புதுக்குடியிருப்பு தாக்குதலில் புலிகளால் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவர் "புதினம்" செய்தியாளருடன் உரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த முதலாம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலின் போது படுகாயமடைந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டார்.

18 வயதான அஜித்குமார அன்டன் வில்வத்த என்ற இந்த படைத்தரப்பைச் சேர்ந்தவரிடம் "புதினம்" செய்தியாளர் நேற்று சனிக்கிழமை நேரடியாக உரையாடியுள்ளார்.

சிறிலங்கா தரைப்படையின் 59 ஆவது டிவிசனில், 3 ஆவது பிரிகேட்டின், 7 ஆவது கெமுனுவோச் பிரிவைச் சேர்ந்த ரி.ஏ.எஸ்.அஜித்குமார அன்டன் வில்வத்த (வயது 18) என அழைக்கப்படும் இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.09) விடுதலைப் புலிகளால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியைச் சோ்ந்த இவர், இரண்டரை மாதங்களுக்கு முன்னர் தான் தனது மாமானாரால் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும், இரண்டரை மாத பயிற்சி மட்டுமே முடித்த நிலையில் போர் முனைக்கு தான் அனுப்பபட்டதாகவும் அவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் தனது மாதச் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார்.

பயிற்சி முடிந்த பின்னர் தான் எங்கே கொண்டு செல்லப்படுகின்றேன் என்பது கூட தெரியாத நிலையில் - திடீரென புதுக்குடியிருப்பு களமுனையில் இறக்கப்பட்டதாகவும், இதுவே தனது முதலாவது சண்டைக்களமும் கூட எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதலை நடத்திய போது, தாக்குதலின் உக்கிரம் தாங்காது தானும், இன்னும் ஒன்பது படையினரும் தப்பியோடியதாகவும், அப்போது புலிகளின் தாக்குதலில் சிக்கி தான் காயமடைந்து விழுந்துவிட ஏனைய ஒன்பது படையினரும் தன்னைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

"காலில் காயம் ஏற்பட்டு ஓட முடியாது போன நிலையில் - தவழ்ந்து சென்று அருகில் இருந்த ஆறு ஒன்றுக்குள் நான் ஒளித்திருந்தேன். அப்பொழுது, தாக்குதலை நடத்திய வண்ணம் வந்த விடுதலைப் புலிகள் என்னை மீட்டெடுத்து, எனது கால் காயத்துக்கு அவர்களின் மருத்துவ சிகிச்சை பிரிவினர் மூலம் சிகிச்சை அளித்தனர்." என அவர் "புதினம்" செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் தொடர்பாக எமது செய்தியாளர் அவரிடம் கேட்ட போது, "விடுதலைப் புலிகள் மழை போல எறிகணைகளை பொழிந்து தாக்குதலை நடத்தினர். இதனால் எமது படையினருக்கு பெருமளவில் அழிவுகள் ஏற்பட்டன. புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை வந்த பின்பே நாம் பின்னாலே தப்பி ஓட முடிவு எடுத்தோம்" என அவர் தெரிவித்தார்.

கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள இவருக்கு விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்பில் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார மறுத்துள்ளதுடன் -

அங்கு பெருமளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் படையப் பொருட்களை விடுதலைப் புலிகளால் கைப்பற்றியுள்ளதாகவும் வெளிவந்த செய்திகளையும் அவர் மறுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகக்கது.

பிரச்சார நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகள் வெளியிடும் ஒரு கட்டுக்கதை எனவும் அவர் கூறியிருந்தார்.

Comments