சொல்லை விட்டு செயலில் செய்து காட்ட வேண்டிய தமிழக முதல்வர்

வேலிக்கு ஓணான் சாட்சி" என்பார்கள். அதுபோல ஈழத் தமிழருக்கு ஆதரவாகத்தாம் முழு அளவில் செயற்படுகின்றார் என்பதைத் தமிழ் மக்களுக்குக் காட்டுவதற்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரு சாட்சியை அழைத்திருக்கின்றார்.

ஈழத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படும் எஸ். ஜே.வி.செல்வநாயகத்தின் மகனான சந்திரகாசனையே அவர் தமது ஈழத் தமிழர் ஆதரவுப் பணிக்கு நற்சான்றிதழ் வழங்கும் பெரியவராகமுன்னிலைப்படுத்தியிருக்கின்றார்.

"தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கைச் சிங்கள அரசு ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கின்றது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது" என்று தமக்கு சந்திரகாசன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் எனத் தெரிவித்து, தமது பணிச் சிறப்புக்கு ஆதாரம் தரமுயல்கிறார் தமிழக முதல்வர்.

இடம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்காக இந்தியாவில் சந்திரகாசன் ஆற்றும் சேவை மதிப்புக்குரியது. ஆனால் ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வழித்தடத்தில் தந்தை செல்வா போன்று விதந்துரைக்கப்பட்டவர் அல்லர் சந்திரகாசன் .

ஆகவே, இவ்விடயத்தில் சந்திரகாசனின் கடித வாசகங்களைத் தமிழக முதல்வர் முன்னிறுத்துகின்றமை "வேலிக்கு ஓணான் சாட்சியாம்" என்பது போன்றதுதான்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்திகளை வெளிப்படையாகவே கடுமையாக எதிர்க்கும் ஜெயலிதா போன்றோர் இன்று தமிழக முதல்வர் கதிரையில் அமர்ந்திருந்தால், கொழும்பின் இனவழிப்பு நடவடிக்கைக்கு அது ஊக்க மளிப்பதாக இருந்திருக்கும் என்று ஊகிப்பதில் தப்பில்லை.

ஆனால், உலகத் தமிழினத்தின் தலைவர் என்ற மகுடத்தைத் தமக்குத் தாமே சூட்டியுள்ள கலைஞர் கருணா நிதியிடம் தமிழக மக்கள் தமது ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கையில், ஈழத் தமிழினத்துக்காக ஆற்றவேண்டிய தமது கடப்பாடுகளையும், பொறுப்புக்களையும் நிறை வேற்றாமல் தப்புவதற்கு, இந்தப் பதவியில் வேறுயாரும் இருந்திருந்தால் இந்தளவுக்குச் செய்திருக்கமாட்டார்கள் என்று விளக்கம் வியாக்கியானம்கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல; அது நியாயமும் அல்ல.

இலங்கையில் சிங்களத்தின் இராணுவ வெறித்தீவிரத்தில் பேரவலப்பட்டு நிற்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதில் தமிழகம் ஒன்றுபடவில்லையே என்று குறிப்பிட்டு அதற்காக இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழக முதல்வர்

அந்த ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து ஆற்ற வேண்டிய தமது கடப்பாட்டைஅரசியல் சுயலாப சிந்தனைகள் காரணமாகநிறைவு செய்யாமல், அடக்கி வாசித்துக் கொண்டு,

அந்த ஈழத் தமிழர்கள் தமக்குள் முரண்படாமல் ஒற்றுமைப்பட்டுப் போராடியிருந்தால் இந்த நிலைமை இன்று வந்திருக்காது என்று அடிக்கடி குதர்க்கம் செய்ய முயல்வது அபத்தமாகும்.

ஜெயலலிதாவின் அ.தி.மு.க.கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ளது வைகோவின் ம.தி.மு.கழகம். ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவின் பாதையைத் துறந்து நியாயத்தின் பக்கம் நிற்கின்றார் வைகோ.

அதுபோலவே, டாக்டர் இராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய மத்திய அரசுக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. ஆனால் ஈழத் தமிழர் விவகாரத்தில் அக்கட்சி மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வெளியில் வந்து தனது பக்கக்கருத்தை நியாயத்தை வெளிப்படையாக உரைத்து உணர்த்திச் செயற்படுகின்றது.

அந்த வகையில் தாமும் ஈழத்தமிழர்களுக்காக உளசுத்தியோடுமும், நியாயத்தோடும் செயற்படுகின்றாரா, தமது கட்சியான தி.மு.கவையும், தமது தலைமையிலான தமிழக அரசையும் இவ்விடயத்தில் நீதியான வழியில் நெறிப் படுத்துகின்றாரா என்பன போன்ற கேள்விகளைத் தமிழக முதல்வர் கருணாநிதி தமது மனச்சாட்சியை நோக்கித் தாமே எழுப்ப வேண்டும்.

உண்ணாவிரதங்கள், வழி மறிப்புகள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் போன்றவை தமிழக மக்களின் உணர்வு நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவைதான்.

அதிகாரத்தில் இல்லாத தரப்புகள், மக்களின் கருத்தை ஆட்சியாளர்களுக்கும் உலகுக்கும் எடுத்தியம்ப இந்தப் போராட்ட வடிவங்கள் நன்கு உதவும்.

ஆனால் ஆட்சியில் இருப்போருக்கு இதற்கு அப்பாலும் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரங்கள், வழிமுறைகள் உள்ளன என்பதை நாம் தமிழக முதல்வருக்குச் சுட்டிக் காட்டித்தான் அவருக்குத் தெரியவேண்டும் என்பதல்ல.

பேரழிவில் சிக்கி நிற்கும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் இந்திய மத்திய அரசு மெத்தனமாக மட்டும் இருக்க வில்லை. ஈழத் தமிழர் தலையில் "மொத்தென" போடுவதற்கு கொழும்புடன் சேர்ந்தும் பணியாற்றுகின்றது என்பதும் பரகசியம்.

அத்தகைய இந்திய மத்திய அரசை அசரவைக்கும் அதிரவைக்கும் வலுவுடன்தான் தமிழக முதல்வர் இன்று உள்ளார் என்பதும் தெரிந்த விடயம்தான்.
அதனைச் சரிவர முன்னெடுப்பதற்கான ஆதரவைத் திரட்டி, விடயங்களை நகர்த்துவது அவரின் இலக்காக இருக்க வேண்டும்.

இவ்விடயத்தில் தமிழகத்தில் உள்ள நிழல்களோடு பொருதுவதை விடுத்து, புதுடில்லியில் உள்ள நிஜத்தோடு மோத அவர் முன்வரவேண்டும்.

நடிப்பை விடுத்து துடிப்போடு செயற்பட கலைஞர் முன்வருவாரானால் இவ்விட யத்தில் உரியதை சாதிப்பது அவருக்கு ஒன்றும் கஷ்டமான விடயமே அல்ல.

ஈழத் தமிழர்கள் சார்பில் கலைஞரிடம் ஒரு பணிவான வேண்டுகோள்!

அழிந்து வரும் ஈழத் தமிழினத்தைத் தூக்கி நிறுத்தி,

அவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுத்திட தங்களுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் இது.

இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி உலகத் தமிழினத்தின் தலைவராக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.

அல்லது சரித்திரம் தந்த சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டு ஈழத் தமிழினத்தை நட்டாற்றில் தவிக்க விட்ட தவறுக்காக வரலாற்றுக் குப்பை கூடைக்குள் உங்கள் பெயர் வீசப்படுவது தவிர்க்க முடியாததாகும்.



Comments