படைத்தரப்பின் போர் நிகழ்ச்சி நிரல்: குழப்பியடித்த புலிகளின் தாக்குதல்!

alt
altவன்னிக் களத்தில் புலிகளை புதுக்குடியிருப்பைச் சுற்றிய சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவான குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்குவதில் வெற்றி கண்டிருக்கிறது இராணுவம்.அதேவேளை, இராணுவத்தினால் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் போரை நடத்திச் செல்ல முடியாத வகையில் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் வீரியம் மிக்கதாக இருப்பதையும் காணமுடிகிறது.


புலிகளை அழிப்பதற்கு அரச தரப்பில் பெப்ரவரி 7 ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதிகள் முன்னர் நிர்ணயிக்கப் பட்டிருந்தன.இந்தக் காலத்துக்குள் புலிகளை முற்றாக அழித்து, வன்னி முழுவதையும் கைப்பற்றுவோம் என்றும் புலிகளின் தலைவர்களைப் பிடிப்போம் என்றும் அரசாங்கம் கூறி வந்தது.இப்போது அப்படியான பேச்சுக்கள், வீர வசனங்கள் எதையும் அரச தரப்பில் இருந்து காணவில்லை.இதற்குக் காரணம் புலிகள் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்புக்குத் தெற்கே நடத்திய பாரிய வலிந்த தாக்குதல் தான்.

படைத்தரப்பு பெப்ரவரி 04 ஆம் திகதி புதுக்குடியிருப்பைக் கைப்பற்ற ஒரு பாரிய திட்டத்தை வகுத்து, அந்தத் தாக்குதலுக்குத் தேவையான வளங்களை ஒன்று குவித்திருந்த போது தான், புலிகளின் பாய்ச்சல் இடம்பெற்றிருந்தது.
பிரிகேடியர் ஜெயந்த குணரட்ணவைத் தளபதியாகக் கொண்ட 59-3 ஆவது பிரிகேட்டை இந்தத் தாக்குதல் பெரிதும் சின்னா பின்னமாக்கி விட்டதென்றே சொல்லலாம்.

59 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்தவின் பணிப்பின் பேரில் முன்னரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆவது கெமுனுவோச், 9 ஆவது சிங்கப் படைப்பிரிவு, 15 ஆவது இலகு காலாற்படை என்று இராணுவத்தின் 3 பற்றாலியன்களை பின் தளங்களில் இருந்து துண்டித்துப் புலிகள் இந்த ஊடறுப்புச் சமரை நடத்தியிருந்தனர்.நந்திக் கடலின் ஆழம் குறைந்த பகுதிகள் வழியாக ஊடுருவிய புலிகளின் அணிகள் வற்றாப்பளையிலும், கேப்பா புலவிலும் தரையிறங்கி பல குழுக்களாகப் பிரிந்து சென்றன.

வாய்ப்பான இடங்களில் நிலையெடுத்த பின்னர், 3 முனைகளில் இருந்து, முன்னரங்கிலும் பின்புலத்திலும் புலிகளின் படையணிகள் தாக்குதலைத் தொடங்கின.

புலிகளின் வழக்கமான பாணியை விட வித்தியாசமான தந்திரோபாயங்களைக் கையாண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் போது உள்ளே ஊடுருவியிருந்த கொமாண்டோ அணிகளால் படையினரின் டாங்கிகள், துருப்புக் காவிகள், பஸ்கள், ட்ரக்குகள், ட்ரக்டர்கள் என்று பெருமளவு வாகனங்கள் தாக்கி அழிக்கப் பட்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதல் களத்தில் படைத் தரப்பின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கிப் போயிருந்தன.

சண்டையில் கொல்லப்பட்ட படையினர், காணாமற்போன படையினர் என்று நூற்றுக் கணக்கில் பட்டியல் நீண்டிருக்கிறது. ஆனால், சரியான புள்ளிவிபரங்களள வெளியிட இரண்டு தரப்பினருமே தவறியுள்ளனர்.சண்டையின் தீவிரம் காரணமாக, புலிகளின் வலிந்த தாக்குதல்களை எதிர்பார்த்து, பின் களத்தில் நிறுத்தப்பட்டிருந்த 53 ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட் உதவிக்கு அழைக்கப் பட்டது.

விசேட படைப்பிரிவின் இரண்டு யுனிட்களும் கொமாண்டோ பற்றாலியனின் ஒரு கொம்பனியும் புதுக்குடியிருப்புக் களத்துக்கு அனுப்பப் பட்டன.ஆனாலும், அவர்களால் புலிகளிடம் இழந்த தமது முன்னரங்கைக் கைப்பற்றவோ, பழைய நிலைகளை மீளமைக்கவோ முடியாது போனது.இதனால படையினர் உதவிக்கு அனுப்பட்ட துருப்புகளின் துணையோடு கேப்பா புலவு, மன்னாகண்டலுக்குத் தெற்குப் பகுதிகளில், பழைய நிலைகளில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் பின்புறமாகப் புதிய நிலைகளை அமைக்க வேண்டிய நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது.புலிகளின் இந்தத் தாக்குதல்கள் 72 மணித்தியாலங்களாகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றிருக்கிறது.
இதில் புலிகள் பெருந்தொகையான மோட்டார்கள், ஷெல்கள், துப்பாக்கி ரவைகள் என்பனவற்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

புலிகளின் கடல்வழி விநியோகங்களை மட்டுப்படுத்தி விட்டதாகக் கூறும் படைத்தரப்பே அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஷெல்களையும், மில்லியன் கணக்கான ரவைகளையும் சண்டைக்காக வழங்கிவிட்டுப் போயிருக்கிறது.புலிகளின் இந்தப் பாய்ச்சலின் காரணமாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நடவடிக்கைப் பணியகத்தில் 3 நாட்கள் இரவு பகலாகத் தங்கயிருந்து சண்டையை நேரடியாக வழிநடத்த வேண்டியிருந்தது.

அது மட்டுமன்றி 57 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 53 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்ண, 64 ஆவது டிவிசன் தளபதி கேணல் நிசாந்த வன்னியாராச்சி ஆகியோர் 59 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்தவுடன் இணைந்தே இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தில் இன்னமும் 700 பேர் மட்டுமே இருப்பதாகப் படைத்தரப்பு கூறிக் கொண்டிருந்ததால் புலிகள் 72 மணி நேரமாகத் தொடச்சியாக நடத்திய பாரிய தாக்குதல் பற்றி படைதரப்பினால் வெளியே சொல்ல முடியாது போனது.

இந்தச் சண்டையின் போது விமானப்படை இரவு பகலாக தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகித்திருந்தன.

ஆனாலும், இழந்த பகுதியை மீட்கப் படையினரால் முடியாது போனது. இதிலிருந்து புலிகளின் பலம் குறையவில்லை என்ற முடிவுக்குப் படைத்தலைமை வந்திருக்கிறது போலவே தோன்றுகிறது.புலிகளின் வலிந்த தாக்குதல்களைத் தொடர்ந்தும் படைத்தரப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் கடந்த சில நாட்களாகப் பெருமெடுப்பிலான நகர்வுகள் குறைக்கப் பட்டிருக்கின்றன.

தற்காப்பில் அதிகம் கவனம் செலுத்தப் படையினருக்குப் பணிக்கப் பட்டிருக்கிறது.

வடமேல் மாகாணசபைக்கும், மத்திய மாகாணசபைக்கும் தேர்தல் நடக்கப் போகின்ற நேரத்தில் பெரியளவில் புலிகள் ஊடறுப்பை நிகழ்த்தி அழிவுகளை ஏற்படுத்தினாலோ, அல்லது படைத் தரப்பின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக பாரிய சேதங்களை ஏற்படுத்தினாலோ, அது அரசின் பிரசாரங்களைப் பொய்யாக்கி விடும்.

இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கருதுகிறது.
அதேவேளை புதுக்குடியிருப்புக்குத் தெற்கே தமக்கு அச்சுறுத்தலாக இருந்த படையினரைப் பின்தள்ளுவதில் வெற்றி கண்டிருக்கின்ற புலிகளுக்கு இப்போது சவாலாக மாறியிருப்பது புதுக்குடியிருப்புக்கு மேற்கே உள்ள சமர்முனை தான்.
அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்கிய மக்கள் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் நான்கு டிவிசன்கள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.

அரசாங்கம் இருட்டுமடு பாதுகாப்பு வலயத்தை மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கே உருவாக்கியதாக அறிவித்திருந்த போதும், அது முற்றிலும் இராணுவ நோக்கம் கொண்டதே என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.
சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார்கட்டு, தேவிபுரம், மூங்கிலாறு பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களை ஒன்று குவியுமாறு அரசாங்கமும் படைத் தரப்பும் கூறியிருந்தன.

ஆனால், அந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவதும் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுவதும் வழக்கமாகி விட்டது.

இந்தப் பாதுகாப்பு வலயத்தைப் பயன்படுத்தி, மக்களை கவசமாக்கிக் கொண்டு, புதுக்குடியிருப்பை மேற்குப் புறமாக முன்னேறிச் சென்று கைப்பற்றுவது தான் படைத் தரப்பின் திட்டம்.

பரந்தன்-முல்லைத்தீவு வீதிக்கு வடக்காக நகர்ந்த 58 ஆவது டிவிசன் புளியம் பொக்கணை வழியாகச் சுற்றி வளைத்து சுதந்திரபுரத்துக்குள் பிரவேசித்திருக்கிறது.

அதேவேளை 5 ஆம் திகதி பகல் முழுவதும் மூங்கிலாறு, சுதந்திரபுரம் கொலனி, உடையார்கட்டுப் பகுதிகளில் சண்டைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றிருக்கின்றன.

மறுநாளும் இருதரப்புக்கும் இடையில் இதே பகுதிகளில் சண்டைகள் கடுமையாக இடம்பெற்றிருந்தன.

தேராவில் பகுதியில் 5 ஆம் திகதி படையினரின் முன்னகர்வுக்கு எதிராக பிற்பகல் 2 மணி தொடக்கம் 6 மணிவரை நடத்திய முறியடிப்புச் சண்டைகளில் 12 படையினர் பலியானதாகவும், 20 பேர் காயமுற்றதாகவும் புலிகள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன.பின்னர் கடந்த 7 ஆம் திகதி இருட்டுமடுப் பகுதியில் நடந்த சண்டைகளில் 8 படையினர் கொல்லப்பட்டு 10 பேர் காயமற்றதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

சண்டைகள் இப்போது மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன.இது படையினருக்கு மிகவும் சாதகமாகியுள்ளது.
காரணம் மக்கள் செறிவாக உள்ள பகுதிக்குள் இராணுவத்தினர் உட்புகுவது இலகுவாக இருப்பதும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களின் தீவிரம் குறைவாக இருப்பதும் தான்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் மக்கள் இருப்பது படையினருக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

எனவே தான் அவர்களை வெளியேற்றுவதற்கு பெரும் பிரயத்தனங்களைச் செய்தனர். தாக்குதல்களை நடத்தினர்.எதுவுமே சரிப்பட்டு வராதபோது, பாதுகாப்பு வலயத்தை அறிவித்து, அதற்குள் மக்களை இழுத்து விட்டு, அந்தக் கவசத்தைப் பயன்படுத்தி தனது 4 டிவிசன்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது படைத் தரப்பு.

இப்போது படையினர் உடையார்கட்டு, குரவில், சுதந்திரபுரம், இருட்டுமடு, மூங்கிலாறு பகுதிகளுக்குள் இறங்கியிருக்கின்ற நிலையில் புலிகளுக்கு மேற்குப் புறத்தால் நெருக்கடி அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்திருக்கும் படையினர் அதற்குள் இருக்கின்ற ஒரு பகுதி மக்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு சென்றிருக்கின்றனர்.

அத்துடன் பீரங்கி, விமானத் தாக்குதல்களில் காயமுற்றிருந்த மக்களை புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றதாகவும் பிரசாரம் செய்தும் வருகிறது அரசாங்கம்.

ஆனால், காயமுற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்படவில்லை என்பதும் பீரங்கிச் சிதறல் காயங்களுடனேயே இருப்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.

புதுக்குடியிருப்புக்கு மேற்கே குரவில் பகுதியை 57-4 ஆவது பிரிகேட் படையினர் கைப்பற்றியிருப்பதாக கூறியுள்ள நிலையில் அதற்கு கிழக்கே 62, 63 ஆவது டிவிசன்கள் முன்னேற எத்தனித்து வருகின்றன.

இராணுவம் இப்போது புதுக்குடியிருப்புக்கு வடக்கே 55 ஆவது டிவிசனையும், வடமேற்கே 58 ஆவது டிவிசனையும், மேற்கே 57 ஆவது டிவிசனையும், தென்மேற்கே 62, 63 ஆவது டிவிசன்களையும் நிறுத்தியிருப்பதோடு தெற்கே 59, 64, 53 ஆவது டிவிசன்களை நிறுத்தியிருக்கிறது.

ஆக புதுக்குடியிருப்பு என்ற நகரப் பகுதியையும் அதனைச் சார்ந்த பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்ற புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி இராணுவத்தின் மொத்தம் 8 டிவிசன் படையினர் நிறுத்தப் பட்டிருக்கின்றனர்.

புலிகள் தரப்பில் எத்தனை பேர் இப்போது சண்டைக் களத்தில் இருக்கிறார்கள் என்பது அறியப்படாத விடயம்.அவர்கள் இப்போது தமது சகல வளங்களையும், அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் கையாண்டு தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

வாகனக் கரும்புலித் தாக்குதல், மனித வெடிகுண்டுத் தாக்குதல் என்று படையினரைக் குழப்பமடையச் செய்யவும் அவர்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தவும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது எந்தளவுக்கு படை நகர்வுகளைத் தடுத்து நிறுத்தப் போதுமானதென்று தெரியவில்லை. புலிகளுக்கு இப்போது இருப்பது பிரதானமாக ஆளணிப் பிரச்சினை தான்.அதைத் தீர்க்கும் முயற்சிகளில் எந்தளவுக்கு வெற்றி கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

ஆனால் புலிகள் தொடர்ந்தும் புதுக்குடியிருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வலிந்த தாக்குதல்களை நடத்துவதானாலும் சரி, தற்காப்பு நிலையில் சண்டையிடுவதானாலும் சரி ஆளணிவளம் அவசியமானது.குறிப்பிட்டளவான மக்களை மட்டும் வைத்துக் கொண்டு பெரும் ஆளணியைத் திரட்ட முடியாது. இது புலிகள் தரப்பில் உள்ள முக்கியமான சிக்கல்.

எனவே தான் படைத்தரப்பு நாளாந்தம் புலிகளுக்கு சிறியளவில்; சேதங்களை ஏற்படுத்தினால் கூட, குறிக்கப்பட்ட காலத்துக்குப் பின்னர் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து போய்விடும் என்று கணக்கைப் போட்டுச் செயற்படுகிறது.
இந்தக் கட்டத்தில் புலிகளின் தலைமை என்ன செய்யப் போகிறது?

எத்தகைய தந்திரத்தைக் கையாண்டு தமது கோட்டையாக இருக்கின்ற புதுக்குடியிருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப் போகிறதென்பதெல்லாம் இப்போது முக்கிய கேள்விகளாக எழுந்திருக்கின்றன.


-கபிலன்-

நன்றி : நிலவரம்

Comments