தொடரும் எறிகணைத் தாக்குதல்களில் இன்றும் 48 பொதுமக்கள் பலி! 174 பொதுமக்கள் படுகாயம்!

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது சிறீலங்காப் படையினர் தொடர்ந்தும் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 174 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தளன்: இன்று காலை 8 மணியளவில் முல்லைத்தீவு மாத்தளன் மக்கள் குடிமனைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்: தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது இன்று மதியம் 12 மணியளவில் படையினர் நடத்திய பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களில் ஒரே குடுபந்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம்: சுதந்திரம் மக்கள் வீட்டுத்திட்ட குடிமனைகள் நோக்கி இன்று பிற்பகல் 4 மணியளவில் நடத்தப்பட்ட பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 66 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு: மூங்கிலாற்றுப் பகுதியில் சிறீலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டு: உடையார்கட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

வள்ளிபுனம்: இப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Comments