இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி

இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி எடுத்துள்ளது ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ள மெக்ஸிக்கோ இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. பாதுகாப்புச் சபைஉறுப்பு நாடுகளின் பிரத்தியேக சந்திப்பின் போதே மெக்ஸிக்கோ இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

எனினும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் இடம்பெறாததை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மெக்ஸிக்கோ மறுபடி இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியை இவ்வாரம் மேற்கொள்ளலாம் என ஐ. நா.வட்டாரங்கள் தகவல்வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு வருவதற்கு மெக்ஸிக்கோ உட்பட ஏனைய சில நாடுகள் எடுக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசு அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லாது தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாக இறங்கியிருக்கின்றது. அதற்காக பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசுத் தரப்பினர் அவசர அவசரமாக கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாவது எதிர்ப்புத் தெரிவித்தால் அச்சபைக்குக் கொண்டுவரப்படும் ஏந்தவொரு விவகாரமும் பின்வாங்கப்பட்டுவிடும். என்பது குறிப்பிடத்தக்கது



Comments