ஒரு வாரகாலத்தில் வன்னியில் 733 மக்கள் பலி! 2615 பேர் படுகாயம் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வன்னியில் ஒரு வார காலத்துள் விமானப்படையினர் வீசிய குண்டுகளாலும் ஆட்லறி செல் தாக்குதல்களாலும் 733 அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டுள்ளனர். 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என த.தே.கூ பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனவரி 26ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துள் இலங்கை விமானப்படையினர் வீசிய குண்டுகளாலும் ஆட்லறி செல் தாக்குதல்களாலும் கொல்லப்பட்டுள்ளார்கள்.


கடந்த 26ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 302 பேர் கொல்லப்பட்டதுடன் 985 பேர் படுகாயமடைந்தனர்.

3ஆம் திகதி மாத்திரம் 5000 செல் வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பாரிய சேதத்துக்கு உள்ளானதுடன் அங்கு 53 பேர் கொல்லப்பட்டு 82 பேர் படுகாயமடைந்தனர். இதில் தாதியொருவரும் 11 நோயாளிகளும் அடங்குவர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் அங்கு கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்றும் அது இராணுவ இலக்கு என்றும் கூறுகின்றார். அப்படியே புலிகள் தான் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தாலும் கூட வைத்தியசாலைகள் யுத்த தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சர்வதேச பாதுகாப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது என்ற பொறுப்பு இருக்க வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளரின் கூற்றுப்படி பார்ப்பதென்றால் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீது புலிகள் தமது இலக்குகளாகக் கொண்டு தாக்குதலை மேற்கொள்வார்களேயானால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் பாலித்த கோஹன அவ்வாறு வைத்தியசாலையின் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவே இல்லை எனக் கூறுகிறார். இது எப்படிப்பட்ட கபட நோக்கு என்பது தெளிவாகின்றது.


வன்னியில் மூன்றரை இலட்சம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

வடக்கிலே கடத்தல், காணாமல் போதல், கொலை, கொள்ளை, ஊடகவியலாளர் படுகொலை, அச்சுறுத்தல் என விரோத செயல்கள் தலைதூக்கியுள்ளன. யாழ்ப்பாணத்திலே வீட்டுக்கு வீடு சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்ற அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கொண்டாடப்படுகின்ற சுதந்திரம், தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இருந்து பிறக்கின்ற சுதந்திரமாக அமையாது.

61ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இலங்கை உலகிலேயே வன்முறைகளில் முதலாவது நாடாகவும் மனித உரிமை மீறல்களில் உச்ச ஸ்தானத்தைப் பிடித்திருக்கின்ற நாடாகவும் அத்துடன் எல்லாவிதத்திலும் தோல்விகளை தழுவிக் கொண்டிருக்கின்ற நாடாகவும் திகழ்கின்றது எனத் தெரிவித்தார்.



Comments