அவசர நிவாரண சேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கவலை



வன்னியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருவதால் அவசர நிவாரண சேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கடந்த 5 தினங்களாக வன்னி பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கும் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கும் இடையில் நோயாளர்களையும் சுகாதார அதிகாரிகளையும் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை மிகவும் கவலையளிப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலகம் தெரிவித்தது.

தற்போதைய நிவாரண சேவைகள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: என்றுமில்லாதவாறு அரச கட்டுபாட்டு பிரதேசத்தை நோக்கி மக்கள் வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கு முடியுமான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதில் ஐ.சி.ஆர்.சி. உறுதியுடன் இருக்கின்றது. ஆயினும் கடந்த சில தினங்களாக வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்கள், நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை தடைப்படுத்தியுள்ளன.



Comments