இந்தியச் சதியை உடைத்தெறிவது, புலம்பெயர் மக்களின் வரலாற்றுப் பணி

கடந்த செவ்வாயன்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு, சிலமணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்பி விட்டார். அவர் கொழும்புத் தலைமையுடன் என்ன பேசினாரென்று பல ஊகங்கள் வெளியாகின்றன. ஆயினும் சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏற்படுத்தவிருக்கும் சந்திப்பில், எரிசக்தி குறித்த விவகாரம் பேசப்படவிருப்பதால், அதுபற்றி விவாதிக்க முகர்ஜி வருகை தந்தாரென உள் தகவல்கள் கூறுகின்றன.

சம்பூர் அனல்மின் நிலைய நிர்மாணிப்புத் தொடர்பான விடயங்களோடு, வட - கிழக்கு அபிவிருத்திக்கான முதலீடு பற்றியும், மேலதிக இராணுவ உதவிகள் குறித்தும் மகிந்தருடன் விவாதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.ஒரு கண்ணில் வெண்ணெயும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவும் வகையில் அமைந்திருந்தது முகர்ஜியின் பயணம்.

டெல்லியிலிருந்து புறப்பட முன்பாக,

ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில்,

விடுதலைப் புலிகள் மீது கருணை காட்டமாட்டோமென்று கூறுவதன் ஊடாக சிங்களத் தரப்பை மகிழ்வித்தும்,

கலைஞருடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறி, போர் நிறுத்தத்தை வலியுறுத்தப் போவதாக பாவனை காட்டி,

தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி உள்ளது இந்தியா.

அதேவேளை டெல்லியிலிருந்து புறப்பட்ட யுத்த டாங்கிகளைத் தாங்கிய இரயிலொன்று, ஈரோட்டைக் கடந்து, கேரளாவிலுள்ள கொச்சின் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. போரை நிறுத்த கொழும்பிற்கு முகர்ஜி புறப்பட்ட வேளையில், போரிற்கான கனரக ஆயுதங்கள், மாற்றுப் பாதையில் கொழுமபுத் துறைமுகத்திற்கு சென்றதை அவதானிக்கலாம்.

அத்தோடு 3000 இந்தியத் துருப்புக்கள், சிறீலங்காவிற்குச் சென்றதை ம.தி.மு.க செயலர் வைகோ கூறுகிறார். ஏற்கனவே ‘சார்க்’ மாநாட்டுக் கூட்டத்தோடு, பல இந்திய அதிகாரிகள் வருகை தந்து, பின்தளக் கட்டளை மையங்களில் தங்கிவிட்டதாகவும் செய்திகள் உண்டு.

களத்தில், ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ளும்போது, என்ன வகையாக தந்திரோபாயங்களைச் செய்ய வேண்டுமோ, அதையே விடுதலைப்புலிகள் மேற்கொள்வதாக ஊகித்தறியலாம்.

அதனை விளங்கிக் கொள்ளும் ஆழமான புரிதல் இல்லாமல், மேம்போக்கான கள நிலவரச் செய்திகளை, ‘பரபரப்பு’ கண்ணோட்டத்தில், வருகிற கிழமை வன்னியில் மாபெரும் போர் வெடிக்குமென்று உசுப்பேற்றும் காரியங்களும் நடைபெற்றதனைக் காணலாம்.

ஆயினும் கடந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் நீட்டிய நட்புக் கரத்தினை இந்தியா தட்டிவிட்ட உண்மைகள், யுத்த டாங்கிகள் வாயிலாக அம்பலமாகிறது.சிங்களத்தின் பேரினவாதக் கரங்களை, இந்தியா பற்றிப் பிடித்துள்ள விவகாரமே, யதார்த்த பூர்வமான விடயமாக தற்போது தென்படுகிறது.

தென்னாசியப் பிராந்தியத்தில், தமது நலன் காக்கப் போட்டியிடும் வல்லரசாளர்களின், ஆதிக்கக் களமாக சிறீலங்கா மாறியுள்ள உண்மைநிலை, 80 களின் ஆரம்ப பகுதியிலேயே வெளிப்பட ஆரம்பித்தது.

சிறீலங்காவில் அமெரிக்க ஊடுருவலைத் தடுக்க, ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயன்ற இந்தியா, விடுதலைப் புலிகளின் உறுதியான நிலைப்பாட்டினால், தடுமாறியது.அதேவேளை ‘சுதந்திர தமிழீழம்’ என்கிற இலட்சியத்தை, தமது நலனிற்காக, ஈழத் தமிழர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமென்கிற இந்திய எதிர்பார்ப்போடு, விடுதலைப் புலிகள் இணங்கவில்லை.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு, தமது பிராந்திய மேலாதிக்க கனவு நிஜமாகுமென்று இந்தியா விரும்பிய அதேவேளை, மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்பதை வரலாற்றுப் பட்டறிவினூடாகப் புலிகள் புரிந்து கொண்டார்கள்.

ஆகவே தமது ஆதிக்க நலனிற்கு எதிரான சக்திகளை அழிக்கும் முன்னெடுப்புக்களை இந்தியா மேற்கொண்டதில், ஆச்சரியப்படத்தக்க விடயங்கள் ஏதுமில்லை.50 வருட காலத்தில் சிங்களம் கிழித்தெறிந்த ஒப்பந்தங்களே, தமிழர் தலைமைக்கு, சில வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது.ஆனாலும் எந்த மேற்குலகம், சிறீலங்காவிற்குள் கால் பதிக்கக் கூடாதென இந்தியா விரும்பியதோ, அதே மேற்குலகு, நோர்வே அனுசரணையூடாக 2002 இல் நுழைந்தது.

மறுபடியும் தடுமாற்றமடைந்த இந்தியா, ஈழப்பிரச்சினையானது சர்வதேச மயமாவதைத் தடுக்க, சிறீலங்காவுடன் திரைமறைவில் உறவு கொள்ளத் தொடங்கியது.

இந்த சமாதான காலத்தில், விடுதலைப் புலிகளின் போராட்ட வலுவினைச் சிதைப்பதற்கு, மேற்குலகம் பல நகர்வுகளை மேற்கொண்டதெனலாம். 87 ஒப்பந்தத்தோடு, விடுதலைப் புலிகளை இராணுவ பலம் கொண்டு இந்தியா அழிக்க முற்பட்டது போன்று, சமாதான காலத்தில் தடைகள் விதித்து, இராஜதந்திரப் போரொன்றை கட்டவிழ்த்து விட்டது மேற்குலகம்.

இந்நிலையில் ஆட்சிபீடமேறிய சிங்களப் பேரினவாதம் கடும் போக்காளர்களுக்கு தமது நேசக் கரத்தினை நீட்டி, புலி அழிப்பு யுத்தத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்க ஆரம்பித்தது இந்தியா.

இத்தகைய மறைமுக இந்திய ஆதரவு, தற்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அதாவது விடுதலைப் புலிகளை அழிக்காவிட்டால், தமது நலன் முற்றாகச் சீர்குலைக்கப்படுமென்கிற பதட்டத்தால், களத்தில் நேரடியாகவே குதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளதெனலாம்.

புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் தீவிரமான பரப்புரைகளும், தொடர் போராட்டங்களும், வன்னி மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களும், மறுபடியும் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டு, தமது பிராந்திய ஆதிக்க பிடியைத் தளர்த்தி விடுமென இந்தியா அச்சமுறுகிறது.

அதாவது சிறீலங்காவின் இனப்பிரச்சினை, தனது பிடியிலிருந்து முற்றாக விலகிச் சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் விவகாரமாக மாறுதலடையக் கூடாதென்பதே இந்தியாவினதும், சிறீலங்காவினதும் பெருங்கவலை.

இந்த வாரம் பிரான்சின் தலைநகரில் நடைபெற்ற வீதிமறியல் போராட்டம், சர்வதேச பரப்புரையின் புதிய முற்போக்கான பரிமாணமொன்றினை சுட்டிக்காட்டுகிறது. போராட்ட படிநிலையின் வளர்ச்சி நிலை, கனடா தேசத்து மாணவர் போராட்டத்தில் வெளிப்படுகிறது. சுவிசிலும், ஜேர்மனியிலும், நோர்வேயிலும் போராட்டங்கள் விரிவடைகின்றன.

நீவில் மற்றும் கரிபட்டிமுறிப்பு பிரதேசங்களிலிருந்து வீசப்படும், இந்தியா வழங்கிய குறுந்தூர ஏவுகணைகள், சத்தமில்லாமல், வான்பரப்பை ஊடறுத்து, பாதுகாப்பு வலயத்துள் குவியும் மக்களை கொன்று குவிக்கிறது.
இன அழிப்புச் சிங்களத்தின் அராஜகச் செயல்களுக்கு, தமது மனிதத்துவத்தை இந்தியாவும் சர்வதேசமும் விலை பேசியுள்ளதாக விசனம் தெரிவிக்கிறார், வன்னியில் செயலாற்றும் மருத்துவர்.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும், பதுங்குகுழிக்குள் அடைக்கலம் தேடுவதை, ஐ.நா, செயலர் பான் கீ மூன் தெரிந்து வைத்துள்ளார்.

கொழும்பிற்கு எரிபொருள் விவகாரச் சுற்றுலா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர், மக்கள் மீது எறிகணை வீசாமல், புலிகளை அழிக்கும்படி அறிவுரை வேறு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பொதுகுழு கூட்டி, வருகிற பெப்ரவரி 15ம் திகதி, அடுத்த நடவடிக்கைக்கான தீர்மானம் மேற்கொள்ளப் போவதாக கலைஞர் கூறும் காலநீட்சித் தந்திரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அக்கால இடைவெளியில், இராணுவம் வன்னியை முழுமையாகக் கைப்பற்றினாலோ அல்லது விடுதலைப்புலிகள் பெருஞ் சமரை முன்னெடுத்து நிலங்களை மீட்டாலோ, போர்நிறுத்தம் என்கிற பேச்சு தேவையற்ற விடயமாகி விடுமென்று, கலைஞர் கணிப்பிடுகிறார்.

ஆகவே இந்திய நடுவண் அரசின் தந்திரத்தை உணர்ந்து கொள்ளும், ஆட்சியில் பங்கு வகிக்கும் கலைஞர், தமிழின அழிப்பிற்கெதிராகப் போராடப் புறப்படுவாரெனக் கற்பிதம் கொள்வது தவறானது.

தமிழக, புலம்பெயர் மக்களின் அரசியல் மயப்பட்ட எழுச்சிகளே, இந்திய மத்திய அரசின், ஏகபோக ஈழ பிரச்சினை குறித்த நிலைப்பாட்டை உடைத்தெறியும். அதேவேளை இந்தியாவின் வகிபாகம் களையப்படவேண்டிய தருணமும் இதுவே.

ஏனெனில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட அரசியல் தளத்தினை தக்க வைக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் மக்களிடமே உண்டு.


இப் போராட்ட நகர்வுகளிலிருந்து வெளிப்படும் சாதகமான பெறுபேறுகளே, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வடிவத்தையும் தீர்மானிக்கும்.சிங்களமும் எதிரிகளும் கூறுவது போன்று கெரில்லாவாக மாற வேண்டுமா?

அல்லது

தேசிய இராணுவமாக தொடர்ந்தும் இயங்க வேண்டுமா வென்பதை, விடுதலைப் புலிகளே தீர்மானிப்பார்கள்.மக்கள் போராட்ட அரசியலிற்கும், ஓட்டுப்பொறுக்கி அரசியலிற்குமுள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாதோர், எழுச்சி கொள்ளும் மக்களை குழப்பாமல் இருந்தாலே போதும்.


இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழின தேசிய விடுதலைப் போராட்டத்தை நசித்து, சிறீலங்காவை முழுமையாக தமது பிடிக்குள் கொண்டுவர எடுக்கும் முயற்சிகளின் இறுதி நகர்வாகவே, தற்போதைய நிலவரத்தை கணிக்கிறது.


இந்திராகாந்தி இன்று உயிரோடு இருந்திருந்தால், வங்காள தேசம்போல் தமிழீழத்தையும் பிரித்துக் கொடுத்திருப்பார் என்கிற கனவுக் கதைகளெல்லாம் வெறும் மயக்க சிந்தனை வடிவமாகும்.

இராஜீவ் உருவாக்கிய மாகாணசபையை ஏற்றிருந்தால், தமிழருக்கு விடிவு கிட்டியிருக்குமென நம்புவதும் மடமைத்தனம்.


தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக்கொடுப்பதல்ல இந்தியாவின் நோக்கமென்பதை இனியாவது எம்மக்கள் புரிந்துகொள்வார்களா?


கலைஞரோ, முகர்ஜியோ தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முன்வர மாட்டார்கள்.

அவர்கள் இந்திய ஆட்சி அதிகாரத்தின் தூண்கள் என்பதை அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அனைத்து தமிழக, ஈழமக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

சீனாவும் அமெரிக்காவும் சிறீலங்காவினுள் நுழைவதைத் தடுப்பதற்கு தமிழின அழிப்பையும், போராட்ட தலைமையின் சிதைவையும் இந்தியா தயவு தாட்சண்யமின்றி மேற்கொள்ளும்.

ஆகவே ஈழப் பிரச்சினையில் இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தையும், தன்னை மீறி வேறொருவர் இப்பிரச்சினையை தீர்க்க முடியாதென்கிற கருத்துவத்தையும், போராடும் மக்கள் உடைத்தெறிய வேண்டும்.

ஆனாலும் தென்னிலங்கையில், இந்தியாவிற்கு எதிரான சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதே, ஈழமக்களின் ஆதரவை இந்தியா வேண்டி நிற்கும் என்பது உண்மை.

அதுவரை அழிவினை எதிர்கொள்ளப் போகிறோமா?

அல்லது

ஆதிக்கக் கட்டுடைப்பை நிகழ்தப் போகிறோமாவென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.புலம்பெயர் மக்களின் தீவிர பரப்புரைப் பணியே, இவ்வடக்கு முறைகளை உடைத்தெறியும் சாத்தியங்களை உருவாக்கும்.

இதயச்சந்திரன்

ஈழமுரசு 31.01.2009



Comments