இலங்கை பிரச்சினை தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

மதுரையில் ஊடகவியலாளர்களை இன்று வியாழக்கிழமை சந்தித்த போது தா.பாண்டியன் மேலும் கூறியதாவது:

இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடுவதோடு அங்கு உடனடியாக போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

அனைத்துலக நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் இலங்கைப் பிரச்சினை குறித்து மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை.

ஆனால், இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார்.

இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்றார் அவர்.



Comments