"பொன்னம்பலம் மருத்துவமனை" குண்டுவீசி அழிப்பு: 61 நோயாளர்கள் படுகொலை; நேற்றும் இன்றும் 126 தமிழர்கள் கோரப் படுகொலை; 238 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது சிறிலங்கா வான்படையின் "மிக்" ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வன்னி எங்கும் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 126 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 238 பேர் காயமடைந்துள்ளனர்.

"மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை"

புதுக்குடியிருப்பில் உள்ள "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குறிவைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளன.

இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது நடைபெற்ற வான் தாக்குதலின் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை சரிவரச் செய்ய முடியாது இருக்கின்றது.

ஆட்டிலெறி கொத்துக் குண்டு

சிறிலங்கா படையினர் தற்போது ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர்.

ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது - அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

தேவிபுரம்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது - அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக்கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன சிதைந்து சிதறிக் கிடக்கின்றன.

அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உயிரிழப்புக்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே பகுதியை குறிவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொத மக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதேவேளை, தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன் படி - அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் இப்போது உள்ளது.

அதேவேளை, முல்லைத்தீவு - இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அவற்றை நேரில் பார்த்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


Comments