மோசமடையும் வன்னி நிலை அதிகரிக்கும் மக்கள் துயரம்

4 இலட்சம் மக்கள், 400 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினுள்ளேயே பல தடவைகள் இடம் பெயர்ந்து வீதியோரங்கள், மரநிழல்கள், காடுகள், வயல் நிலங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக குடிசை எனும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இவ்வாறு "வன்னி மக்களின் இடப்பெயர்வும் தற்போதைய நிலையும்' எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, விசுவமடுவிலுள்ள வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு, கடந்த 17 ஆம் திகதி இந் நிலைவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெற்று வரும், முப்படைகளினதும் ஒருங்கிணைந்த படை நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் இயல்பு நிலை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். அரசபடைகளின் தாக்குதலில் 2,632 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6,700 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆவர்.

கடந்த நான்கு வாரங்களுக்கு முன் பாடசாலைகள், அகதி முகாம்கள், வைத்திய சாலைகள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட "கிபிர்' விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் 82 இடம் பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடப்பெயர்வும் மக்கள் நிலைமையும்

இலங்கைப் படையினரின் தொடரும் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் முழுமையாக இடம்பெயர்ந்து ஓர் குறுகிய நிலப்பரப்பிற்குள் சென்றுள்ளனர்.

400 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் 4 இலட்சம் மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்து வீதியோரங்கள், மரநிழல்கள், காடுகள், வயல் நிலங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிகக் குடிசை வசதிகள் எதுவும் இல்லை.

காரணம் அரசாங்கம், அனைத்தையும் தடை செதது மட்டுமன்றி விநியோகப் பாதைகளையும் மூடியுள்ளமையாகும்.

மேலும், மக்கள் கூடியிருக்கும் இடங்கள், பாடசாலைகள், கோயில்கள் ஆகியவற்றை இலக்குவைத்து இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்துகின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் காடுகளிலேயே தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். ஏற்கனவே இப்பிரதேசங்கள் மழை வெள்ளம், மலேரியா நுளம்புகள், கொடி பாம்புகள் என அபாயகரமான பகுதிகளாகவே உள்ளன.

உணவு விநியோக நிலைவரம்

வன்னியின் அனைத்து விவசாய நிலங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாய உற்பத்திகள், கால்நடை வளர்ப்பு என்பன முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலும் கடற்படையினரால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்காக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு விநியோகம் அடிக்கடி படைத்தரப்பின் தாக்குதல்களால் தடைப்படுகின்றன. இதனால் போதிய நிவாரணங்கள் கிடைப்பதில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 15 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த ஒரு வாரகாலமாக உணவு விநியோகம் நடைபெறவில்லை. அத்துடன் இலங்கை படையினரின் வல்வளைப்பிற்குள் முடக்கப்பட்ட 34 இலட்சம் மக்களுக்கான உணவு, இருப்புகள் யாவும் தீர்ந்துவிட்டன. உணவு கொண்டு செல்லும் பாதையினையும் அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.

சுகாதார மருத்துவ சேவை

வன்னியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினது செயற்பாடுகளும் விமானத்தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் காரணமாக தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

வன்னியின் மிகப் பெரிய வைத்தியசாலைகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து விசுவமடு மற்றும் உடையார்கட்டுப் பாடசாலைகளில் இயங்குகின்றன. இருப்பினும், புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு வைத்தியசாலைகள் விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதால் நோயாளர்கள் அங்கு செல்ல பயப்படுகின்றனர்.

தற்போது காயப்படுகின்ற மக்கள் தொகை அதிகரித்துச் செல்வதனால் வைத்தியசாலைகள் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

4 இலட்சம் மக்களுக்கு 10 வைத்தியர்களும் 40 தாதியர்களும் 4000 தற்காலிக படுக்கை வசதிகளுடனும் தான் வைத்திய சேவைகள் நடைபெறுகின்றன. கடந்த 6 மாதத்திற்கான மருந்துகளும் போதியளவு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படவில்லை.

மேலும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மாதமொன்றிற்கு 200 தடவைகள் நோயாளர்களை அம்புலன்ஸில் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு எடுத்துச் செல்வது வழமை. தற்போது அச்சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் போதிய மருத்துவ வசதியின்றி நோயாளர்கள் இறக்கும் தருவாயிலுள்ளனர்.

அத்துடன், அரசபடையினரின் தாக்குதலால் நோயாளர் மற்றும் காயப்படுவோர் தொகை அதிகரித்தவாறே உள்ளது. தவிர வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுச் சேவைகள், நிவாரண வேலைத் திட்டங்கள் என்பனவும் நிறுத்தப்பட்டு அல்லது பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தினந்தோறும் இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்து 4 இலட்சம் மக்களை பட்டினி மற்றும் உயிராபத்துகளில் இருந்து மீட்டிட புலம்பெயர்ந்த மக்களை வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுநிர்வாக அலகுகள் மீதான வான்வழி, எறிகணைத் தாக்குதல்களை உடனே நிறுத்தும்படியும், ஐ.நா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கும் படியும், சோதனைச் சாவடிகளைத் திறப்பதன் மூலம் காயப்பட்ட பொதுமக்களை வெளிமருத்துவ மனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கும் படியும், அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் போன்றவை வன்னிப் பிரதேசத்தை ஒழுங்காகச் சென்றடைய அனுமதிக்குமாறும் இலங்கை படைகளின் தமிழர் மீதான இனப்படுகொலைகளுக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில் உலக நாடுகள் செயும் உதவிகளை நிறுத்த வற்புறுத்துமாறும், போர் நிறுத்தம் செது விடுதலைப்புலிகளுடன் பேச இலங்கை அரசை வற்புறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Comments