இலங்கை தமிழர் பிரச்னை: எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: திருமாவளவன் வற்புறுத்தல்

வண்டலூர், ஜன.18-: இலங்கை தமிழர் பிரச்சினையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வற்புறுத்தினார். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி திருமாவளவன் தொடங்கிய உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. உண்ணாவிரத மேடையில் நேற்று பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

பல கட்சிகள் இணைந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்ட முடிவு எடுக்க முடியாது என்பதால், நான் இந்த முடிவை எடுத்தேன். தோழமை கட்சி தலைவர்களை அவமதித்ததாகவும், புறக்கணித்துவிட்டதாகவும் தயவு செய்து கருத வேண்டாம். இந்த முடிவை எடுக்க நான் நினைத்தபோது, டாக்டர் ராமதாஸ், வீரமணி போன்ற தலைவர்கள் தடுத்தனர். இந்த நிலையை எடுத்ததற்கு முதலமைச்சரும் வருத்தப்பட்டு உள்ளார்.

இந்த முடிவு எடுத்ததற்காக, டாக்டர் ராமதாஸ், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எனக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை. ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துவதற்காக, இந்த முடிவை எடுத்தேன். இலங்கையில் போரை நிறுத்துவதற்கு என்னை வைத்து முதல்வர் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனின் கொழும்பு பயணம், போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று நம்ப முடியவில்லை. அழிவின் விளிம்பில் நிற்கும் 5 லட்சம் அப்பாவி தமிழர்களை பாதுகாக்க போர் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அம்மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

மேலும் இந்தியா - இலங்கை உறவு மிக ஆழமாகவும் சிறப்பாகவும் உள்ளது என பூரிப்பு அடைந்து இருக்கிறார். இவ்வாறு ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசின் போக்கில் மாற்றம் கொண்டு வர, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அழுத்தம் கொண்டு வர வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி அன்று, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். அத்துடன், தமிழினத்துக்கு எதிரான சக்திகளை ஓரம் கட்டி, மரியாதைக்குரிய தா.பாண்டியன், வைகோ ஆகியோர் முதல்வர் தலைமையில் ஓரணியில் திரள வேண்டும்.

நான் பல முறை பட்டினி கிடந்தவன். இன்னும் 3 நாட்களுக்கு இந்த வலியை தாங்கிக்கொள்ள எனக்கு முடியும். டாக்டர் ராமதாஸ் என்னை பரிசோதனை செய்து சில அறிவுரைகளை கூறினார். அதை மதிக்கிறேன். அமைச்சர்ஆற்காடு வீராசாமி மூலம் முதல் அமைச்சரும், ஆசிரியர் கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வரின் வேண்டுகோள் தொடர்பாக, எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி நாளை (இன்று) முடிவு எடுக்கப்படும். அடுத்தடுத்து போராட்டம் தொடரும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக, உண்ணாவிரத மேடையில், திருமாவளவனை சந்தித்தபின் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் எழுச்சித்தமிழனாக, விடிவெள்ளியாக நம் முன் காட்சி தருகிறார், தம்பி திருமாவளவன். உண்ணாவிரத முடிவிற்காக அவர் மன்னிப்பு கேட்டார். தம்பி இந்த உண்ணாவிரத முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. எனவே மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை. தினம் தினம் இலங்கை தமிழர்கள் படும் வேதனை பற்றி பேசிக்கொள்ளும் நாங்கள் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தபோது, முதலமைச்சரை சந்திக்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி சொன்னார்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மூன்றுபேரும் முதலமைச்சர் கருணாநிதியை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினோம். அப்போது என்ன என்ன சொல்ல வேண்டுமோ அத்தனையும் சொன்னோம். கெஞ்சினோம். அழுத்தம் தந்தோம். அத்தனையும் கேட்ட முதல்வர் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே கூறுங்கள் என்றார். இந்திய பிரதமர், சோனியா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று நாங்கள் தெரிவித்தோம். அதன்பிறகுதான், தங்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தம்பி என்னிடம் சொன்னார்.

எனவே என்னை கேட்டுத்தான் திருமாவளவன் உண்ணாவிரத முடிவை எடுத்தார். அப்போது நான் அது காலவரையுடன் கூடிய உண்ணாவிரதமாக இருக்க வேண்டும். சாகும் வரை உண்ணா நிலையாக இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டேன். நாம் அவரை இழந்துவிடக்கூடாது. தற்போது 3-வது நாளில் அவருடைய குருதி அழுத்தம் குறைவாக இருக்கிறது. சர்க்கரை அளவும் குறைவாக இருக்கிறது. அது 70-க்கு கீழே வந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும்.

அவரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வதற்குத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அது என்னுடைய வேண்டுகோள். ஆனால், இன்று போய் நாளை வாருங்கள் என்று தம்பி கூறிவிட்டார். நாளை (இன்று) மாலை கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறி இருக்கிறார். மத்திய அரசின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் கூறி இருக்கிறார். வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு செல்லப்போவது இல்லை.

சில நாட்கள் காத்து இருக்கலாம் என்றும் முதலமைச்சர் கூறி இருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தமிழர்களை அவமானப்படுத்திவிட்டது. முதல்வர் அவர்களே, இரண்டு முறை ஆட்சியை இழந்து எதற்காக பழியை சுமந்தீர்கள்? நீங்கள் எடுக்கும் முடிவுதான் தமிழர்களை காப்பாற்றும். நீங்கள் அவர்களை (மத்திய அரசு) நம்பினால் பயன் இல்லை. இந்த நாட்டையே உலுக்கும் முடிவு ஒன்றை நீங்கள் எடுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக நாம் அனைவரும் கூடி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து முதல்வரிடம் தெரிவிப்போம்.

எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனை கேட்டுக்கொள்கிறோம். உங்கள் உயிர் முக்கியமானது. தமிழ் இனத்துக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 100 ஆண்டுகள் வாழ்ந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும். முதல்வரின் தூதராக ஆற்காடு வீராசாமி வந்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். நானும் ஒரு காரணத்திற்காக கடந்த 1991-ம் ஆண்டில் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதனுடைய பாதிப்பு இப்போதும் எனக்கு உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் பேசி நல்ல முடிவுக்கு திருமாவளவன் முன்வர வேண்டும்''.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசும்போது, இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் பற்றி பட்டியலிட்டார்.

திருமாவளவன் உடலை கெடுத்துக்கொள்வதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கூடிப்பேசி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கலாம். விரைவில் வெளியுறவுத்துறை மந்திரி இலங்கை செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் போர் நிறுத்தம் ஏற்படுமானால், அனைவருக்கும் மகிழ்ச்சியான அந்த செய்தியை எதிர்பார்ப்போம் என்று கூறிய ஆற்காடு வீராசாமி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது-

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி நீங்கள் உண்ணாவிரதம் இருக்காதீர்கள். நல்ல முடிவை எடுங்கள். தமிழர்களுக்காக போராடும் உங்களைப் போன்ற நல்ல தோழர்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. நாம் சாகப்பிறந்தவர்கள் அல்ல. தமிழ் இனத்தை அழிப்பவர்களை நசுக்க பிறந்துள்ளோம்.

வாக்குச்சீட்டுகளை பெறுவதைவிட தமிழ் மக்களின் உயிரை காப்பதுதான் முக்கியம். இலங்கை பிரச்சினையில் எங்கள் பங்கு என்ன என்பதை, மாநில செயற்குழுவில் அறிவிக்க இருக்கிறோம். வீர மரணத்தை ஏற்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். தர்ம யுத்தம் வேண்டும். ஆகவே, நல்ல முடிவை எடுங்கள்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

நன்றி: ஆனந்த விகடன்



Comments