இனியொரு முறை நாங்கள் தோற்கக்கூடாது

எப்போது எங்கு செல்விழும் எத்தனை சாவுகள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே வன்னியில் தமிழினம் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கிறது. இன்று பத்துப்பேராம். பதினைந்துபேராம் எனச் சாவுகளின் கணக்குகள் நீள்கிறது. இலங்கை தேசத்தின் ஒருமைப்பாட்டின் பேரால் சிங்களப் பேரினவாதத்தால் தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு யுத்ததால் இன்று வன்னியில் ஒட்டுமொத்த மக்களுமே பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

யாரைப்பார்த்தாலும் நலம் விசாரிப்பதற்குப் பதிலாக "இப்ப எங்க இருக்கிறியள்" எனும் வினாவைத் தவிரவேறு எதனையும் கேட்க முடியவில்லை. முகவரி இழந்த மனிதர்களாய் வீதி ஓரங்களிலும் பற்றைக்காடுகளிலும தங்கி உயிரைமட்டுமே தக்கவைத்திருக்கிற இம்மக்களின் அவலப்பதிவுகளை எழுத்தில் வடித்துவிட முடியாது.

'எங்க போய் இடம் கேட்டாலும் இடம் இல்லை எண்டு சொல்கிறார்கள். ஒரு சிறு துண்டுக்காணி எண்டாலும் கிடைச்சா அதில் இருந்திடலாம் எண்டுதான் தேடி அலையிறம், நாலுநாளாய் தேடியும் எந்த இடத்தையும் காணமுடியவில்லை' எனத்தன் இருப்பிடத்தையும் அமைத்துக்கொள்ள இடம்தேடி அலைந்து தற்போது உடையார்கட்டுப் பகுதியின் உள்வீதி ஒன்றின் ஓரத்தில் மூன்று சிறுவர்களுடனும் இரு குழந்தைகளுடனும் தங்கியிருக்கும் மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற தாய் அழுதவாறே குறிப்பிட்டார்.

"மன்னார் பண்டிவிரிச்சானிலிருந்து 2007 ஆம் ஆண்டு இடம்பெயரத் தொடங்கி இப்ப 10 ஆவது இடமா இஞ்சவந்திருக்கிறம். கையில எந்தவித பொருளும் இல்லை கடைசியா நிவாரணத்தை மட்டும் நம்பித்தான் இருந்தம் இப்ப எங்கே நிவாரணம் எடுக்கிறது எண்டே தெரியவில்லை. பசிக்கிறது எனக்கேட்கும்என பிள்ளைகளுக்கு குடுக்கிறத்துக்கு ஒண்டுமில்லை கிடந்த அரிசியைக் கஞ்சி காய்ச்சி காலம குடுத்ததுக்கு இன்னும் எதுவும் சாப்பிடக் குடுக்கவில்லை. யாரும் உதவிசெய்தாத்தான் நாங்க உயிரோடை எண்டாலும் இருக்கலாம். செல்லடியில எங்கட சொந்தக்காரர் செத்ததாய் அறிஞ்சன் ஆனா அவயளின்ர இடத்தைக்கூடத் தேடிப்பிடிக்க முடியவில்லை. ஊரில் சொந்தக்காரர்கள் பக்கத்த பக்கத்ததான் இருந்தனாங்க ஒருத்தருக்கு கஷ்டம் எண்டா ஒருவர் உதவிசெய்வார். அப்படி எங்கட உறவுகள் பலமாக இருந்தது. இப்ப அவயள் எங்க இருக்கினம் எண்டே தெரியவில்லை. அவையளுக்கும் எங்களப் போலத்தான் நிலைமை இருக்கும். எனத் தன்நிலைபற்றி மேலும் சில தகவல்களைத் தந்தார் அந்தத்தாய்.

மனிதநாகரிகம் உலகில் எங்கொங்கோவெல்லாம் வளர்ச்சி காண்கின்ற இக்காலம். ஈழத்தமிழினத்திற்கு ஏன் இந்த நிலைமை நாம் எங்கள் ஊரில் எங்கள் உரிமையுடன் இருப்பது தவறா ஏன் சிங்களவன் எங்கள இப்படிக் கலைச்சுக் கலைச்சு கொல்கிறான். பயங்கரவாதிகளை அழிக்கிறதாச் சொல்ல ஒவ்வொரு நாளும் 10.15 எனத் தமிழினத்தை கொல்கிறான். உலகமும் இதைக்கண்டும் காணாததுபோல இருக்குமெனத் தன்மன உணர்வைப் பகிர்ந்து கொண்டார் பாடசாலையின் ஆசரியர் ஒருவர்.

தேராவில் தொடக்கம் வள்ளிபுனம் வரையாகவுள்ள குறுகிய நிலப்பரப்பில் நான்கரை இலட்சம் மக்கள் நெருக்கமாக இருப்பது எவ்வளவு கnhடுமையான காட்சி என்பதை நேரில் வந்து பார்ப்பவர்களாலேயே உணரமுடியும்.குறிப்பாக உடையார்கட்டுப் பகுதியின் எந்தக் குச்சொழுங்கையாயினும் அது பிரதான வீதி ஒன்றின் போக்குவரவிற்கு ஒப்பான மனித நடமாட்டங்களாக மாறியுள்ளன. எல்லாக்காணிகளும் குடியிருப்புக்களாக மாறியுள்ளன. கிடைக்கின்ற தறப்பாளால் கூரை விரிப்பை அமைத்து அதன் கீழேயே பெருமளவான குடும்பங்கள் தங்கியுள்ளன. இப்பகுதியின் காணி உரிமையாளர்களிடம் இடம்கேட்டுப்போனால் தமது காணிக்குள் பத்திற்கு மேல் குடும்பங்கள் இருக்கினம் இடம் இருந்தால் போடுங்கோ எனக்கூறும் நிலையே காணப்படுகிறது. பலகாணி உரிமையாளர் தமது பெரும்போக பயிர் செய்திருந்த நிலத்தினையும் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கியுள்ள நிலைமையைக் காணமுடிகிறது. இருப்பதற்கு ஒரு இடம்கிடைக்காதா என்ற அலைச்சலே பெருமளவான இடம்பெயர்ந்த மக்களைப் பற்றியுள்ளது.

சிங்களப்படைகளின் எறிகணை வீச்சுகள் பல மக்களைப் படுகொலை செய்துவிடும் நிலையில் மக்களின் உள்ளுர் இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக உடையார்கட்டு குரவில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கடுமையான எறிகணைத்தாக்குதல்களால் பல மக்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்த நிலையிலும் பதற்றம் அடைந்த அப்பகுதிமக்கள் அங்கிருந்து வேகமாக இடம்பெயரும் அவலத்தைக் காணமுடிகிறது. இப்பகுதியில் ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் நெருக்கமாக இருப்பிடங்களை அமைத்து வசித்து வந்த நிலையில் அம்மக்களும் குறுகிய நேரத்திற்குள் ஒற்றைவழிப்பாதையால் இடம்பெயர்ந்து சென்ற அவலத்தைக் காணமுடிந்தது. இம்மக்கள் உடையார்கட்டின் ஏனையபகுதிகளில் இடம்தேடி அலைந்து திரிவதனையும் பலர் வீதி ஓரமாகத் தங்கி இருப்பதையும் காணமுடிகிறது.

இவைதவிர மக்கள் தொகையில் கணிசமானோரை உள்ளடக்கியிருந்த புதுக்குடியிருப்புப் பகுதியும் இராணுவ அச்சுறுத்தலால் இடம்பெயர்ந்து வள்ளிபுனம், உடையார்கட்டுப்பகுதி நோக்கி வருவது இன்னுமின்னும் சன நெரிசலை அதிகப்படுத்தியுள்ளது.வைத்தயசாலைகள் உள்ளிட்ட பகுதிகளே இராணுவத்தின் எறிகணை இலக்குகளாக மாறியுள்ள நிலையில் எங்கும் மக்களின் உயிரிருக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையே காணப்படுகிறது.

கடந்த பத்து நாட்களுக்குள் மட்டும் 90 இற்கு அதிக மக்கள் சிங்களப்படைகளின் எறிகணைத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட செய்தி இன்றைவரை எந்த ஒரு உலக நாட்டினாலும் கண்டிக்கப்படவில்லை. இம்மாதம் மட்டும் இதுவரை நூற்றிற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் பலநூறு பொதுமக்கள் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். மக்களி; வாழிடங்கள் எனத் தெரிந்திருந்தும் சிங்களப்படை புரிகின்ற இக்கொடூரமான கொலை வெறித்தாக்குதலை உலகின் கண்முன்னே கொண்டுசெல்ல வேண்டிய தரப்புகளும் பொது அமைப்புக்களும் அசிரத்தைக்காட்டுவது வேதனைக்குரியது.

ஒரே எறிகணையில் தன் தாய். தந்தை மற்றும் நான்கு சகோதரர்களை பலிகொடுத்து அவர்களின் மரணச்சடங்கைக்கூட நடாத்த முடியாத அவலத்தில் றெட்பானாப்பகுதியிலிருந்து வெளியேறிய தினேஸ்குமார் என்ற சிறுவனின் நிலையிலேயே இன்று பல குடும்பங்கள் அவலப்பட்டு நிற்கின்றன. வீதியில் சென்று கொண்டிருக்கும்போது எறிகணை வீழ்ந்து வெடித்து இறந்து கிடக்கும் மக்களின் உடல்களையும் கைவிட்டு அடுத்த எறிகணை வருமோ என்ற பயத்தில் ஓடும் அவலத்தைச் சிங்களம் இன்று வன்னியில் ஏற்படுத்தியிருக்கிறது. விசுவமடு றெட்பானாப் பகுதிகளில் வீட்டு உடமைகளை ஏற்றிவரும் மக்கள் மீது சிங்களப்படை நடாத்திய எறிகணைத்தாக்குதல்களால் இறந்த பல மக்களின் உடல்கள் மீட்கமுடியாத நிலையில் அநாதரவாகக் கிடந்தது என்ற வேதனைக்குரிய செய்தியையும் இவ் அவலப்பதிவுத்தொடரில் பதிவுசெய்தாகவேண்டும்.

இவ்வாறாக மனிதஅவலத்தின் உச்சக்கட்டம் சிங்கள அரசால் இன்று வன்னியில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்த நிலையில் நாளாந்த உணவைப் பெறுவதற்கே பெரும் படாய் உள்ள இந்நிலையில் மக்களை கொன்றொழிக்கும் சிங்களப் படைகளின் கொடூரத்தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

உள்ளிருந்து ஒருகுரல் (மலைமகள்)அகன்று பரந்து விரிந்து கிடந்த தமிழ் நிலத்தின் தொலைவுகளில் வாழ்ந்த உறவுகளையெல்லாம் உள்ளங்கயைளவு நிலத்தில் இழுத்து இருத்தியுள்ளது காலம். வரும் எதிரியோடு நேரெதிர் மோதி வெல்லவில்லையெனில் உனக்கு நாடுமில்லை வீடுமில்லை என்று ஒவ்வொரு தமிழருக்கும் உணர்த்தியுள்ளது நேரம். சண்டைக்குப் போகின்ற எல்லோருமே சாவதில்லை என்று சான்று பகர்கின்றது விடுதலைப் போராட்ட வரலாறு.

நீண்டு தொடர்ந்து செல்ல தமிழீழ விடுதலைப் போரில் சண்டைக்குப் போய் சாவடைந்தோர் இருபத்து இரண்டாயிரத்துக்குச் சற்று அதிகமானோர். மட்டுமே. ஆனால் சண்டைபற்றிக் கனவில் கூடச் சிந்திக்காத அப்பாவிப் பொதுமக்களில் சிங்கள வன்பறிப்பாளர்களால் கொல்லப்பட்டோர் எழுபது ஆயிரத்திற்கும் மேலே. இந்தக் கூட்டல் கழித்தல் கணக்கை களத்தில் இருந்து நான் நினைவூட்ட விரும்புகின்றேன. சமர்க்களம் எங்கும் போராடுகின்ற பெண் புலிகளின் உள்மனக்குரலை உங்கள் முன் ஒலிக்க விரும்புகின்றேன்.

மன்னாரின் மாந்தை முதல் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரிக்கின்ற நெத்தலியாறு வரை களமாடி விழுப்புண்ணேற்று, களமாடி, விழுப்புண்ணேற்று களமாடி வீரச்சாவடைந்த சாந்தினியின் (2ஆம் லெப் மாலதி படையணியின் கட்டளை அதிகாரிகளுள் ஒருவர்) உள் மனக்குரலை உங்கள் முன் ஒலிக்கின்றேன். தம்பனை, கோயில் மோட்டை, உயிலங்குளம், பாலைக்குழி, திருக்கேதீஸ்வரம், பாப்பாமோட்டை என போர் முன்னரங்கை 2007 மார்ச்சில் 2ஆம் லெப். மாலதி படையணியின் அணியொன்று அமைத்த நாளிலிருந்து இன்றளவும் எதிர்நடவடிக்கையை நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் கட்டளையதிகாரி கீர்த்தியின் உள்ளிருந்து வரும் குரலை இங்கு நான் ஒலிக்கின்றேன்.

"நாங்கள் தோற்கக்கூடாது" வரலாற்றில் மறுபடியும் மறுபடியும் தோற்ற இனமாக நாங்கள் இருக்கக்கூடாது தோற்றால் இனமாக நாங்கள் இருக்கக்கூடாது. தோற்றால் நிமிர்ந்தெழ இன்னும் நானூறு ஆண்டுகள் செல்லும் நன்றாய் நினைவில் கொள்ளுங்கள். "நாங்கள் தோற்கக்கூடாது"ஆனையிறவில் ஒரு கோட்டை இருந்தது. அங்கே தமிழர்களைத் தொலைத்துக் கட்டும் முடிவோடு தமிழின எதிரிகள் குந்தியிருந்தனர். கோட்டையைத் தகர்க்கும் முயற்சியில் ஒரு தமிழன் இறங்கினார். கூடவே தமிழர் பலர் படையாய்த் திரண்டனர். படைநடத்திய தளபதிகளில் ஒருவராக ஒரு பெண் சென்றார். படையிலும் பெண்கள் இருந்திருக்கலாம். பனங்காமம் பற்றிலிருந்து ஆனையிறவுக் கோட்டைவரை நீண்ட நகர்வைச் செய்த அப்படை கோட்டையைத் தாக்கியழித்து மீண்டது. இது நடந்தது ஆயிரத்து அறுநூறுகளில். அதன் பின் விடுதலைப்போர் நீளவில்லை. கொண்டிழுக்க ஆள் இல்லாமல் ஓய்ந்துபோனது.முல்லைத்தீவில் ஒருகோட்டை இருந்தது. தமிழினத்தைத் தொலைத்துக்கட்டும் முடிவோடு தமிழின எதிரிகள் பீரங்கிகளையும் வைத்துக்கொண்டு குந்தியிருந்தனர்.

கோட்டையைத் தகர்க்கும் முயற்சியில் ஒரு தமிழின இறங்கினான். கூடவே தமிழர் பெரும் படையாய்த் திரண்டனர். வரலாற்றில் பெயர் பொறித்த ஒரு பெண்ணும் பெயர் தெரியாத பல பெண்களும் அப்படையில் இருந்தனர். படைநடந்தது. பகைக் கோட்டையைத் தாக்கியது. பகைவரின் பீரங்கியைத் தூக்கியது. பனங்காமம் பற்றுத் திரும்பியது. இது நடந்தது ஆயிரத்து எண்ணூறுகளின் தொடக்கத்தில். அட! தூசென நினைத்த தமிழன் முல்லைத்தீவுக் கோட்டையை அழித்தானா? சூரியன் மறையாத பேரரசின் ஆணவம் சற்று ஆடியது. முல்லைத்தீவுக் கோட்டையில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தப்யோடிய தளபதி வொன் ட்றிபேக் ஒடுங்கிப்போனான். தன்னைக் கலைத்த தமிழனை... தமிழனை... அவன் பற்கள் நறுநறுத்தன.தமிழர்களின் தலைகளைக் கிள்ளியெறிய ஈழத்தில் தமிழினத்தின் இருப்பைத் துடைத்தழிக்க சூரியன் மறையாத பேரரசின் படைகள் கிளம்பின.

ஒரு பெரும் படை திருகோணமலையில் இருந்து கிளம்பி கடற்கரை வீதி வழியே முல்லைத்தீவை நோக்கி நகர்ந்தது. மாவீரன் பண்டாரவன்னியனின் மூக்கில் வியர்த்தது. எதிரிப்படை பலத்தையும், படைவரும் வழியையும் உய்த்துணர்ந்த அவர், ஏற்கெனவே தான் திரட்டிவைத்திருந்த தமிழர் படையோடு பகைப்படையை எதிர்கொள்ளப் புறப்படடார். எதிரிகளை அவர் வழிமறித்த இடம் மணலாற்றிலுள்ள உடையாவூர். உடையாவூரில் நடந்த வழிமறிப்புச் சமரில் ஆங்கிலப்படை எச்சசொச்சங்களற்று முற்றாக அழிக்கப்பட்டது. வெற்றியீட்டிய தமிழர் படை வித்துடல்களையம் விழுப்புண்ணேற்றோரையும் சுமந்து திரும்பியது. (காலம் 1800கள்)மூச்சுவிட நேரமற்று இன்னொரு வழிமறிப்புச் சமாருக்குத் தமிழர் படைபோகவேண்டியிருந்தது.

ஆணவங்கொண்ட ஆங்கில் பேரரசின் படைகள் யாழ்ப்பணத்திலிருந்து பழைய கண்டி வீதி வழியே வன்னியை நோக்கி நகர்ந்தது. வந்தது பெரும் படை. பெரும் படை தமிர்களை விழுங்கும் மூர்க்கங்கொண்ட படை. எதிர்நடவடிக்கைக்குப் புறப்பட்டது தமிர் படை. வீரச்சாவடைந்தோர், விழுப்புண்ணேற்றோர் போக, எஞ்சியவர்கள் போருக்குப் போயினர். படைப்பலங்குறைந்தாலும் மனோபலம் குறைவதில்லை தமிழருக்கு.எதரிப்படையைத் தமிழர் படை எதிர்கொண்ட இடம் பதினெட்டாம் போர். எச்சசொச்சங்களற்று எதிரிப்படை அழிந்துபோக, வித்துடல்களையும் விழுப்புண்ணேற்றோரையும் சுமந்து தமிழர் படை திருப்பியது. (காலம் 1800) அடிபட்ட பாம்பாக வென்ட்றிபேக் ஒரு பெரும் படையோடு புறப்பட்டான். மிக மறைவாக, அழுக்கமாக அந்த நகர்வு நடந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து படகேறிய ஆங்கிலப் படைகள் மன்னாரின் மாந்தையில் வந்திறங்கின. பையப் பைய நடந்தன நீண்ட நடை.மாந்தையிலிருந்து பள்ளமடு கடந்து, வெள்ளாங்குளம் கடந்து, மாங்குளம் கடந்து, ஒட்டுசுட்டானைக் கடக்கும்போது தான் எதிரிநகர்வு அடையாளங்காணப்பட்டு, அதன் பூதாகாரம் உணரப்பட்டு எதிர் நடவடிக்கைக்குத் தயாரானது தமிழர் படை.எதிரிப்படையை அது எதிர்கொண்ட இடம்கற்சிலை மடு, அண்மைக்காலத்து இரு பெருஞ் சமர்களால் ஆளணியிலும் ஆயுத பலத்திலும்குறைந்துபோன தமிழர் படைகடைசி ஒரு வீரன் உயிரோடிருக்கும்வரை போராடியது. உயிர் போகுமட்டும் போராடியது.

அந்த ஒரு சமரில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விழுப்புண்ணேற்று நினைவிழந்துபோன பண்டாரவன்னியனை சில வீரர்கள் குதிரையிற் சுமந்து பனங்காமக் காட்டுக்குக் கொண்டுபோய்ச் சிகிச்சையளித்தனர். (காலம் 1803) அத்தோடு எல்லாம் சரி, ஈழத்தமிழர் வரலாற்றில் இரண்டாம் முறை விடுதலைப் போர் ஓய்வுக்கு வந்தது, தொடர்ந்து கொண்டிருக்க ஆளில்லாமல் கைலைவன்னியனுக்கும் பண்டாரவன்னியனுக்குமான கால இடைவெளி இருநூறு ஆண்டுகள் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் தமிழீழத் தேசியத்தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுக்குமான கால இடைவெளி நூற்றுக்கு ஐம்பத்தொரு ஆண்டுகள்.

தமிழர்களின் தலைகளைச் சீவக் கங்கணங்கட்டிய சிங்களப்படைகள் முல்லைத்தீவில் ஒரு கோட்டையை அமைத்துக்குந்தியிருந்தன. புகுந்தடித்த தமிழர்படை கோட்டையைத் தாக்கியது. இரு பீரங்கிகளைத் தூக்கியது. தளம் மீண்டது. (காலம் 1996) தமிழர் தலைகளைச் சீவ சிங்களப்படை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண நெடுஞ்சாலை வழியே ஒரு பெரும் நகர்வைச் செய்தது. அந்த நகர்வு தமிழர் படையால் மாங்குளத்தோடு தடுத்த நிறுத்தப்பட்டது (1997 இல் ஜெயசிக்குய்). எனவே அது இடதுபுறம் ஒட்டுசுட்டான் வரையும் (ரிவிபல), வலதுபுறம் பள்ளமடுவரையும் (ரணகோஷ) அகன்றது.

திரண்டெழுந்த தமிழர்படையால் இம் மாபெரும் படைநகர்வு துடைத்தழிக்கப்பட்டு நிலம் மீட்க்கப்பட்டது (காலம் 1999, 2000) யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதி வழியே கிளிநொச்சி வரை நகர்ந்த சிங்களப்ப டைகளை தமிழர்படை வழிமறித்தது (1996). தாக்கியடித்தது. நிலம் மீட்க்கப்பட்டது. (1998) மண்டும் ஒரு பெரும் படைநகர்வு.சிங்களப் படைகளால் தொடக்கப்பட்டது (2007 மார்ச்). அது தொடங்கிய இடம் மன்னாரின் மாந்தை. படை நகர்வு தொடங்கியதுமே தமிழர் படையின் எதிர் நடவடிக்கையும் தொடங்கியது. பள்ளமடு கடந்து, வெள்ளாங்குளம் கடந்து, முழங்காவில், கிளிநொச்சி கடந்து, இப்போது நெத்தலியாற்றுப் பாலம் வரை மறிப்புச் சமர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

"வரலாற்றில் மூன்றாம் முறையும் தோற்கக்கூடாது" நெஞ்சுரத்தோடு புலிகள் படை போராடுகின்றது. "எதிரி கையில் உயிரோடு பிடிபடக்கூடாது" ஈழத்தமிழினம் கையில் எடுத்த பொருட்களோடு ‘பாதுகாப்பு' எனத் தாம் கருதுமிடங்களை நோக்கி நகருகின்றது. குறுக்கும் மறுக்கும் தலைக்கு மேலாக எதிரிப்படைகளின் எறிகைகள் சீறிப்பாய்கின்றன.

எதற்கும் அஞ்சாத வீரன், தன் காலத்தில் தமிழர்களுக்கு ஒரு நாட்டை அமைத்துக் கொடுப்பதில் அiசாயத உறுதி பூண்ட தீரன் பிரபாகரன் போர்ப் பூமியில் நெருப்பின் நடுவே நின்றபடி எதிர்ச்சமரை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஈழத்தமிழினம் வாழவேண்டும் என்பதற்காகச் சாவின் நடுவே சமராடுகின்றார்கள் போராளிகள்.

வரலாற்றில் மூன்றாம் முறையும் தோற்கக்கூடாது. மூன்றாம் முறையும் தோற்கக்கூடாது. தோற்கக்கூடாது.

சாந்தினியின் ஆன்மா உங்களைக் கேட்கின்றது. நீண்ட நெடும் எதிர்ச் சமரை நெறிப்படுத்தித் தொண்டை அடைத்துப் போய், விழுப்புண்களால் உடல் நொந்துபோய்களைத்துப் போனாலும் உளம் நேராத கீர்த்தி உங்களைக் கேட்கின்றார். அடி விழும் இடத்துக்கு அந்தக் கணமே போய்ச் சேரும் கட்டளையதிகாரி தங்கநிலா உங்களைக் கேட்கின்றார்.

"இனியொரு முறை நாங்கள் தோற்கக்கூடாது எம் மக்களே, எழுந்து வாருங்கள். இம்முறை நாங்கள் தோற்கக்கூடாது."

க.ப.துஸ்யந்தன்



Comments