அவர்கள் பாணியில் …!

கிந்தராஐபக்ச அரசாங்கம் தமிழர்களின் உயிர்களை மட்டுமல்ல சிங்களவர்களின் உயிர்களுக்கும் பெறுமதியற்றதாக்கி உள்ளது என்பதே நிதர்சனமாகும். சுருக்கமாகக் கூறப்போனால் எந்தளவு உயிர்களை பலியிட்டும் தமது இலக்கை அடைவதிலேயே அது குறியாக உள்ளது.

அவ்வாறு இல்லாது விட்டால் ராஐபக்ச அரசாங்கம் கிளிநொச்சி கைப்பற்றுவதற்கு பல உயிர்களை கொடுத்திருக்க மாட்டாது. இவ்விழப்பு பொதுக்கணிப்பீடு அடிப்படையிலானதாகவோ அல்லது புலிகளின் அறியப்பட்டதன் அடிப்படையிலானதோ அல்ல சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல கூற்றுக்களின் அடிப்படையிலாகும்.

அதாவது ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மூவாயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையிலானதாகும். இதில் முதல் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் ஹெகலிய ரம்புச்வெல எப்பொழுதும் உண்மை பேச மாட்டார் என்பதே ஆகும். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களோ விடுதலைப் புலிகளோ மனதளவில் தானும் மகிழ்சியடையக் கூடிய விடயத்தை பேசமாட்டார் என்பது ஆனால் அவற்றையும் மீறி மூவாயிரம் இராணுவத்தினர் மூன்று மாதக்காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை ஹெகலிய ரம்புக்கெலவின் அடிப்படைக் குணாம்சத்தை வைத்துப் பார்க்கையில் கொல்லப்பட்ட இராணுவத்தின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென உறுதியாகக் கூறுமுடியும்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா அண்மைக்காலத்தில் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுவரும் காயம் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றை வெளியிடுகின்றார். இதன் பிரகாரம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான போரில் 12000 துரப்புக்கள் காயமடைந்துள்ளன. சரத்பொன்சேகா கூறியுள்ள காயமடைந்தோர் எண்ணிக்கையையும் ஹெகலியவின் கொல்லப்பட்டோர் எண்ணிக்கையையும் உண்மையில் சரியாக இருக்க வாய்ப்புக்கள் இல்லை.

ஆயினும் இவர்கள் வெளியிட்டுள்ள விபரங்கள் சிங்கள இராணுவம் வன்னிப்பிரதேசத்தில் சந்தித்துள்ள இழப்புப் பாரியது என்பதை உறுதி செய்துள்ளது. சிறிலங்காப் படைத்தரப்பின் இழப்புக் குறித்து சிங்கள அரசியல்க் கட்சிகள் எவையுமே அக்கறை காட்டியதில்லை. அவர்களின் இலக்கு என்பது இராணுவ வெற்றியேயாகும். இதற்காக அவர்கள் இராணுவத்திற்கு எத்தகைய இழப்புக்கள் வரினும் அதுகுறித்த அக்கறையோ கவலையோ கொள்வதற்கில்லை .இராணுவம் வெற்றி குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருந்த அரசாங்கமும் அரசியற்கட்சிகளும் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த தகவல் எதனையும் வெளியிடுவதற்கோ பிரஸ்தாபிப்பதற்கோ தயாராகவில்லை.

ஆனால் இராணுவத் தளபதியின் காயப்பட்டோர் எண்ணிக்கையும் அமைச்சர் ஹெகலிய அறிவித்துள்ள உயிரிழந்த படையினரின் எண்ணிக்கையையும் சிறிலங்கா இராணுவம் சந்தித்துவரும் பேரிழப்புக்களை நீண்ட காலத்திற்கு மறைத்துவிட முடியாதென்பதன் வெளிப்பாடேயாகும். அவ்வாறு முடியுமானால் யுத்தம் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் இத்தகைய தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கமாட்டாது.

ஆனால் சிங்கள அரசும் படைத்துறையும் மனித உயிர்கள் குறித்து கவலை கொள்வார்களாக இல்லை. அதாவது உயிரிழப்பை அவர்கள் கருத்தில் கொள்வார்கள் என்பதற்கில்லை. சுருங்கக் கூறின் உயிரிழப்பை அவர்கள் கருத்திற் கொண்டு யுத்தத்தை நிறுத்துவார்கள் என்பதல்ல.

அவர்களுக்கு அவர்கள் பாணியில் புரியவைத்தால் மட்டுமே அவர்கள் எவரது உயிர் எதுபற்றியும் சிந்திக்கும் நிலை இதுவாகும்.

(14.01.2009)

ஈழநாதம்: ஆசிரியர் தலையங்கம்



Comments