ஈழத் தமிழர் விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் பா.ம.க. வெளிநடப்பு; ம.தி.மு.க., இ.கா. வெளியேற்றம்

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு, இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கடலூரில் தமிழ்வேந்தன் என்பவர் தீக்குளித்தது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன் உரையாற்றினார்.

தமிழகத்தில் முத்துக்குமார் முதல் சென்னை அமரேசன் வரை பலர் தங்களின் தேக்குமர உடல்களைத் தீக்குளித்துத் தியாகம் செய்து வருகின்றனர்.

கடலூரைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற இளைஞரும் தீக்குளித்து தியாகம் செய்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழக சட்டப்பேரவையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை'' என்று கூறினார்.

அப்போது நிதியமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, இதுபோன்ற விடயங்களைப் பொது விவாதத்தில் மட்டும்தான் எழுப்ப வேண்டும் என்றார்.

அமைச்சர் துரைமுருகனும் வேல்முருகன் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், தொடர்ந்து பேசிய வேல்முருகன், ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துவிட்டுதான் இது தொடர்பாக பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் பற்றி வேல்முருகன் பேச முயற்சித்தார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், கடலூர் இளைஞர் தீக்குளித்தது தொடர்பாக மட்டும்தான் உரையாற்ற வேண்டும். அதனைத் தவிர வேறு விடயங்கள் உரையாற்றக் கூடாது என்று கூறினார்.

அதன் பிறகும் வேல்முருகன் உரையாற்ற முயற்சித்தார். ஆனால் அதற்கு அனுமதிக்காத பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், கடலூர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஐயப்பனைப் பேச அழைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், வேல்முருகனை உரையாற்ற அனுமதிக்கும்படி வலியுறுத்தினர்.

ஆனால், அதனை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. இதனைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடியே பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இலங்கை
இனச்சிக்கல் குறித்து பேச முயற்சித்தனர். அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைக் கண்டித்து அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து பேரவைத் தலைவர் ஆணையின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அனைவரும் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேரவையில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Comments