உண்ணாநிலை போராட்டத்தை முடித்தார் திருமாவளவன்

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார்.

இவரின் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

கடந்த வியாழக்கிழமை காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன், தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததால் அவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருமாவளவன் மயக்கநிலைக்குச் சென்றதால், அவரை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்திக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

திருமாவளவனுக்கு மயக்கம் ஏற்பட்டதை அறிந்த கட்சித் தொண்டர்கள் அவர் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரண்டு தடவை நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் செயலாளர் இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் மேடைக்கு வந்து உண்ணாநிலை போராட்டத்தினை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.



எனினும் திருமாவளவன் தனது உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்தார்.

இன்று மாலை 5:00 மணிக்கு திருமாவளவனைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதால் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

"இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் (மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன்) இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தின் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது. எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் மருத்துவர் இராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை மருத்துவர் இராமதாஸ் ஏற்றுக்கொண்டதையடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தொடர்ந்து, திருமாவளவனுக்குப் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார். திருமாவளவனுடன் சேர்ந்து உண்ணாநிலை இருந்த கட்சியின் மற்ற தொண்டர்களும் போராட்டத்தை இன்று மாலையுடன் முடித்துக்கொண்டனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன், இயக்குநர் பாக்கியராஜ் ஆகியோரும் திருமாவளவனைச் சந்தித்து உண்ணாநிலை போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.


Comments