வெளிச்சத்துக்கு வருகின்ற கோத்தபாயவின் பொய்கள்

வன்னியில் சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசத்துக்குள் இலட்சக்கணக்கான மக்கள் முடங்கிப் போயிருப்பதும்-
அங்கு வரலாறு காணாத மனிதப் பேரழிவுகளும், அவலங்களும் நிகழ்ந்து கொண்டிருப்பதும் உலகம் அறிந்த விடயம்.

சிறிய நிலப்பரப்புக்குள் பெருந்தொகையான மக்கள் போருக்குள் வாழும் நிலை ஒரு புறமும், தினமும் பீரங்கித் தாக்குதல்கள், வான் தாக்குதல்களால் கொல்லப்படுகின்ற அவலங்கள் இன்னொரு புறமும், சரியான உணவு, வசிப்பிடம், நித்திரையின்றி மக்கள் நடைப்பிணமாக வாழும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வன்னியில் ‘மனிதாபிமானப் போரை’ முடுக்கி விட்ட படைத்தரப்பும், அரசாங்கமும் அங்கு நிகழ்ந்து வருகின்ற மனிதப் பேரழிவுகள் தொடர்பாக- சர்வதேசத்தின் முன்பாகப் பதில் சொல்லும் நிலை வந்திருக்கிறதென்றே சொல்லலாம்.

இப்போது சர்வதேச ரீதியில் வன்னிப் படுகொலைகளுக்கு எதிராக- அங்கு நிகழும் அவலங்களைத் தடுக்கக் கோரி குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.
இந்தக்; கட்டத்தில் சர்வதேச ரீதியில் போரை நிறுத்துமாறு கோரும் அழுத்தங்கள் வந்து விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பது ஒன்றும் அச்சரியத்துக்குரியதல்ல.

இதன்காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் குறைந்தளவிலாள மக்களே தங்கியிருப்பதாகக் கூறும் புதியதொரு பிரசாரத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

குறைந்தளவிலான மக்களே அங்கு இருப்பதாகக் கூறிவந்துள்ள அரசாங்கம்- அவர்களும் கூட சாதாரண பொதுமக்கள் அல்ல- புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினர், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரே அதிகளவில் இருப்பதாகவும், அரசாங்க அமைச்சர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

இந்தவகையில் வன்னியில் தற்போதுள்ள மக்களை கிட்டத்தட்ட முழுப் புலிகளாகவோ அல்லது அரைப் புலிகளாகவோ தான் அரசாங்கமும் அதன் படைகளும் பார்க்கின்றன.

அதைவிட அங்கு குறைந்தளவிலான மக்களே வாழ்வதாக புதிய புள்ளிவிபரங்களைக் கொடுத்து அரசாங்கம் வெளியுலக நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அண்மையில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாடு ஒன்றில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவும், அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் வன்னிப்பகுதி மக்கள் தொடர்பான உண்மைகளை மூடி மறைக்க முற்பட்டனர்.

படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் புலிகள் மற்றும் அவர்களுக்குச் சார்பானவர்கள் கூறுவது போன்று, பெருந்தொகையில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

எத்தனையோ குளக்கட்டுகளைப் படையினர் பிடித்திருக்கின்ற போதும் அவற்றைப் பயன்படுத்தி மக்கள் விவசாயம் செய்ததற்கான தடயங்களே தென்படவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.

அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவோ- வன்னியில் புலிகள் மற்றும் அவர்களுக்கு சார்பானவர்கள் கூறுவது போன்று- நான்கரை இலட்சம் மக்கள் இல்லை என்று கூறியிருப்பதோடு சில புள்ளி விபரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

2002ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முல்லைத்தீவில் 208,000 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களில் 60000 பேர் கொழும்புக்கு வந்து விட்டனர்.

கணிசமானோர் வவுனியா, அனுராதபுரம் மற்றும் மத்திய மாகாணத்துக்குக் குடிபெயர்ந்து விட்டனர். வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர்.
இந்தவகையில் பார்க்கும் போது தற்போது முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களின் தொகை 89,000 பேர் மட்டுமே.

பெருந்தொகையில் இங்கு பொதுமக்கள் வாழ்வதாகவும், மனிதாபிமானப் பேரவலங்கள் நிகழ்வதாகவும் புலிகள் வெளிநாடுகளில் பிரசாரம் செய்கின்றனர். இதில உண்மை கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கடந்த 6ம் திகதி இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் மற்றொரு புள்ளிவிபரத்தையும் கொடுத்திருந்தார்.

2008ம் ஆண்டில் 1,704 பேரும், 2009 ஜனவரியில் 3,848 பேரும், பெப்ரவரி 6ம் திகதி வரையில் 4,109 பேரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஆக வன்னியில இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவர்கள் பெப்ரவரி 6ம் திகதி வரையில்- மொத்தம் 9,661பேர் மட்டுமே.
இதற்குப் பின்னர் சில நாட்களில் சுமார் 20,000 பேர் வரையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றிருக்கின்றனர்.

இந்தவகையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இப்பத்தி எழுதப்படும் வரையில் மொத்தம் 30,000 பேர் வரையிலேயே சென்றிருக்கின்றனர்.

அதேவேளை கடந்த 11ம் திகதி உடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, இதுவரை 35,000 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில் இப்போது வன்னியில் போருக்குள் வாழுகின்ற மக்களின் மொத்த எண்ணிக்கை என்ன? என்று பார்க்கலாம்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அண்மையில் பிபிசிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது- அங்கு 470,000 மக்கள் வாழ்வதாகக் கூறியிருந்தார். அவரது கணக்கு உத்தியோகபூர்வமானது.

ஆனால் அரசாங்கம் சொல்கிறது- இந்தக் கணக்கெல்லாம் புலிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தயாரிக்கப்பட்டது என்று.

அது ஒரு புறத்தில் இருக்க, இப்போது அரசாங்கம் கொடுத்திருக்கின்ற கணக்குகளை வைத்துக் கொண்டும்- வன்னியில் வாழ்ந்த மக்கள் தொடர்பான அடிப்படையான புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டும்- அரசாங்கத்தின் கணக்குகளின் மீதுள்ள பொய்மையை ஆராய்வோம்.

முல்லைத்தீவில் இப்போது வாழ்கின்ற மக்கள் வெறுமனே முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்குத் தெரியாமல் இருக்காது.

வன்னியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், அதாவது- மன்னாரிலும், வவுனியாவிலும் சண்டைகள் தொடங்கிய போது ஓடி ஒதுங்கத் தொடங்கிய மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான சென்றனர்.

மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதி, வவுனியாவின் ஒரு பகுதி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முழுமையானளவு மக்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பகுதி மக்கள் என்று வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட மக்களுமே வன்னிக்குள் முடங்கிப் போயிருக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு மற்றும் பளைப் பிரதேச மக்களும், 1995ம் ஆண்டில் வன்னியில் குடியேறிய மக்களும் அங்கேயே இருக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2006ம் ஆண்டு கணக்குகளின் படி 16,395பேர் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களில பாதியளவிலானோர் புலிகள் கட்டுப்பாட்டுப ;பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இவர்களோடு பளைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களையும், குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து இடம்பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் குறைந்தது 15,000 வரையான யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வன்னியில் வாழ்ந்து வந்தனர்.இந்தத் தொகை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறைவதற்கு வாய்ப்பில்லை.

அதைவிட மன்னாரின் மாந்தை மேற்கு, மடு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கே சென்றிருந்தனர்.

மடுப் பிரதேச செயலர் பிரிவில் 4,498 பேரும், மாந்தை மேற்கில் 26,741 பேரும், நானாட்டானில் 21,200 பேரும் வசித்ததாக அரசாங்க புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்தவகையில் இந்த மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மொத்த மக்கள் தொகை 52,431பேர் ஆகும்,

இவர்களில் குறைந்தது 50 வீதமானோர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர் என்று வைத்துக் கொண்டாலும் அது 25,000ஐ விடவும் அதிகமாகும்.

அடுத்து வவனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு 15,931பேர் வாழ்ந்தனர்.

அதைவிட, ஓமந்தை இராணுவ முன்னரங்கிற்கு வெளியே வாழ்ந்த மக்கள் குறைந்தது 10,000 பேராவது புலிகளின் பிரதேசத்துக்குள் சென்றிருக்கின்றனர்.
இந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25,000 பேர் வரை தற்போதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வசிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 100 வீதமான மக்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கே சென்றனர். 2007ம் ஆண்டில் கிளிநொச்சியின் மக்கள் தொகை 195,812ஆகும்.

அதைவிட 2007இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 220,311பேர் வசித்திருக்கிறார்கள். இவையனைத்துமே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்குகளில் உள்ள விபரங்கள்.

இதைவிட திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் கணிசமானளவில் இங்கு வசிக்கின்றனர்.

இந்த வகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 65 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 220,311பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 195,812 பேருமாக வன்னியன் மொத்த சனத்தொகை 481,123ஐத் தொடுகிறது.

இது முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கொடுத்திருந்த 470,000 என்ற கணக்கை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில பிரதேசங்களின் குத்துமதிப்பான தொகையே குறிப்பிடப்பட்டதால் இந்த சிறு வழு ஏற்படச் சாத்தியம் உள்ளது.
ஆக வன்னிக்குள் இப்போது 470,000 இற்கும் அதிகமான மக்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது.

இங்கு காட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் 2007ம் ஆண்டு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாகத் தயாரிக்கப்பட்டவையே.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கூறியது போன்று 2002ம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 208,000 மக்கள் வசிக்கவில்லை என்பதும் முக்கியமானது.

அப்போது மாவட்டத்தின் சனத்தொகை 144,959 தான். இது வடமாகாண சபையின் புள்ளிவிபரங்களில் பார்த்து எவரும் உறுதிசெய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்- 2002ம் ஆண்டுக்குப் பின்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த 60,000 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று தற்போது கொழும்பில் வசிக்கிறார்கள் என்று. அதுவும் அப்பட்டமான பொய்.

கடந்த வருடம் செப்ரெம்பர் 21ம் திகதி, மேல் மாகாணத்தில் வாழும் மக்களை அரசாங்கம் கணக்கெடுத்தது நினைவிருக்கலாம்.

இந்தக் கணக்கெடுப்பில் வடமாகாணத்தில் இருந்து மேல் மாகாணத்துக்கு 2003ம் ஆண்டுக்குப் பின்னர் குடிபெயர்ந்த மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த மொத்தம் 37,037 பேர் மட்டுமே மேல் மாகாணத்தில் வசிப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் முல்லைத்தீவைச் சேர்ந்த 60,000 பேர் கொழும்பில் வசிப்பதாக கோத்தபாய ராஜபக்ஸ கூறியிருப்பது அவர் எந்தளவக்கு உண்மைக்கு வெளியே நிற்கிறார் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது.

பாதுகாப்பு செயலாளர் கொடுத்த விபரங்களை வைத்து ஒரு கணக்குப் போடுவோம்.

கொழும்புக்கு 60,000 பேரும், இப்போது 35,000 பேரும் வேறு பகுதிகளுக்கு ஒரு 10,000பேரும் இடம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர் என்று வைத்து கொண்டால் கூட, வன்னியில் இப்போது வாழும் மக்கள தொகை 365,000 இற்கும் அதிகமாகவே இருக்கும்.

365,000 என்ற மக்கள் தொகைக் கணக்குக்கும் கோத்தபாயவின் 89,000 என்ற கணக்குக்கும் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது.

அரசாங்கம பொய்யானதும் போலியானதுமான பிரசாரங்கள், புள்ளிவிபரங்களின் மூலம் வன்னிக்குள் முடங்கிப் போயிருக்கின்ற மக்களின் அவலங்களை மறைத்து- அந்த மக்களை ஆயுதபாணிகளாக-பயங்கரவாதிகளாக உலகின் முன்பாக அறிமுகப்படுத்த முற்படுகிறது.

ஆனால் அரசாங்கம் வைத்திருக்கின்ற உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை எடுத்து ஆய்வு செய்யும் உலக நாடுகளுக்கு இந்த உண்மைகள் விரைவிலேயே புரிந்து விடும் என்ற உண்மை அரசாங்கத்துக்கு தெரியாது போய்விட்டது.


Comments