பான் கி மூனுக்கு கோடிக்கணக்கில் தந்திகள் அனுப்புங்கள் - பழ.நெடுமாறன்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த கோரி, ஐ.நா. பொது செயலாளருக்கு தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் ஈ.மெயில் அனுப்ப வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசுகையில்,

எங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகின்ற 17ம் திகதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. 19ம் திகதி கோவையிலும், 24ம் திகதி மதுரையிலும் பேரணி நடைபெறும். புதுவை, சேலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் பேரணி நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும்.அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த உள்ளோம். ஐ.நா. பொது செயலாளருக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் ஈ.மெயில் அனுப்ப வேண்டும். தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் மரண சாசனம் இலட்சக்கணக்கில் அச்சடித்தும், சி.டி.யாக தயாரித்தும் மக்களிடம் வழங்க உள்ளோம் என்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

நேற்று ஒரு செய்தியை பத்திரிகைக்கு கொடுத்தேன். அதில் முதலமைச்சர் கருணாநிதி பற்றி எந்த குற்றமும் சொல்லவில்லை. அதற்கு 8 பக்கம் மறுபடியும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவர் பூரண குணம் பெற நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் 4வது விவாத பொருளாக இலங்கை பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.முதலமைச்சர் கருணாநிதிக்கு ஐயா, உங்கள் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அப்படியொரு நிலை வந்தால், எங்கள் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் உங்களிடம் நேரே காட்டி வாக்ளிக்கச் சொல்கிறேன். உங்கள் எடுபிடிகளை வைத்து அறிக்கை வெளியிட வேண்டாம், மனம் இருந்தால் உங்கள் தொண்டர்களையும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனுப்பி வையுங்கள் என்றார்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில்,

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது கப்பல், கப்பலாக ஆயுதங்கள் இறக்குமதி செய்தது சிறீலங்கா அரசு. ஆனால் இங்கிருந்து என் சகோதரர்களுக்கு 10 லிட்டர் எரிபொருள் போய் விட்டால் கடத்தல் என்கிறார்கள். இனிவரும் இளைஞர்கள் எங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.இனிவரும் இந்நாட்டு இளைஞர்கள் கடல்வழியாக ஆயுதங்களோடு புறப்படுவார்கள். அப்படி ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை வந்தால் நான் முதல் ஆளாக நிற்பேன். உன் பாதுகாப்பு சட்டம் கால் தூசிக்கு சமம்.மாணவர்களே வீதிக்கு வாருங்கள், கிளர்ச்சி பரவட்டும், தமிழகம் கொந்தளிக்கட்டும். இந்திய ஒருமைப்பாடு சிதறிவிடும் என்ற பயம் இந்திய அரசுக்கு வரட்டும். என்னுடைய இந்த நிலைப்பாட்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

முதலமைச்சர் கருணாநிதி, நாங்கள் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக சொல்கிறார். ஆறரை கோடி தமிழ் மக்கள் உரிமையை மதிக்காத மத்திய அரசை மக்கள் கண்டிக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளின் தலைவரான நீங்கள் கண்டிக்க வேண்டும். அதற்கான ஆயுதம் அவரிடம் இருக்கிறது. பயன்படுத்த மறுக்கிறார் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,

ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறிய இந்திய அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளி கூண்டில் இந்திய அரசை நிறுத்த வேண்டிய தேவை இப்போது உள்ளது. இந்திய அரசு செய்த குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம்.சிறீலங்கா அரசின் இறையாண்மைக்குள் தலையிட்டது முதல் குற்றம். அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்தால் தான் இந்திய அரசு போரை நிறுத்த சொல்லும். இலங்கையில் நடைபெறும் போரில் பிரபாகரன் களத்தில் மோதி சாவாரே தவிர, மண்டியிட்டு சாகமாட்டார். உலக வரலாற்றில் பிரபாகரனுக்கு இணையாக புரட்சி தலைவர்கள் தோன்றவில்லை என்றார்.

கூட்டத்தில், பா.ஜ.க. பொது செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ம.க நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி, இயக்குனர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



Comments