணியில் நாங்கள் நான்கு பேர் ஒரு காவலரணில் கடமையில் இருந்தோம். எனினும் ஏனைய மூன்று பேருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியாது" என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் தொடர்பாக எதுவும் அறியாத இளம் படையினருக்கு அரசு பொய்யான பிரச்சாரங்களின் மூலம் தனது அரசியல் விம்பங்களை உயர்வாக காண்பித்து வருகின்றது. விடுதலைப் புலிகளுடன் இராணுவம் போரிட்டு வருவதாக படையினர் தவறாக வழிநடத்தப்படுவதுடன், சிறிலங்கா இராணுவம் போரில் வெற்றியீட்டும் என்றும், வெற்றிபெறும் போரை அது மேற்கொண்டு வருவதாகவும் இளம் படையினருக்கு உறுதிமொழிகளை வழங்கி அரசு அவர்களை தவறாக வழிநடத்துகின்றது.

போரைத் தொடர்வதற்காக சிங்கள இளைஞர்கள் தொடர்ந்து படையில் இணைத்துக் கொள்ளப் படுகின்றனர். ஆனால் சிறிலங்கா இராணுவம் அனுபவமற்ற படையினர் மற்றும் ஆட்பற்றாக்குறையுடன் பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு தோல்வியடையும் போரை நடத்தி வருகின்றது. நாடு ஒரு வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கையை சிங்கள மக்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ளதுடன், போர் தொடர்பான உண்மை நிலமைகளை வெளியிடாதவாறு எல்லா ஊடகங்களையும் அச்சுறுத்தி அது முடக்கியும் உள்ளது.

களமுனைகளில் இருந்து சுயாதீன தகவல்களை பெறுவதற்கு அனுமதிகள் வழங்கப்படுவதில்லை. தவறான போர் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் அரசு தேசியம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. படையினரின் இழப்புக்கள் தொடர்பாக அரசு வெளியில் தெரிவித்து வரும் தகவல்களை விட உண்மையான இழப்புக்கள் அதிகம். பெரும்பாலான காயப்பட்ட படையினர் கால்கள், கைகள் போன்ற அவயவங்களையும், பார்வைப்புலன் மற்றும் கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளிநொச்சி களமுனை மோதல்களில் ஈடுபட்டவர்கள்.

போர் தொடர்பாகப் பேசுவதற்கு பெரும்பாலான படையினர் அஞ்சுகின்றனர். அரச படையினரின் அல்லது அவர்களுடன் இணைந்து இயங்கும் காடையர்களின் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு தாம் உள்ளாகலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. போர் உக்கிரமான ஒரு கட்டத்தை அடைந்துள்ள போதும், அரசு தனது பிரச்சார உத்திகளை தொடர்ந்து பேணி வருகின்றது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் களமுனைகளில் இருந்து படையினர் தப்பியோடுவதும் மிகவும் கடினமானது. பாதுகாப்புதுறையில் வேறு வேலைகளுக்கு என தற்போது சிறுவர்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

எனினும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் களமுனைக்கும் அனுப்பப்படுகின்றனர்.

பெரும்பாலான புதிய இராணுவத்தினர் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், சிங்கள கிராமப்புறங்களை சேர்ந்த இவர்கள் தொழில் வாய்ப்புக்களோ அல்லது கல்வி வசதிகளோ அற்ற நிலையில் படைகளில் இணைந்து வருகின்றனர். 'கவலைப்பட வேண்டாம் நாங்கள் நேரடியாக களமுனைகளுக்கு அனுப்பப்பட மாட்டோம்" என புதிதாக இணைந்து கொள்ளும் படைச் சிப்பாய்கள் தமது பெற்றோருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறுகின்ற போதும், நடைபெறும் சம்பவங்கள் அதற்கு மறுதலையானவை.

புதிய படைச் சிப்பாய்கள் களமுனைகளில் பலவந்தமாக களமிறக்கப்படுகின்றனர். தப்பிப் பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழிகள் அற்ற நிலையில் அவர்கள் மோதல்களில் ஈடுபடுகின்றனர். படைகளில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கடுமையான நிபந்தனைகளை தொடர்ந்து தற்போதைய போரில் ஏறத்தாழ 25,000 படையினர் தப்பியோடியுள்ளனர். அவர்களின் வீடுகளில் இராணுவ காவல்துறையினர் எழுந்தமானமாக தேடுதல்களை நடத்தி கைது செய்யப்படும் படையினரை பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

ரணசிங்க வாழ்வதற்கு விரும்புகின்றார். அவரது கதை அரசியலுக்கு அப்பாற்பட்ட அனுபவமும் பயிற்சியும் உள்ள படையினருக்கும் அரசியல்மயப்படுத்தப்பட்ட படையினருக்கும் இடையில் உள்ள வேறுபாட்டிற்கான சிறந்த உதாரணமாகும். 'அரசு தப்பி பிழைப்பதற்கே இந்த போரை நடத்தி வருகின்றது" என இராணுவ சிப்பாய் ஒருவரின் உறவினர் தற்போதைய போர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

மறுபக்கம் அரசு தமிழ் மக்களை மனிதாபிமானமற்ற முறைகளில் நடத்தி வருகின்றது. போர் நடைபெறும் வன்னி பகுதியில் மட்டுமல்லாது, அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும், கடத்தப்பட்டும் உள்ளனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் படை நடவடிக்கை வன்னியில் 275,000 இற்கு மேற்பட்ட மக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர வைத்துள்ளது.

அவர்கள் வாழ்வதற்கே பெரும் துன்பங்களை சந்திக்கும் போது சிறிலங்கா படையினர் எறிகணை வீச்சுக்களையும், வான்குண்டு தாக்குதல்களையும் பொதுமக்கள் வசிக்கும் கிராமங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றின் மீது மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை சோமாலியா மக்களின் நிலையை ஒத்ததாக காணப்படுவதாக உலக உணவுத்திட்ட அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் ரணசிங்க புதிய வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். களத்தின் வேறுபாடுகளை கூறுவதற்கு அவர் வாழ வேண்டும். ஒரு மனிதனை போர்க்களத்தில் காப்பாற்றும் வெற்றிகர நடவடிக்கையானது வன்னிப்படை நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதல் கட்டளை தளபதி கேணல் தீபனின் விரைவான நடவடிக்கையினால் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

அந்த இளம் படைச் சிப்பாய்க்கு புதிய வாழ்வு தரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்திலேயே ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தியை உலகிற்குக் கூறும். அவர்கள் அரசினால் தவறுதலாக வழிநடத்தப் படுபவர்களுக்கு எதிராகக்கூட போரை மேற்கொள்ளவில்லை.

ரணசிங்க மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் களமுனைகளில் காயமடைந்த பல படையினரை விடுதலைப் புலிகள் காப்பாற்றி தமது உறுப்பினர்களை போல அவர்களை பராமரித்து சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். மிகவும் ஒழுக்க நெறியான்மை கொண்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ரணசிங்கவை காயமடைந்த இடத்தில் இருந்து பல கிலோ மீற்றர் தூரம் காவிச்சென்று அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை உக்கிர போர்க்களங்களில் கூட மீறவில்லை.

முன்னணி களமுனைகளின் உக்கிரமான நிலமையிலும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த எதிரியைக் கொல்ல அவர்கள் நினைக்கவில்லை. அதிக குருதி வெளியேற்றித்தினால் பாதிக்கப்பட்டிருந்த ரணசிங்கவை வடபோர்முனை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற விடுதலைப் புலிகள் அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகளை வழங்கிய பின்னர் ஏறத்தாழ 20 கி.மீ தொலைவில் உள்ள கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருந்தனர். அவருக்கு அங்கு வைத்தியர்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர்.

ஆனால், கிளிநொச்சி வைத்தியசாலையில் ரணசிங்க சிகிச்சை பெற்று வந்த போதும் அதன் மீது சிறிலங்கா படையினர் எறிகணை வீச்சுக்களை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தனர். இந்த நடவடிக்கையானது சிறிலங்கா அரசு அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை என்றுமே மதிப்பதில்லை என்பதையே காட்டுகின்றது.

-வேல்சிலிருந்து அருஸ்-



Comments

Thamizhan said…
இதை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து இணையத்திலும்,பத்திரிக்கைகள் மற்ற நிறுவனங்களுக்கு அனுப்ப நண்பர்கள் முன் வந்தால் நன்றாக இருக்கும்.
சரியான் அசெய்திகள் சரியான் இடங்களுக்குப் போய்ச் சேர்வதுதான்
நாம் தற்போது செய்ய வேண்டிய முக்கிய பணி.
செய்ய முன் வருவோர்க்கு நன்றி.