இந்தியாவும் பாகிஸ்தானும் கைகோர்க்கும் களமுனை

புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்றுவதுடன் போர் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்துக்களை அரசாங்கம் முதன்மைப்படுத்தி வருவதுடன், அதற்கான படை நடவடிக்கையினையும் தீவிரப்படுத்தி வருகின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட நடவடிக்கை படையணி 8 இந்த வாரம் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து தற்போது புதுக்குடியிருப்பை கைப்பற்றும் நடவடிக்கைகளில் 9 டிவிசன்களும், கவசத்தாக்குதல் படையணியும் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக அதீத சுடுவலுவையும், வான் தாக்குதலையும் அரசு தீவிரப்படுத்தி வருவது அங்குள்ள மக்களை கடுமையாக பாதித்து வருகின்றது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து கடந்த புதன்கிழமை வரையிலும் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களினால் 1500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 4100 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதும் அவர்களை பராமரிப்பதும் மிகவும் சிரமமான நிலையை அங்கு தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடியான நிலைமைகளினால் அதிகளவான காயமடைந்த மக்கள் இறப்பதுடன், பலர் அவயவங்களையும் இழந்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியான நிலையை தணிப்பதற்கு அனைத்துலகத்தின் எந்த ஒரு நாடோ அல்லது அமைப்போ காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்களால் தெரிவிக்கப்படும் வெறும் கவலைகள் இந்த கொடூரமான போரை நிறுத்தப்போவதில்லை. இந்த போருக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கத்தவறும் ஒவ்வொரு கணமும் பல பத்து உயிர்கள் வன்னி களமுனைகளில் இழக்கப்படுகின்றன.

கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பின் தென் பகுதியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில் படைத்தரப்பு மேற்கொண்டுவரும் முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் எதிர்த்தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் 57 மற்றும் 59 ஆவது டிவிசன்களின் நடவடிக்கைகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலையை அதாவது தற்காப்பு நிலையை அடைந்துள்ளதுடன் அந்த இடங்களுக்கு 53 மற்றும் நடவடிக்கை படையணி 8 என்பன பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய களமுனை ஒழுங்கில் புதுக்குடியிருப்புக்கு தெற்காக 59 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களும், அதற்கு அப்பால் நடவடிக்கை படையணி எட்டு அதற்கு வடக்குபுறமாக 53 ஆவது படையணியும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு தெற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த படையணிகளுக்கு வடக்காக நடவடிக்கை படையணி 4, நடவடிக்கை படையணி 4 என்பன இணைந்து முன்னைய பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி நகர்வில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கு அப்பால் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பின் மேற்குப்புற எல்லைகளில் நிலைகொண்டிருந்த 57 ஆவது படையணியின் இடத்திற்கு நடவடிக்கை படையணி 3 நகர்த்தப்பட்டுள்ளது. 57 ஆவது படையணியில் இரண்டு பிரிகேட்டுக்களே தற்போது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அவை 58 ஆவது படையணியின் சில பகுதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. சாளைப்பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்வில் ஈடுபட்டுவருகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை 58 ஆவது படையணியின் இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்ட், 11 ஆவது ஸ்ரீலங்கா இலகுகாலாட்படை பற்றாலியன், 10 ஆவது ஸ்ரீலங்கா இலகுகாலாட்படை பற்றாலியன், 7 ஆவது சிங்க றெஜிமென்ட பற்றலியன், 12 ஆவது கெமுனுவோச், 8 ஆவது கெமுனுவோச் என்பன புதுக்குடியிருப்புக்கு மேற்குப்புறம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கடுமையான மோதல் வெடித்திருந்தது.

இராணுவத்திற்கு உதவியாக கவசத்தாக்குதல் படையணியும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. கவசத்தாக்குதல் வாகனங்களின் கனரக பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளுடன் செறிவான எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணை தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மோதல்கள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பை சுற்றி இரு வளையங்களாக பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதுடன், படையினாரின் நிலைகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது படையணியின் 6 ஆவது கெமுனுவோச் பற்றலியன், 10 ஆவது சிறீலங்கா இலகுகாலாட்படை பற்றாலியன் என்பன புதுக்குடியிருப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் சாளை பகுதிக்கு மேற்குப்புறம் உள்ள அம்பவான்பொக்கணை பகுதியை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சமர்களில் இராணுவம் கனரக ஆயுதங்களை அதிகம் பயன்படுத்துவதை தொடர்ந்து விடுதலைப்புலிகளும் கனரக ஆயுதங்களின் பாவனையை அதிகரித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தமது கவசத்தாக்குதல் வாகனங்களில் 14.5 மி.மீ கனரக இயந்திரத்துப்பாக்கிகளை பொருத்தியுள்ளதுடன், 23 மி.மீ மற்றும் 30 மி.மீ பீரங்கிகளை வாகனங்கள் மற்றும் இலகுவாக நகர்த்தும் பொறிகளில் பொருத்தி களமுனைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற வலிந்த தாக்குதலிலும் விடுதலைப்புலிகள் இத்தகைய கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படையணிகளை புதிதாக பயன்படுத்தி வருவதை தொடர்ந்து இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட தாங்கி எதிர்ப்பு ஏவகணைகளை அதிகளவில் புதுக்குடியிருப்பு களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளது.

பக்தர் சிஹான் (ஆச்டுtச்ணூ குடடிடுச்ண அணtடிகூச்ணடு எதடிஞீஞுஞீ Mடிண்ண்டிடூஞு) எனப்படும் இந்த கவச எதிர்ப்பு ஏவுகணைகள் சீனாவின் எச்ஜே8 (ர்து8) கவச எதிர்ப்பு ஏவகணையின் பிரதி வடிவமாகும். இந்த வகை ஏவுகணைகளை சீனாவின் அனுமதியுடன் பாகிஸ்தான் 1997 களில் வெற்றிகரமாக உற்பத்தி செய்து பரிசோதித்திருந்தது. 3000 மீ. தூரவீச்சுக்கொண்ட இந்த ஏவுகணை 600 மி.மீ தடிப்புள்ள கவசத்தகடுகளை ஊடுருவிச் சென்று வெடிக்கவல்லது.

இலங்கை இராணுவத்தை பொறுத்தவரையில் அதிக படை வலு மற்றும் அதிக ஆயுதவலு போன்றவற்றை நம்பியே இந்த படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. எனவே புதிய நவீன ஆயுதங்கள் பலவற்றை இந்த படை நடவடிக்கையில் அது பயன்படுத்தியும் வருகின்றது. இலங்கை அரசின் இந்த ஆயுத தேவைகளை பாகிஸ்தான் ஈடுசெய்து வருவதுடன், இலங்கைப் படையினருக்கான தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு உதவிகளையும், இராஜதந்திர ஆதரவினையும் இந்தியா வழங்கி வருகின்றது.

இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் என்பது எல்லாம் தற்போது வலுவிழந்து போன வாதங்கள். தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இந்தியாவும் பாகிஸ்தானும் கைகோர்த்து செயற்படுவது பல தடவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது தமிழ் மக்களை நசுக்குவதற்கு இந்திய மத்திய அரசு பாகிஸ்தானுடன் கூட்டு சேரவும் தயங்காது என்பது இதன் மூலம் தெளிவானது. இந்திய மத்திய அரசின் இந்த அச்சுறுத்தல்கள் வருங்காலத்தில் தமிழகத்திற்கும் உண்டு.

தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ள ஒரே பலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் உளவுறுதியும் தான்.

படை வளங்களுக்கு அப்பால் போரியல் உத்திகள் புதிய களமுனைகளின் உருவாக்கம் என்பன மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. சமச்சீரற்ற களமுனைகளில் இந்த உத்திகள் முக்கிய பங்குவகிப்பதுடன், பல களமுனைகளில் பாரிய மாற்றங்களை முன்னர் ஏற்படுதியதையும் நாம் மறந்துவிட முடியாது.

- வேல்ஸிலிருந்து அருஷ்


Comments