தமிழகம் முழுவதும் முத்துக்குமாரின் அஸ்தி

தமிழகம் முழுவதும் முத்துக்குமாரின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.


இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ.தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், இயக்கத்தின் தலைவர்பழ.நெடுமாறன் உள்படபலரும் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத்தின்தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி, 4ஆம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. 90 சதவீதம் ஆதரவு இருந்தது. மக்கள் தானாகவே முன் வந்து முழு அடைப்பில் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்தார்கள். முழு அடைப்பு வெற்றிக்கு காரணமான அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வணிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னையில் மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரை கருப்பு கொடி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெறும். மேலும் இதேபோல் அனைத்து கிராமங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் என தமிழகம் முழுவதும் கறுப்பு கொடி பேரணி நடைபெறும். இந்த பேரணியில் அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பார்கள்.

இந்த பேரணியில் பங்கேற்போர் மற்ற அரசியல் கட்சிகள் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ, ஆட்சி பற்றியோ விமர்சிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் இந்த இயக்கத்தின் நோக்கம் பற்றி இவ்வியக்கத்தில் உள்ள தலைவர்கள் பேசுவார்கள். ஈழத்தமிழர்களை பாதுகாக்கக் கோரி தன் உயிரையே கொடுத்த வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரின் அஸ்தி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும்.

சென்னை, பூம்புகார், ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, பவானி முக்கூடல் உள்ளிட்ட 6 இடங்களில் முத்துக்குமாரின் அஸ்தி கரைக்கப்படும். இந்த 6 இடங்களுக்கும் செல்லும் வழியெங்கும் முத்துக்குமாரின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

Comments