ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி தி.மு.க. தொண்டர் இன்று தீக்குளிப்பு

இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்டு வரும் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

தரமணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர் சிவப்பிரகாசம் கிண்டியில் இன்று சனிக்கிழமை மாலை தீக்குளித்த நிகழ்வு
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர் ஜண்டா தெருவில் வாழ்ந்து வருபவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். 1999 இல் இவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியினர் இன்று சனிக்கிழமை நடத்திய மனித சங்கிலியில் பங்கேற்பதற்காக சிவப்பிரகாசம் தரமணியில் இருந்து கிண்டி சென்றார். கையில் ஒரு பையை வைத்திருந்த அவர், தமது பகுதியைச் சேர்ந்தவர்களுடன் இயல்பாக பேசிக்கொண்டு இருந்தார். மாலை நாளிதழ் ஒன்றை வாங்கி படித்தபடி இருந்தார்.

மனித சங்கிலி தொடங்கும் முன் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் திடீரென்று, தன் பைக்குள் மறைத்திருந்த புட்டியைத் திறந்து பெட்றோலை உடலில் ஊற்றினார். பின்னர் தீ வைத்தார். இதனால் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர், சிவப்பிரகாசத்தை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிற்பகல் 3:45 நிமிடத்துக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிண்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி மருத்துவம் அளிக்கப்பட்டதும் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு அங்கு உள்ள அவசரச மருத்துவப் பிரிவில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினர்.

இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த சிவப்பிரகாசம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் ஏற்கெனவே பொறுப்பு வகித்ததாக அவரின் மகன் சிவக்குமார் கண் கலங்கியபடியே கூறினார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடியே அமர்ந்திருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிவப்பிரகாசத்தைப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக சிவப்பிரகாசம் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறினார்.

இலங்கையில் கொடுமைக்கு ஆளாகும் தமிழர்களைக் காப்பாற்றவும், இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு போரை நிறுத்தவும் முதல்வர் கலைஞர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதனையொட்டி இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி சார்பில் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இளைஞர் அணியின் மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் பங்கேற்க தரமணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களோடு சிவப்பிரகாசம் கிண்டிக்கு வந்துள்ளார். கிண்டிக்கு வந்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அருகே நின்றார். திடீரென அவர் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் கலைஞருக்கு எழுதிய அந்த கடிதத்தில், இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். தமிழர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுதியுள்ளார். சிவப்பிரகாசம் தீக்குளித்தது வருந்தத்தக்கச் செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதேபோன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிவப்பிரகாசத்தைப் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் தரமணி பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்திருந்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக ஏற்கெனவே முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், புதுவண்ணாரப்பேட்டை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன் ஆகியோர் தமிழகத்தில் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இப்போது சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தீக்குளித்துள்ளார்.


Comments