இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழக மக்களை தலைகுனிய செய்துவிட்டது - டாக்டர் ராமதாஸ்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு, தமிழக அரசையும் தமிழக மக்களையும் ஒட்டுமொத்தமாக அவமதித்து தலைகுனியச் செய்துவிட்டது என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம். இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலையுருவாகியுள்ளது.

எனக்கு கிடைத்த தகவலின் படி இலங்கையில் போரை நிறத்த வலியுறுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் தவிர வேறு யாரும் செல்வதற்கான அறிகுறிகள் இல்லை. (பிரணாப் முகர்ஜி அங்கு செல்லமாட்டார் என்பதை மறைமுகமாக சொல்கிறீர்களா என்று அப்போது செய்தியாளர்கள் கேட்டனர்). இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு முறை தமிழக சட்டமன்றம் கூடி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம்.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் எல்லோரும் டில்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிகளும் பிரதமரைச் சந்தித்து முறையிட்டனர். மனிதச் சங்கிலி நடத்தினோம் ஆயினும் மத்திய அரசு மனம் இறங்கவில்லை.

இந்த விஷயத்தில் தமிழக அரசையும், தமிழக மக்களையும் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தி விட்டதாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடுக்கும் எந்த ஒரு கூட்டு முடிவையும் பா.ம.க. ஏற்கும் என்று தெரிவித்தேன். அதற்கு இணங்க இப்போதும் முதலமைச்சர் கூட்டாக ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவித்தால் அதனை ஏற்க பா.ம.க. தயாராக இருக்கிறது. எங்களை பொறுத்தவரை இன்னும் ஒருமாதத்தில் பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களிடம் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தி ஒரு உறுதியான முடிவை அறிவிக்கவுள்ளோம்.

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழினமும் அழிய வேண்டும் என்று மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகள் செயற்படுகிறார்கள். அதற்கு மத்திய அரசும், அமைச்சர்களும் துணை போகிறார்கள். இலங்கையில் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்க தூதர் கூட சண்டையை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இலங்கை அரசு, சீனா, பாகிஸ்தான் நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மற்றும் இந்தியா வழங்கிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வைத்துக் கொண்டு ஓர் ஆண்டாக போராடி கிளிநொச்சியை பிடித்து விட்டோம் என்கிறார்கள்.

அப்படி கிளிநொச்சியை பிடித்தப்போது யார் சரண் அடைந்தார்கள், எந்தனை பேர் சரண் அடைந்தார்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எவ்வளவு என்பதையெல்லாம் இலங்கை அரசு கூறவில்லை. பாழடைந்த கட்டிடத்தை பிடித்துவிட்டு புலிகளின் தலைமையகத்தை பிடித்து விட்டதாக சொல்கிறார்கள். இலங்கை என்றைக்குமே இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்ததில்லை.

புலிகளை பொறுத்தவரை பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ அல்ல. அவர்கள் விடுதலைப் போராளிகள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். எனவே இப்போதாவது இலங்கையில் சண்டையை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்


Comments