' ஓன்றாய் எழுவோம் ' .. முதலில் யார் எழுவது நீயா ? நானா ?

வன்னியில் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது, ஏறத்தாள நான்கு இலட்சம் மனித உயிர்கள் தமது அடுத்து நிமிட இருப்பிற்கான உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் உணவு வாகனத் தொடரணி வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அங்கு வாழும் அப்பாவி மக்கள் உணவின்றியும் இறக்கும் நிலை ஏற்படும்.

எப்படியாவது தமிழர்களின் தொகை குறைந்தால் சரி என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பிற்கு பல வழிகளில் ஆதரவு பெருகுகின்றது.

பருவம் தப்பி பெய்யும் மழையும் வன்னியில் நாளாந்த இடம்பெயர்வை சந்திக்கும் மக்களை தனது பங்கிற்கு வதைத்து அழிக்கின்றது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவை அழைத்து ஐநாவின் செயலாளர் நேற்று பேச்சு நடத்தியிருக்கின்றார். என்ன பேசினார்கள் என்பது முக்கியத்துவமற்றுப் போனாலும் பேச்சுவார்த்தையின் பின்னர் வன்னிக் களமுனையில் மாற்றங்கள் ஏற்படாதமையால் அது நிச்சயம் தமிழர்களுக்கு சாதகமான பேச்சுவார்தை அல்ல என்ற நிலைப்பாட்டிற்கு நாம் இலகுவாக வரமுடியும்

எனினும் இந்தச் சந்திப்பில் அரசாங்க தரப்பு வன்னிக்கான சில வார கால உணவுத் தடையை ஏற்படுத்துமாறு ஐநாவின் செயலரை கோரியதாகவும் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஐநா அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னிக்கான உணவுத் தடை என்பது மக்கள் மேல் தாம் கொண்ட அக்கறை காரணமாக ஏற்படுத்தபட வேண்டிய ஒன்று என்பதே அரசாங்க தரப்பு வாதம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மக்களின் சுயாதீன நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் வரை அந்த பகுதி மக்களுக்கு உணவு விநியோகம் நடத்தப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் அறிவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

மனிதாபிமான செயல்பாடுகளுக்கான அமைப்பு என்ற போர்வையில் இயங்கும் ஐநாவோ அல்லது வேறு எந்த அமைப்போ அவ்வாறான ஒரு முடிவினை அறிவித்தால் கூட தமிழர் தரப்பால் எதுவும் செய்ய முடியாது. அந்த நிலையை தான் நாங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இன்று வன்னி மக்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய பேசும் உலகிடம் வன்னியில் இருந்து வந்து வவுனியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் அவலங்களை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி யுத்தமற்ற சூழலில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் கனவுடன் வெளியேறிய நூற்றுக்கணக்கான மக்களின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகிப் போன சோகத்தை நாங்கள் மிகக்கவனமாக மறந்து விட்டோம்.

வன்னியில் இருந்து வெளியேற மட்டும் தான் புலிகள் தடை விதித்திருந்தார்கள். ஆனால் மனிக் பாமில் இயற்கை உபாதை கழிப்பிற்கு கூட பாஸ் எடுக்க வேண்டியிருக்கின்றதே என்ற ஆதங்கங்களை கேட்க முடிகின்றது.

வன்னியில் இருந்து வவுனியாவிற்கு வந்த மக்களுக்காக முழுமையான நடமாடும் சுதந்திரத்தையும் அரசும் அதன் இயந்திரங்களும் பறித்துவிட்டமை பற்றி எவரும் பேசுவதில்லையே ஏன் ?

தமிழ் தேசியவாதம் வளர்க்கும் ஊடகங்களைப் பொறுத்த வரை அவர்கள் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள், வன்னியில் இருந்து செத்து மடியாமல் சொகுசு வாழ்விற்காக எதிரியிடம் சரணடைந்தவர்கள் அவர்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற 'நல்ல' எண்ணம்.

மனிக் பாம் நெலுக்குளம் இன்னும் சில தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்ல வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அங்கு இல்லை.

அவர்கள் பாவம் மனைவி குழந்தைகளை பத்திரமான அயல் நாட்டில் தங்க வைத்து விட்டு பாராளுமன்ற ஆசனத்தை கட்டிப்பிடிப்பதற்காக அங்கும் இங்குமாய் பறந்து திரியவே நேரம் போதாமல் இருக்க மனிக் பாமும் மண்ணாங்கட்டியும்.

திறந்த வெளிகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மக்களில் இளவயதினர் தினமும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்... செல்லப்படுகின்றனர்... செல்லப்படுகின்றனர்.. ஆம் அவர்களில் பலர் திரும்பவே இல்லை.

அவர்கள் பற்றியும் நாம் பேசமாட்டோம் ஏனென்றால் அவர்கள் துரோகிகள்.

கடந்த புதன்கிழமை 5 இளம் யுவதிகள் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் எல்லா விசாரணைகளும் நடத்திய பின்னர் மேல் விசாரணைக்காக அவர்களை மேலுலகம் அனுப்பியிருக்கிறது பாதுகாப்புத் தரப்பு.

இது தவிர விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மேலும் பலர் அனுராதபுரத்தின் மக்கள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் வைத்து கொலை செய்யப்பட்டு எரியூட்டபட்டுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்பவர்களை கொன்று புதைக்க வேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவு மேலிடத்தில் இருந்து கிடைத்திருக்கின்றதாம். இது மகிழ்விற்குரியதல்ல கொன்று எரித்து விடுங்கள் என்பது தான் உத்தரவாம். தமிழர்கள் என்பதால் அவர்கள் பாரம்பரியப்படி எரித்துவிடச் சொல்கின்றார்கள் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். காரணம் மேலும் ஒரு செம்மணி விவகாரம் உருவாகாமல் பார்த்து நடக்குமாறு பெரியவர் சொல்லி இருக்கின்றார்.

ஏற்கனவே யாழ்மாவட்ட கட்டளை தளபதியாக சரத்பொன்சேகா இருந்த போது நடைபெற்ற செம்மணி புதைகுழிகள் எம்மில் பலருக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் பொன்சேகா அதை மறக்கவில்லை அதனால் தான் கொல்லப்படுகின்றவர்களின் உடலங்களை எரிக்கும் உத்தரவை கண்டிப்புடன் பிறப்பித்திருக்கின்றாம்;

அவர்கள் பற்றியும் நாம் பேசமாட்டோம் ஏனென்றால் அவர்கள் துரோகிகள்.

சரி புலிசார்பு ஊடகங்கள் இவர்கள் பற்றி பேசமால் இருப்பதற்கு காரணங்கள் மலிவாக இருக்கின்றன.

புலிஎதிர்ப்பு புஸ்வாணங்கள் ஏன் மௌனம் காக்கின்றன? புலிகளுக்கு எதிரான அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கென்று ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களையும் வானொலிகளையும் நடத்தி வருகின்றன. இவை எவையும் மக்கள் பற்றி கதைப்பதில்லை மாறாக புலி எதிர்ப்புப் புராணங்களை மட்டுமே பாடித் தீர்க்கின்றன.

இவை மக்களின் அவலங்களின் ஊடு புலி எதிர்ப்பு காரணிகளை மட்டுமே தேடுகின்றன.

அதனால் புலிகளில் இருந்து விடுபட்ட மக்கள் பற்றி அவர்கள் எண்ணி பார்க்க மறந்து விடுகின்றார்கள்.

வவுனியாவில் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அலுவலகங்கள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் இந்த மக்களின் அவலங்கள் தெளிவாக தெரிந்தும் ஆனாலும் மௌனமாகவே இருக்கின்றார்கள்

சரி அவர்களையும் விட்டு விடுவோம் இலங்கையில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு வலயங்களினுள் வாழ்பவர்கள், அரசாங்கத்தின் பிச்சையேற்று உண்பவர்கள் அவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக பேச மட்டுமல்ல சிந்திக்கவும் முடியாது.

அப்படியானால் புலத்தில் அரங்கேறும் ஜனநாயக ஊடகங்கள், புலிப்பாசிசத்தில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கதறிஅழும் ஜீவன்கள் இந்த விடயத்தை கவனிக்காமல் போனது ஏன் ?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுள் உள்ள வன்னியின் குறுநிலப்பரப்பில் வாழும் மக்களை புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களும் அதனைச் செய்ய வேண்டும் என கூப்பாடு போடும் தமிழ் தலைவர்களும் சரி ஏனையவர்களும் சரி ஏற்கனவே அங்கிருந்து புறப்பட்டவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடிந்ததா?

கட்டுப்பாடற்ற பகுதிகளில் வாழும் மக்களுடன் இணைந்து அச்சமற்று வாழும் சூழலை உருவாக்க முடிந்ததா?

இல்லை. அவ்வாறு வந்தவர்கள் கேட்பாரற்று அனாதரவாகக் கொல்லப்படுகிறார்கள். தீண்டத் தகாதவர்களாக ஒதுக்குப் புறங்களில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் ஆளுகைக்குள் உட்பட்ட மக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கு பகிரங்கமாக இணக்கம் தெரிவித்தால் அவர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் உத்தரவாதம் அழிக்க இந்தக் கூப்பாடு போடும் பேர்வழிகள் தயாரா?

ஐநா கண்காணிப்பாளர்களின் முன்னிலையிலோ அல்லது சர்வதேசத்தின் மேற்பார்வையிலோ இவர்கள் இந்த சமூகத்துடன் இணைந்து கொள்வதற்கான ஏற்பாட்டை இவர்களால் உத்தரவாதப்படுத்த முடியுமா?

இதிலும் காரணம் தேடும் தேவைகள் இல்லை. மாற்று கருத்து, சுதந்திரமான கருத்தால் உரிமை, ஜனநாயகம், முதலாளித்துவ எதிர்ப்பு, அதிகாரத்தை நோக்கி உண்மைகள் பேசும் முனைப்பு எல்லாம் புலி எதிர்ப்பின் பால் தோற்றம் பெற்றனவே அன்றி அவர்கள் கூறும் ஜனநாயகம், சோசலிசம் சார்ந்த கோட்பாட்டு வயப்பட்டிருக்கவில்லை.

மக்களின் வாழ்வியல் உரிமைகள் குறித்தும் அவர்களின் ஜனநாயகம் குறித்தும் கடிவாளம் இடப்பட்ட கண்கொண்டு அவர்கள் பார்கின்றார்கள். எப்படியாவது புலிகளையும் ஜனநாயக மறுப்பையும் ஒருகோட்டில் இணைக்க கிடைத்தால் போதும் ஏசி அறையில் ஓசியில் கிடைக்கும் காசில் வாங்கி கணனித்திரையில் தங்கள் தத்துவ வித்தகங்களை கொட்டித் தீர்ப்பார்கள்.

இவர்களின் வெளிப்பாடுகளின் அடிநாதமாய் இருப்பது புலிஎதிர்ப்பு வாதம் மட்டும் தான்.

ஆக மொத்தம் எந்த மக்களின் விடுதலைக்காக போராட இவர்கள் எல்லோரும் புறப்பட்டார்களோ அந்த மக்களை எல்லோரும் கூட்டமாக மறந்து விட்டார்கள்.

தமது இருப்புக் குறித்தும் அதனை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது குறித்தும் புலிகள் சிந்திப்பதும் அதற்கு உடந்தையாக மக்களை பயன்படுத்த முனைவதும், அதே மக்களை புலிகள் தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்ற கோசங்களின் ஊடே புலி எதிhப்பு பிரசாரம் செய்வதும் ஒன்று தான்.

இரண்டின் ஊடாகவும் மக்களின் விடுதலை என்பது கிடைத்துவிடப் போவதில்லை.

அதிமேதாவித்தன எழுத்துக்களால் புலிகளை வசைபாடும் தோழர்களும் எழுச்சி மிக்க வார்தைகளில் மக்களை சிக்க வைத்து உங்கள் இருப்புகளை உறுதிப்படுத்த முற்படும் புலிசார்ப்பு ஊடகங்கள் மற்றும் அமைப்புகளும் ஒரு கணம் இந்த மக்களை பற்றி மட்டும் சிந்தித்து பாருங்கள்..

புலி எதிர்பாளர்கள உடனடியாக மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்பது தவறு தான். ஆனாலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் நிலைக்காவது நாங்கள் மாற வேண்டும் என்பது தான் ஆதங்கம்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாய் எழுத்து மக்களுக்காக குரல் கொடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும்.

என்ன செய்ய ஒன்றாய் எழுவதென்றால் கூட முதலில் நீயா நானா என்ற கேள்வி தானே முந்திக்கொண்டு எழுகின்றது.

தமிழனின் தலையெழுத்தை இந்த பேனாவை கொண்டு எப்படி தான் மாற்றி எழுதுவது.


Comments