ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும் வன்னி மக்களின் அவலங்களும்

தேசபக்தியைக் கட்டி எழுப்புவதே, ஊடகங்களின் தலையாய கடமையென்கிற புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதேவேளை, வன்னி மக்களின் உணர்வுகள் சில வெகுஜன ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்களின் வாயிலாக வெளிவருகின்றன. தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என அறிக்கை விடும் கலைஞருக்கு, மரணத்தின் வாசலில் நின்று, ஈழத்தமிழர்களின் மனு ஒன்று, கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் சிவனடியார், இந்திய அரசு, ஒபாமா, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு வன்னி மக்களின் அவல வாழ்வு குறித்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த அவசரச் செய்தியில் வைத்தியசாலைகள், பாடசாலைகள், நிர்வாக மையங்கள் மற்றும் ஆலயங்கள் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதலை நிறுத்துமாறும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசித்து, இடம்பெயரும் மக்களிற்கான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்தோடு ஐ.நா. ஸ்தாபனம், சர்வதேச அரசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வன்னிக்குள்நுழைய ஏற்பாடு செய்யுமாறும், குறிப்பாக அடிப்படை வாழ்வாதார வசதிகளற்ற, அல்லலுறும் வன்னி மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் கூடாரங்களை உடனடியாக அனுப்புவதற்கு ஆவன செய்யுமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பேரினவாதக் கலாசாரத்தில், பேச்சுரிமையோடு, வாசித்தறியும் உரிமையும் நசுக்கப்படுவதை சிங்கள மக்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

சிறுபான்மையான பூர்வீக தேசிய இனங்களின் மீது, ஆட்சியதிகாரம் செலுத்தும் அடக்குமுறை வடிவங்கள், சமதளவாசிகள் மீதும் பாயுமென்பதை, சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உணர்த்துகிறது. விடுதலைப் புலிகளை விமர்சிப்பதோடு நின்று விடாமல் வேறு பலரின் குறைகளையும், ஊழல்களையும் லசந்த அம்பலமாக்குகிறார் என்பதே, அவர் எழுத்தினால், பாதிப்பட்டோரிடம் ஏற்பட்ட விரக்திக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பலர் கருதுகின்றனர். இதுபோன்று எத்தனையோ தடவைகள், ஊடக சுதந்திரத்திற்கு ஸ்ரீலங்காவில் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. தராகி கொல்லப்பட்டால் புலி ஆதரவுத் தமிழர் என்கிற வட்டத்துள்ளும், லசந்த கொல்லப்பட்டால் ஸ்ரீலங்கா இறையாண்மை என்கிற எல்லைக்குள்ளும் பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற பிரித்தானிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தொழிற்கட்சி உறுப்பினர் கீத்வாஸ், வன்னி நிலவரம் தொடர்பாக பிரதம மந்திரி கோடன் பிறவுணிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுக்க, அதற்கு பிரதமர் கூறிய பதில், இலங்கையில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை குறித்து தான் அக்கறை கொள்வதாகவும், இதை அகற்ற உடனடி போர் நிறுத்தமொன்று அவசியம் எனவும் கூறிய பிரதமர் கோர்டன் பிறவுண், ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக போர் நிறுத்த மொன்றினைக் கொண்டுவர, பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சார்கோஸியுடனும், ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மார்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடி ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோன்று, போர் நிறுத்தம் குறித்த விவகாரத்தில் ஈடுபட, நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் ஹன்சன் பௌவர் விருப்பம் தெரிவித்த செய்தியும் தென்னிலங்கையின் கோபத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது. விமல் வீரவன்சவும், ஹெல உறுமயவினரும், வெளிச்சக்திகளின் அழுத்த அம்புகள் அரசாங்கத்தின் மீது பாயாமல் தடுக்கும், அரண்களாக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன் மீதும் இவ்வம்புகள் பாயத் தொடங்கியுள்ளதை அவதானிக்கலாம்.

போரை நிறுத்தும்படி மேனன் அழுத்தம் கொடுக்க மாட்டாரென்பதை, அதிகார வாசிகள் புரிந்து கொண்டாலும், பொது மக்கள் சாவடையாமல் போரை முன்னகர்த்த வேண்டும் என்கிற அறிவுரையும், அவரிடமிருந்து வரக்கூடாதென்பதற்காகவே அம்புகள் முன்னெச்சரிக்கையாக சீறத் தொடங்கின. ஆனாலும், இலங்கையில் போர் யந்திரத்தையும், பரப்புரைச் சமரினையும், பின்னால் நின்றவாறு முழுமையாக இயக்குவது, இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பதை தாயக, புலம்பெயர் தமிழினம் மிகத் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்கள். இலங்கையை தனது பிடிக்குள் கொண்டுவர, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் பகடைக் காயாக வைத்து உருட்டும், இந்தியாவின் நவீன காலனித்துவ போக்கினை தற்போது புலம்பெயர்ந்து வாழும் புதிய சந்ததிகளும் புரிந்து கொள்கின்றன.

எல்லாமே முடிவுறும் தறுவாயில் இருப்பது போன்ற தொரு, தீவிர பரப்புரைச் செயற்பாட்டினைக் கட்டவிழ்த்து, உலகத் தமிழினத்தின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க மேற்கொள்ளும் உத்தி, நீர் மேல் எழுதிய எழுத்துப் போலாகலாம். புலுனிக் குஞ்சுகள், பூவரசம் மரத்தடியில்தான் இருக்கின்றன. முப்பது வருட தேசிய விடுதலைப் போராட்டத்தை, முடிவுக்கு கொண்டு வந்து விட்டோ மென்கிற அதீத நம்பிக்கையில், தமது நிரந்தர நட்பு நாடுகள் யாரென்பதைக் கூறத் தொடங்குகிறது இலங்கை. ""பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனா பாகிஸ்தான் அதிபர்களுடன் பலமுறை தொடர்பு கொண்டு அதிபர் இராஜபக்க்ஷ உரையாடி, அதனூடாகப் பெற்ற உதவி, ஒத்தாசைகளால் தான் இந்த வெற்றியை அடைய எம்மால் முடிந்தது எனப் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான நேர்காணலொன்றில், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளை அழித்த பின்னர், சீனா, பாகிஸ்தானுடன் தனது பழைய நிரந்தர நட்பினை இறுக்கமாகப் பேணுவதையே, ஆசிய பிராந்தியத்திற்கான இராஜதந்திரமாக அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாசியின் திருமலை பயணத்திற்கும் அரசின் சீன உறவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதையும், புதிதாக உருவாக்கப்படும் ஆசிய நாணயச் சபையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிராக சீனா தலைமை தாங்கும், இறுக்கமான ஆசிய பொருளாதார கட்டமைப்பில், ஜப்பானுடன், தென்கொரியா, இந்தோனேசியாவும் இணைவதை இலங்கை தெரிந்து வைத்துள்ளது.

இப்புதிய ஆசியப் பொருண்மிய தலைமையினால், வறிய நாடுகளாக இனங்காணப்பட்ட ஏழு நாடுகளில், இலங்கையும் ஒன்று. ஒபாமாவின் வருகைக்கு முன்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலை துறைமுகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் இத்தலைமைக்கு உண்டு. நேரடியாகவே திருமலையில் சீனா கால் பதித்தால், போருக்கு கொடுக்கும் முட்டுக்கம்பினை இந்தியா எடுத்து விடும் அபாயமிருப்பதால், ஜப்பான் வருகை தந்துள்ளது. ஜப்பானின் திருமலை விஜயத்தை இந்தியாவால், வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாத, விமர்சிக்கவும் இயலாத நிலை இருப்பதாக கருதலாம்.

ஆனாலும், இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய மாநாடு குறித்து பேசுவதற்கு மேனன் வருகை தருகிறாரென சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட கூறுவதை, சார்க் நாட்டிற்கு முன்பாக மேனனும், நாராயணனும் வருகை தந்த போது கூறப்பட்ட விளக்கங்களோடு ஒப்பிடலாம். நிகழ்ச்சி நிரலை வகுப்பதற்கு இருவரும் வந்தார்கள். முடிவடைவதாக எண்ணியபடி ஒருவர் வந்துள்ளார். காஸா மீதான சியோனிசத்தின் தாக்குதல்கள், வன்னி மக்களின் அவலத்தினை உலகின் கண்களிலிருந்து மறைத்துவிட்டன.

இன்னும் சிலதினங்களில் ஐ.நா. அனுசரணையோடு காஸாவில் யுத்த நிறுத்தமேற்பட்டு உலகின் குவிமையப் பார்வை, இயல்பு நிலைக்குத் திரும்பினால், புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியினால் வன்னி மக்களின் துயரநிலை உலகின் கண்களுக்குத் தெரியலாம். ஆனாலும், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், தாயக மக்களின் அவலக்குரல், வல்லரசாளர்களின் பெரும் போர் முழக்கத்துள் மறுபடியும் கரைந்துவிடும். காத்திருப்பிற்கும், பல பிராந்திய,சர்வதேச அர்த்தங்களுண்டு.

- சி.இதயச்சந்திரன்



Comments