"தமிழர்களை காக்க, புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்": "ஒபாமாவுக்கான தமிழர்கள்" வேண்டுகோள்

தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - கொழும்பு அரசின் போக்கிலேயே பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், கொழும்பு அரசின் அரச பயங்கரவாதமே, உண்மையில் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளை உருவாக்கியிருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் - அதிகாரங்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தினால் பறித்தெடுக்கப்பட்டதுடன், அதனை தமிழர்களுடன் பகிர்வதற்கு அவர்கள் முன்வரவில்லை.

தமது அரசியல் உரிமைகளைப் பெற அமைதியான - சட்டபூர்வமான - வழிகளில் தமிழ் மக்களாலும், அவர்களது தலைவர்களாலும் முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவையும் சிறிலங்கா அரசு முறியடித்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் - பிரித்தானியா சிறிலங்காவை விட்டு சென்ற 1948 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அன்று முதல் -

தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.

தமிழருக்கு எதிரான நாடு தழுவிய இன வன்முறைகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கள மொழி அதிகாரபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்களும், கல்வியும் தடுக்கப்பட்டது.

பௌத்த சமயம் நாட்டின் சமயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இந்து சமயமும், கிறிஸ்தவ சமயமும் புறக்கணிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பிறப்பிற்கு முன்னரே இவை எல்லாம் நடைபெற்றுள்ளன.

சிறிலங்கா அரசின் இந்த தமிழின ஓடுக்குமுறைகளும், வன்முறைகளுமே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் பிறப்பு தவிர்க்க முடியாததாக அமைந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஆயுத வன்முறைகள் முடிவற்றவையாகத் தொடர்கின்றன. தமிழ் மக்களின் மீதான மெதுவான இந்த இனச் சுத்திகரிப்பாக இது நடைபெறுகின்றது. சிறிலங்காவின் அண்மைக்கால இராணுவ வெற்றிகளை நோக்கும் போது - இறுதியாக அரசு விடுதலைப் புலிகளை முறியடித்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.

எமது பிரச்சினை இது தான்: விடுதலைப் புலிகள் இயக்கம் தான் - திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. விடுதலைப் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டால், தாம் முற்றாக அழிவுக்கு உட்படலாம் என தமிழ் மக்கள் இப்போது அஞ்சுகின்றனர்.

பெரும் அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டும் எனில், விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Comments