வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றம் : அரசின் திட்டமிட்ட நடவடிக்கை

வன்னியில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டுள்ளமை சிறீலங்கா அரசின் இன அழிப்பிற்கான திட்டமிட்ட நடவடிக்கை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் பணியாற்றிய அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் சிறீலங்கா அரசினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.

ஆனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்களும், மற்றும் கரிதாஸ் போன்ற ஒரு சில மனிதநேய அமைப்புக்களின் சில பணியாளர்களும் அங்கு தொடர்ந்தும் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாத்தளன் பகுதியில் இருந்து கப்பலில் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள படுகாயமடைந்தோருடன் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களையும் திருகோணமலைக்கு வருமாறு சிறீலங்கா அரசு அழைத்துள்ளது.

இதன்மூலம் வன்னியில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை வெளியுலகுக்கு தெரியாது தடுக்க முடியும் என சிறீலங்கா அரசு எண்ணுகின்றது.

அண்மையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது ஐந்து தடவைகளுக்கு மேல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் பற்றிய தகவலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா அரசுக்கான கண்டனங்கள் எழுந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சிறீலங்கா படையினரால் விசுவமடு இடைத்தங்கல் முகாமில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அந்தப் பழி விடுதலைப் புலிகள் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5:00 மணியளவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின இரண்டு பிரதிநிதிகளும் வன்னியில் இருந்து சிறீலங்கா அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளதால், அரச படைகளால் கொல்லப்படும் மக்களின் தொகை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும், அவை வெளியுலகுக்கு தெரியாது மறைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையால் வன்னியில் மக்களின் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் வன்னிக்கு மீள அழைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தம் புலம்பெயர் தமிழ் மக்களால் அனைத்துலக மட்டத்தில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் வன்னியிலுள்ள மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிறீலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கொழும்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள், பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments