விடுதலைப் புலிகளின் கரும்புலி வான் தாக்குதல் ‐ தமது பலம் குறித்து சர்வதேசத்திற்கான புலிகளின் பதில் ‐ றெடிவ் ஊடகம்

விடுதலைப் புலிகளின் நேற்றைய கரும்புலி தாக்குதலானது; புலிகள் இலங்கையின் எந்த பாகத்திலும் தாக்குதல் நடத்தும் வலுவுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளதால் ஆயுதங்களை களையுமாறு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் விடுத்துள்ள கோரிக்கையை வலுவற்றதாக்கும் நோக்கிலேயே நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநாவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பலமான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் மீறி தலை நகர் கொழும்பு வரை பாதுகாப்பாக விமானத்தை செலுத்தி வந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேசத்திற்கான தமது பலம் குறித்த புலிகளின் பதில் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பாரிய சேதங்களை படையினருக்கோ படைக்கட்டுமானங்களுக்கோ ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் கொழும்பில் தாக்குதல் இலக்கினை தெரிவு செய்தமை மூலம் புலிகள் தமது தாக்குதல் வலுவை
வெளிப்படுத்த முனைந்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற வான் தாக்குதல் வன்னியில் முன்னேற்ற முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள படைக்கட்டுமானங்கள் மீதோ அல்லது வவுனியாவில் உள்ள வன்னி கட்டளை மையம் மீதோ மேற்கொள்ளப்பட்டிருந்தால் படைத்தரப்பு கூடுதல் இழப்பை சந்தித்திருக்கும் என்றும் ஆனால் அந்த செய்தி ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தலைநகர் கொழும்பில் இந்த தாக்குலை நடத்தியதன் மூலம் படையினருக்கு சேதங்களை ஏற்படுத்துவதை விட தமது நிலைப்பாட்டையும் தமது தாக்குதல் நடத்துவதற்கான வலு நிலையினையும் சிங்கள மக்களுக்கு புலிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.

தென்னிலங்கை ஊடகங்கள் மூலம் புலிகளை ஓரம்கட்டி விட்டதான அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரப்புரைகள் மீது புலிகளின் இந்த தாக்குதல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் படையினரின் வெற்றிகள் குறித்த சந்தேகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட விமானங்கள் திரும்பிச் செல்லும் நோக்குடன் வரவில்லை என்றம் அவற்றின் நோக்கம் தற்கொலை தாக்குதல் தான் என்றும் இலங்கையின் படைத்துறை பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலிகளின் அனைத்து ஓடுபாதைகளையும் தமது படைகள் கைப்பற்றியதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதய நாணயக்கார ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். அதனை நினைவு கூர்ந்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது புலிகள் தாக்குதல் நடத்த பயன்படுத்திய விமானங்கள் ஓடுபாதைகள் இன்றி குறுகிய நிலப்பரப்பில் இருந்து மேலௌக் கூடியவை என்று அவர் பதிலளித்துள்ளார்.

எனினும் புலிகளின் விமானங்கள் சிலின் ரகத்தை ஒத்தவை என்றும் ஆனால் அவை சிலின் ரக விமானங்கள் அல்ல என்றும் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் படையால் மீட்கப்பட்ட புலிகளின் விமானத்தின் சிதைவுகளை பார்வையிடும் போது அவை புலிகளால் தயாரிக்கப்பட்டமைக்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து சில முக்கிய பாகங்களை அவர்கள் தருவித்திருந்தாலும் விமானத்தின் கட்டமைப்பு புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்தை உறுதிப்படுத்த முடிவதாகவும் அவர் கூறினார்.

புலிகள் இந்த விமானங்களை வடிவமைத்திருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் இது போன்ற கரும்புலி தாக்குதல்களை நடத்தவதற்கான ஏது நிலைகள் இருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் புலிகளிடம் இது போன்ற மேலும் சில உள்ளூர் தயாரிப்பு விமானங்கள் இருப்பதற்கான சாத்தியங்களை இலங்கை அரசாங்கமும் இது வரை மறுக்கவில்லை.

எனினும் இந்த ரக விமானங்களுக்கும் அப்பால் வேறு வகையான விமானங்களை புலிகள் கொண்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே பெரிய விமானங்களுக்கு தேவையான விமான ஓடுபாதைகளை புலிகள் வன்னியில் அமைத்திருப்பதாகவும் இந்த விமானங்களை செலுத்துவதற்கு 7 இடங்களில் விமான ஓடுபாதைகளை அமைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார

மூலம் - றெடிவ் ஊடகத்தில் வந்த இணைப்பு GTN ற்காக விசேட மொழியாக்கம் செய்யப்பட்டது:


Comments