கலைஞருக்கு கடைசி வாய்ப்பு இது!




இரையைச்சுற்றிய மலைப்பாம்பாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை எண்ணிக்கையுடைய அப்பாவித் தமிழ் மக்களை இரத்த வெறி பிடித்த கோரயுத்தம் குரூரமாக சுற்றிவளைத்துக் கவ்வி நிற்கின்றது.

பூமிப்பந்து எங்ஙனும் சிதறுண்டு பரந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஆன்மா அந்தக் கொடூர சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது.

நமது தமிழ் உறவுகள் சகோதரங்கள் தினசரி டசின் கணக்கில் உடல் சிதறிப் பலியாகின்றமை குறித்தும், பல நூற்றுக்கணக்கில் மோசமாக காயமடைந்த அப்பாவித் தமிழர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் கூட இல்லாமல் அந்தரிப்பது குறித்தும் வெளியாகின்ற செய்திகளும் தகவல்களும் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களை மீளமுடியாத பேரதிர்ச்சிக்குள் ஆழ்த்திநிற்கின்றன.

யுத்தக் கோரம் ஒருபுறம் என்றால் உணவு, உடை, இருப்பிடம், குறைந்தபட்ச சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை மனிதத் தேவையையும் கூட நிறைவு செய்ய வசதியின்றி நமது உறவுகள் பல லட்சக்கணக்கில் ஒரே சமயத்தில் அந்தரித்துத் தவிப்பது மறுபுறத்தில் தமிழர் தம் நெஞ்சை ரணகளமாக்கி புண்படுத்தியுள்ளது.

இந்தப் பேரவல நிலை பற்றிய செய்திகளையும், தாக்கங்களையும், வழமை போல இவ் விடயங்களை பௌத்த சிங்களப் பேரினவாத நலன் என்ற பாரபட்சக் கண்ணாடி கொண்டு நோக்கும் தென்னிலங்கை ஊடகங்கள் ஒரேயடியாக இருட்டடிப்பு செய்கின்றமை வேதனை தருவதாகும்.

வழமையாக தென்னிலங்கையில் குண்டு ஒன்று வெடித்து, பொதுமக்கள் சிலர் பாதிக்கப்பட்டால் விழுந்தடித்து கண்டன அறிக்கை வெளியிட்டு, தம்மை மனித உரிமைகளைப் பேணி நிலைநாட்டுவதற்கான சர்வதேச காவலர்களாக காட்டிக்கொள்ளும் மேற்குலகமும் யப்பான், இந்தியா போன்ற தேசங்களும் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் தினசரி டசின் கணக்கில் மக்களைக் காவு கொண்டு நாள் தோறும் பல டசின் மக்களை அங்கவீனராக்கும் மிகக் கொடூர யுத்தம் ஒன்று வெளி உலகிற்கு சந்தம் சந்தடி காட்டாமல் கொடூரமாக முன்னெடுக்கப்படும் போது அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் வாளாவிருப்பது வேதனையிலும் வேதனை; கொடுமையிலும் மிகக் கொடுமை.

சர்வதேச சமூகம்தான் இப்படி நடந்து கொள்கின்றது என்று பார்த்தால், நமது இரத்த உறவுகள் தொப்புள் கொடி தொடர்புகள் கூட , இவ்விடயத்தை மூன்றாம் தரப்பின் விவகாரம் போலக் கருதி அதில் குறுகிய அரசியல் லாபம் ஈட்டும் வகையில் நடந்து கொள்வது தான் மிகக் கேவல நிலையாகும்.

இவ்வளவும் ஆனபின்னரும் "இறுதிக்கட்ட எச்சரிக்கை', "காலக்கெடு', "கடைசிக் கோரிக்கை' என்றெல்லாம் தொடர்ந்தும் "கயிறு' விட்டுக் கொண்டிருக்கின்றார் கலைஞர் கருணாநிதி.

கொடூர யுத்தத்தில் சிக்குண்டு சுமார் நான்கு லட்சம் அப்பாவித் தமிழர்கள் ஒன்றாக அழிக்கப்படும் கோர ஆபத்து நெருங்கிய பின்னரும் கூட, தமது பதிலடி நடவடிக்கை என்னவென்று வெளிப்படுத்தாமல் ஒளித்துப் பிடித்து விளையாடுகின்றார் தமிழக முதல்வர்.

இதன் பின்னரும் கூட தமது தமது கட்சி தமது அரசு ஆகிய தரப்புக்களின் பதில் நடவடிக்கை என்ன வென்பதைப் போட்டுடைத்து வெளிப்படுத்தி அதன் வழி உஷாராக முன்னகர்வதை விடுத்து, அந்த அடுத்த கட்டத்தையும் "சஸ்பென்ஸ்' ஆக வெளிப்படுத்தாமல் இழுத்தடிக்கின்றார் அவர்.

ஆனாலும், நிலமையின் தீவிரத்தால் உலகத் தமிழினமே கொதித்துப் போய் இருக்கின்றது என்ற யதார்த்தம் புரிந்திருப்பதால் "ஆட்சியை இழக்கவும் தயார்!' என்ற வெறும் வாய்ப்பந்தலை மாத்திரம் அவர் கைவிடவில்லை.

தி.மு.கவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு, அடுத்த சில மாதங்களில் நடைபெறப் போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டு வைத்தால் என்ன என்ற சிந்தனை மத்திய அரசின் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருப்பது பற்றிய செய்திகள் புதுடில்லியில் இருந்தும் சென்னையில் இருந்தும் கசியத் தொடங்கியுள்ளன.

அந்தப் புதிய உத்தேச கூட்டுக்கு ஆரம்பத்திலேயே ஆப்பு வைக்கும் ஓர் எத்தனமாக ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலைச் சிக்கலை வசமாகப் பயன்படுத்த கலைஞர் முயல்கிறாரே தவிர, பேராபத்தில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களுக்காக முழுமூச்சில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பவர் போல அவரது போக்குப் படவில்லை.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க இப்படி என்றால் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகக் தலைமைகளும் கூட, வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தமது குறுகிய உள்ளூர் அரசியலுக்கு வாய்ப்பான விடயமாகவே கையாளுகின்றன.

"இறுதி எச்சரிக்கை" என்ற பந்தாவுடன் இவ்விடயத்தில் இப்போது களத்தில் இறங்கியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்போதாவது ஆக்கபூர்வமான அர்த்த புஷ்டியுள்ள அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து, பேரழிவிலிருந்து முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்ற முயல்வாரா என்பதே இப் போதைய கேள்வியாகும்.

இனியும் இவ்விடயத்தில் அவர் குறுகிய அரசியல் லாபங்கள், பதவிச்சுகபோகங்கள் ஆகியவற்றுக்காக "திருகுதாளம்" பண்ணுவாராயின், உலகத் தமிழினமும் வரலாறும் அவரை மன்னிக்காது.



Comments