இரவல் துப்பாக்கியா இந்தியா?--விகடன்

மை மகனைப் பேசவைக்க மன்னர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தார். அதற்கான பலன் ஒருநாள் வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.

மன்னனுடன் பேசாமல் இருந்த அவரின் விதவை அக்காவும் பகையை மறந்து வந்திருந்தார். கூட்டத்தைப் பார்த்தான் மகன். அம்மாவை, அப்பாவை, அத்தையைப் பார்த்தவன் வாய் திறந்தான், ''அம்மா, எப்ப அத்தை மாதிரி ஆகும்?''

மன்னனுக்கு மட்டுமல்ல, மொத்தக் கூட்டத்துக்கும் அதிர்ச்சி! எப்போது பேசுவான் என்ற ஆதங்கத்தில் இருந்தவர்கள், இதற்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். இலங்கை விவகாரத்தில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளை அழிக்கும் போர்வையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு போடுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், வந்த செய்திகள் அதிர்ச்சியானவை. 'இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளை வழங்க ஆரம்பித்துவிட்டது' என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை முதலில் வைகோதான் சொல்ல ஆரம்பித்தார். 'நாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்தார். 'அவர்கள்தான் உதவி செய்யவில்லை என்கிறார்களே' என்று முதல்வர் கருணாநிதியும் இழுத்தார். 'இந்தியா அப்படி எந்த உதவியும் செய்யாது' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மழுப்பினார். ஆனால், வைகோவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், 'இந்தியாவுக்கு வேறு வழி இல்லை. பிராந்தியப் பாதுகாப்புக்காக நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது' என்று சொல்லி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவது இது முதல்முறை அல்ல. 1983ம் ஆண்டு அங்கு தமிழினப் படுகொலைகள் அதிகமாக நடக்க ஆரம்பித்தன. இந்தியா தலையிட்டு அதைத் தடுக்க வேண்டும் என்று தி.மு.க, தி.க. உள்ளிட்ட கட்சிகள் அப்போது போராட்டம் நடத்தின. இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை செய்தது. அதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருந்தது. நம் நாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும், பாகிஸ்தானில் அமெரிக்காவும் தங்கள் படைகளைக் குவித்து வந்தன. தெற்காசியாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து ஆளுகைப்படுத்த நினைத்த இந்தியா, இலங்கையைத் தனது கைக்குள் வைக்கத் திட்டமிட்டது. எனவே, அங்கு உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வந்த போராளிக் குழுக்களை அழைத்து, இந்தியாவில் பயிற்சி தரும் வேலைகள் ஆரம்பமாகின.

மூன்றாவது ஏஜென்சி என்று அழைக்கப்பட்ட குழு இந்த ஆயுதப் பயிற்சியை விடுதலைப் புலிகள் (பிரபாகரன்), பிளாட் (உமாமகேஸ்வரன்), ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா), ஈராஸ் (பாலகுமார்) ஆகிய அமைப்புகளுக்கு வழங்கியது. சென்னை ப்ளூ டைமண்ட் ஓட்டலில் இதற்கான தனி அலுவலகம் இருந்தது. முதலில் புலிகளுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை. இந்திரா காந்திக்குக் கடிதம் போட்டு அனுமதி வாங்கினார்கள். எஸ்.சந்திரசேகர் என்ற ரா அதிகாரி, பிரபாகரனை பாண்டிச்சேரியில் சந்தித்து, இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 200 புலிகளுக்கு டேராடூனில் பயிற்சி தரப்பட்டது. இந்தியாவில் உணவு, தங்குமிடத்துடன் இப்படி ஒரு பயிற்சி தரப்படும் நம்பிக்கையில்தான் ஏராளமான இளைஞர்கள் போராளிகளாக மாறினார்கள். இந்திரா மரணத்துக்குப் பிறகு இந்த நிலைமை மாறியது. 'அச்சுறுத்திப் பணியவைப்பதைவிட, அமைதி ஏற்படுத்தி இலங்கையின் நம்பிக்கையைப் பெறலாம்' என்று நினைத்தார் பிரதமர் ராஜீவ்.

ஆயுதப் பயிற்சி கொடுத்தவர்களே போராளிகளைச் சந்தித்து அதைக் கைவிடச் சொன்னார்கள். ரா தலைவர் கிரீஷ் சக்சேனா, இதை பிரபாகரனிடம் சொன்னார். ஐ.பி. தலைவராக இருந்த எம்.கே.நாராயணன், திருப்பதியில் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு திம்பு பேச்சுவார்த்தைக்குப் போராளிகள் போனார்கள். இவர்கள் வசதிக்காக கோடம்பாக்கம் திம்பு ஹாட்லைன் போன் வசதி செய்து தரப்பட்டது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்த அன்றே தமிழர்கள் யாழ்ப் பாணத்தில் கொல்லப்பட்டதால், போராளிகள் கோபித்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்கள்.

பெங்களூர் வந்த ஜெயவர்த்தனேயுடன் சந்திப்பு நடத்த பிரபாகரனுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார் ராஜீவ். தமிழர்கள் அதிகம் வாழும் கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரிப்பதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் கோபப்பட்ட ஜெயவர்த்தனே, யாழ்ப்பாணத்தைத் தரைமட்டமாக்குவேன் என்று அறிவித்தது, ராஜீவைக் கோபப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கப்பலில் உணவு அனுப்பினார் ராஜீவ். அந்தக் கப்பலை சிங்கள கடற்படை தடுத்தது. உடனே போர் விமானத்தில் கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில் அதிரடியாகப் போடச் சொல்லிக் கிளம்பினார். 'உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்' என்று இலங்கை எச்சரித்தது. புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாகின. எனவே, ஜெயவர்த்தனே இறங்கி வந்தார். அதன்படி இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழர் பகுதியில் மாகாண சபை அமைப்பது இதன் சாராம்சம். ஆயுதங்களை ஒப்படைக்கத் தயார் என்று பிரபாகரன் அறிவித்தார்.

''அப்படி ஒப்படைக்காமல் போனால், இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். அதை நான் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாரில்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்பார்கள்'' என்று பிரபாகரன் அறிவித்தார். சென்னையில் இருந்த புலிகளின் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 புலிகள் ஈழம் போய் இறங்கினார்கள்.அவர் களை சிங்கள ராணுவம் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுபோகத் திட்டமிட்டது. 'அவர்களை எங்களிடம் மீட்டுத்தர வேண்டும்' என்று புலிகள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தனர். இந்தியா அதை ஜெயவர்த்தனேவிடம் சொல்ல... அவர் அதை ஏற்கவில்லை. 'சித்ரவதையில் சாவதைவிட சயனைட் மேல். அதை அனுப்பிவையுங்கள்' என்று தகவல் வந்தது. சாப்பாட்டுப் பொட்டலத்துடன் சயனைட் வந்தது. 17 பேரும் பலியானார்கள். இந்தக் கோபம், அப்போது அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தின் பக்கமாகத் திரும்பியது. ராணுவ முகாமை மக்கள் முற்றுகையிட்டார்கள். இந்திய ராணுவம் திருப்பிச் சுட ஆரம்பித்தது. 'ஆபரேஷன் பவன்' இப்படித்தான் ஆரம்பமானது.

'இனி, புலிகளை இந்தியா ஒழித்துவிடும். எனது கடமையை நான் செய்துவிட்டேன்' என்று சொல்லி, அரசியலில் இருந்து விலகினார் ஜெயவர்த்தனே. அவரை அடுத்து வந்த பிரேமதாசா, இந்தியாவை மதிக்கவில்லை.

முதல் அழைப்பைப் புலிகளுக்கு வைத்தார். 'நம் பிரச்னையை நாம் தீர்ப்போம். மற்ற நாட்டை விரட்டுவோம்' என்றார். இந்திய ராணுவத்துக்குத் தெரியாமல் புலிகளை கொழும்புக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்று மாதத்தில் இந்தியப் படை வெளியேற வேண்டும் என்று இந்தியாவுக்குத் திகில் அறிவிப்பு வந்தது. இதை ராஜீவ் ஏற்கவில்லை. அங்கிருந்த ராணுவத் தளபதி கல்கத்திடம், 'நீங்கள் யாரும் முகாமைவிட்டு வெளியில் வரக் கூடாது' என்று பிரேமதாசா உத்தரவு போட்டார்.

'அப்படி அவர்கள் வெளியே வந்தால் சுடுங்கள்' என்று புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார் பிரேமதாசா. முல்லைத்தீவு மணலாறு சிங்கள முகாமில் இருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் குவிய ஆரம்பித்தன.

வேறு வழி இல்லாமல் இந்தியப் படை அங்கிருந்து வெளியேறியது. 1,150 ராணுவ வீரர்களைப் பறிகொடுத்த இரண்டரை ஆண்டு யுத்தம் முடிந்தது.

அதற்கு பின் ராஜீவ் கொலை நடந்தது. இலங்கை வந்துகொண்டு இருந்த கிட்டுவை இந்தியக் கடற்படை சுற்றி வளைத்துத் தாக்கியது. தனது கப்பலை வெடி வைத்துத் தகர்த்துக்கொண்டார் கிட்டு. இப்படி மொத்தமும் புலிகளுக்கு எதிரான யுத்தம் இந்தியாவால் தொடரப்பட்டது. இலங்கையை அடக்க புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுத்தது. இந்தியாவை விரட்ட இலங்கை புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் புலிகளுக்கு எதிராக!

இது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு நன்மை?

இன்று பூதாகாரமாக எழும் கேள்வி இதுதான்.

ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (பத்திரிகையாளர்)

''இலங்கையில் தமிழன் கொல்லப்படக் கூடாது என்று தமிழகத்தில் எழும் எழுச்சிக்கான காரணம் வேறு. அதற்குச் செவி மடுக்காமல், இந்திய அரசாங்கம் செய்யும் காரியங்களுக்கான உள்நோக்கம் வேறு. முன்னது சகோதர பாசம். இரண்டாவதற்கான காரணம், பிரதேச நலன் சார்ந்தது. இலங்கையைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கட்டுப்படுத்தப் பார்த்தார்கள். ஆரம்பத்தில் போராளிகளுக்கான ஆயுதங்களை உதவி செய்த மத்திய அரசாங்கம், வட கிழக்கு மாகாணங்களில் எழுந்த தீவிரவாத இயக்கங்கள், காஷ்மீர் நிலையைக் கருத்தில்கொண்டு தனது நிலையை மாற்றுகிறது.

பொதுவாக இந்தியாவுக்கு, இலங்கை விஷயத்தில் வேறு எந்த நாடு தலையிட்டாலும் அது கண்ணை உறுத்தும். இப்போது சீனா, பாகிஸ்தான் நுழைவதால் இவர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

90ம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்கென சில தார்மீக கொள்கைகள் இருந்தன. இனவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுடன் இருந்த வர்த்தகத் தொடர்பை முறித்தோம். திபெத்தில் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தோம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கான முதல் தூதரகத்தை டெல்லியில் திறக்க அனுமதித்தோம்.

அந்த இந்தியா இப்போது இல்லை. இப்போது நமது வெளியுறவுக் கொள்கை, பொருளாதார வர்த்தக நலன்கள் சார்ந்தவை. அவ்வளவுதான். உச்சகட்ட அராஜகம் நடக்கும் பர்மா ராணுவ ஆட்சியாளர் இங்கு வந்து, காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கிறோம்.

இஸ்ரேலுடன் வர்த்தக உறவுக்கு நாம் தயார். இதுதான் இந்தியாவின் நிலைமை. பொதுவான அரசியல் பிரச்னைகளால் அல்ல... பொருளாதாரக் காரணங்களால்தான் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன!''

சி.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்.

''நாட்டை ராணுவமயமாக்குவதோ, யுத்த முரண்பாடுகளை வளர்த்தெடுத்து ஆயுத விற்பனை செய்வதோ இந்தியாவுக்கு எதிரான கொள்கையாக ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆயுதங்களை விற்பது குற்ற நடவடிக்கை. மனித விரோதமானது. ஐ.நாவின் கொள்கைக்கு விரோதமானது. சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவி செய்வதாகத் தெரிய வந்தால், விவாதம் நடத்தி அனைத்து நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுபோய் தடுக்க வேண்டுமே தவிர, நானும் ஆயுத உதவி செய்கிறேன் என்பது நடுநிலைத்தன்மைக்கு விரோதமானது.

கொழும்பில் பாகிஸ்தான் நிறுவியிருக்கும் ரேடார் கருவிகள் மூலமாக, இங்கு பெங்களூரில் உள்ள நமது விமானக் கட்டுமான விஷயங்களைப் பார்க்க முடியும். தெற்கு எல்லைதான் பாதுகாப்பானது என்று சொல்லி, ஆவடியில் டேங்க் ஃபேக்டரியும் பெங்களூரில் விமானக் கட்டுமானத் தளமும் அமைத்தார்கள். ஆனால், கொழும்பில் உட்கார்ந்துகொண்டு இதை பாகிஸ்தான் கண்காணிக்கிறது. அதற்கு இடம் கொடுத்த இலங்கை அரசாங்கத்தை இந்தியா தட்டிக்கேட்கவில்லை.

ஆனால், சீனாவை அனுமதிப்பேன், பாகிஸ்தானை அனுமதிப்பேன் என்று நம்மை இலங்கை மிரட்டிக்கொண்டு இருக்கிறது. நம்முடைய ராஜதந்திரம் பெரும்பின்னடைவை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது.

தமிழீழம் அமைந்தால், இந்தியாவுக்கு எந்த வகையில் ஆபத்து என்பதை விளக்க வேண்டும். 1991க்குப் பிறகு இந்தியாவுக்கு விரோதமான எந்த நடவடிக்கையை புலிகள் எடுத்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக இலங்கை எத்தனையோ விஷயங்களை நித்தமும் செய்து வருகிறது. எனவே, நமது வெளியுறவுக் கொள்கை நம்மை விரைவில் ஏமாற்றும்!''

வ.ஐ.ச. ஜெயபாலன், இலங்கை விமர்சகர்.

''இது வெறுமனே ஈழத் தமிழர்கள் பிரச்னை மட்டும் அல்ல. சிங்களக் கடற்படையால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களின் பிரச்னையாகவும் இருக்கிறது. பாகிஸ்தான், சீனா போன்ற இந்தியாவின் எதிரி நாடுகள்தான் சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவை வழங்குகின்றன. எங்கள் மக்களுக்கும் இந்தியாவுக்கும், இலங்கை மட்டுமல்ல... பாகிஸ்தானும் சீனாவும் பொது எதிரிகள்.

வழிதவறிய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டதாலேயே துயரங்கள் நிகழ்ந்தன. இந்திய அமைதிப் படையால் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, தமிழர்கள் கொலை செய்யப்பட்டது ஆகியவற்றால் எழுந்த சினத்தால், போராளிகள் இழைத்த சில தவறுகளால்தான் அந்த இருண்ட காலம் உருவானது. ஆனால், இப்போது அந்தச் சூழ்நிலை இல்லை. பாகிஸ்தான், சீனா போன்ற பொது எதிரிகளுக்கு எதிராகப் போராளிகளும் இந்திய அரசும் இணைய முடியும். பல இந்திய அதிகாரிகள், 'என்ன மாதிரியாக இந்தியா நடந்துகொள்ள வேண்டும்' என்று பாகிஸ்தான் விரும்புகிறதோ, அதை முடித்துவைக்கிறார்கள். 80களில் சில அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்தியா நேபாளத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், நேபாளத்தில் உள்ள இந்தியாவின் நண்பர்கள், இந்தியாவின் எதிரிகள் ஆனார்கள். இதைத்தான் சீனா விரும்பியது. இந்திய அரசு தனது அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மும்பைத் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டி ருக்கும் இந்தியாவும், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளினால் இலங்கை அரசின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களும் இணைந்தால் கடந்த இருண்ட காலங்களிலிருந்து இருதரப்புமே வெளியே வர முடியும்.''

னால், இந்தியாவின் நிலைப்பாடுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கமாகவே இருப்பது உண்மை. ஏற்கெனவே ஒருமுறை மூக்கை நுழைத்த பூனை சுடுதண்ணி பட்டு ஓடி வந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பை இரண்டு பக்கமும் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். சொந்த நாட்டின் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஆயிரமாயிரம் இருக்க, இன்னொரு தேசத்துக்கான இரவல் துப்பாக்கியாக மாற வேண்டுமா என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வி.

சண்டையைத் தூண்டிவிட்டு, ஜெயவர்த்தனே போல ராஜபக்ஷேவும் ஒரு நாள் ஒதுங்கிக்கொள்ளக்கூடும். இன்னொரு பிரேமதாசா வந்து நம்மை யார் என்று கேள்வி கேட்டு விரட்டவும்கூடும். ஏற்கெனவே நடந்ததே மறுபடி நடப்பதுதான் தலைவிதி. ஆனால், முடிவுகளை எடுக்கும் தலைவர்கள் மாறிவிடுகிறார்கள். நிரந்தரமான பாதிப்பு மக்களுக்குதானே! அன்று தான் செய்த செயல்கள் 'தவறானவை' என்று பிற்காலத்தில் ஜே.என்.தீட்சித் சுயசரிதை எழுதியது போல பிரணாப் முகர்ஜியும் எழுதலாம்!



Comments