இதயத்தைப்பிழியும் இடப்பெயர்வின் வலி அனுபவப் பதிவு

மனிதப் பேரவலத்தின் காட்சிகளாக வன்னியின் நாளாந்த நகர்வுகள் படுகொலைகளாலும் இடப்பெயர்வுகளாலும் நிரம்பி வழிகிறது. எங்குமே பாதுகாப்பற்ற கொலைவலயங்களே சிங்களத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வீதியில் செல்பவர் வீடுதிரும்பி வராவிட்டால் அவர் எறிகணை பட்டு மரணமடைந்துவிட்டாரோ எனக்கலங்கும் அளவிற்கு மரணங்கள் இங்கு மலிந்து கிடக்கின்றன.

குறைந்த பட்சம் எவ்விடத்திலாவது சென்று உயிர்வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் இலட்சக்கணக்கான தமிழ்மக்களின் இடப்பெயர்வுப் பயணம் இன்று ஒரு இடம், நாளையொருடம் எனும் அடிப்படையில் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. "எங்கிருந்து வந்து எறிகணைகள் மக்களைக் கொல்கின்றன எனத் தெரியவில்லை" எனும் மனிதநேய அமைப்பொன்றின் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அறிக்கை சிங்களத்தின் கொலை வெறித்தாக்குதல்களுக்கு மறைமுகமாக சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு தமிழர்களை அழிப்பதற்கு ஆயுத உதவிகளை வழங்கிவிட்டு, நேர்முகமாக தமிழர்களைக் காப்பாற்றப்போவதாக அரசியல் முகம் காட்டிநிற்கும் அயலகத்தின் நடவடிக்கைகள் வேறு தமிழர்களை புண்படுத்திநிற்கிறது.

ஒட்டுமொத்தத்தில் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் மூலம் ஈழத்தமிழனத்தின் இருப்பையே அழித்துவிட துடிக்கும் சிங்களத்தின் தாக்குதல் வெறிக்கு உலக நாடுகள் பல ஆசீர்வாதம் வழங்கியிருக்கிறது. இங்கு தமிழினத்தின் துயரப்பயணம் தொடர்கிறது.

"மன்னாரில் ஆமி செல்லடிக்கேக்க ஓடி ஓடி வந்தம் இப்ப சுதந்திரபுரம் றோட்டால நடந்துபோகவே முடியவில்லை" எனச் சொன்ன ஒருவரின் கூற்றிலிருந்து மக்களின் நெரிசலான பயணத்தின் துயரத்தை விளங்கிக்கொள்ளலாம்.

தொடக்கத்தில் இயன்றவரை தமது உடமைகளை ஏற்றிப் புறப்பட்ட மக்களில் பலர் பலமுறை இடம்பெயர்ந்த நிலையில் தாம் கொண்டுவந்த உடமைகளை இயன்றவரை குறைந்து மனச்சுமைகளை மட்டும் ஏற்றியவாறு பயணிக்கின்றனர்.

எங்கே இடம்தேடுவது யார்காணித்துண்டு தருவார்கள் என்ற இலக்கற்ற பயணங்களால் பலர் இடம்தேடி அலைவதைக் காணமுடிகிறது. பலமுறை பலபகுதிகளிலிருந்தும் இருந்து இடம்பெயர்ந்து உடையார் கட்டுப் பகுதியில் தங்கியிருந்தவர்களை சிங்கள இராணுவத்தின் எறிகணைகள் மீண்டும் திரத்தி விட அங்கிருந்து அவர்கள் ஓடுகின்ற அவலம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இத்தொடர் எழுதப்பட்டுக்கொண்டிருக்கையில் கூட பல பத்து எறிகணைகள் கூட அண்மையாக விழுந்துவெடித்துக் கொண்டிருக்கின்றன. திடீர் திடீர் என்று எறிகணைகள் வந்துவிழ பலர் உயிரிழந்த நிலையில் சிங்கள அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே படுகொலைகள் நிகழ்ந்துவிட அப்பகுதியில் இருந் தமக்கள் எதுவித பொருளும் எடுக்காத நிலையில் அவலப்பட்டு ஓடிய காட்சியை கடந்த 26,27,28 ஆகிய திகதிகளில் உடையார்கட்டுப் பகுதிகளில் காணமுடிந்தது.

நித்திரையில் கிடந்த தம்பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடிவந்தவர்களும் கடைக்குப் போன தம்மகள் எங்கே எனத்தேடிய தாயும். பதுங்குகுழி அருகாக எறிகணை வந்து வீழ தம் உறவுகள் என்னபாடுபட்டார்கள் என்று பார்க்க அவகாசமற்று பாய்ந்தோடி வந்து அழுதுகுழறிய பெண்ணுமென அன்றைய அவலக்காட்சிகள் பார்ப்பவர் கண்களை பனிக்கவைத்தன.

அவ்வாறு ஓடிய ஒவ்வொருவரும் தமது குடும்ப உறவுகளைத் தேடிய வலியினை இங்கே வார்த்தைகளால் கூறிவிடமுடியாது. பலர் தமது உறவுகள் எறிகணை வீச்சினால் இறந்துவிட்டார்கள் எனக்கருதி அழுதனர்.

அவ்வளவுக்கு அன்றைய தினங்களில் எறிகணைத் தாக்குதல்கள் மக்களை பெருமளவில் பலியெடுத்தன. ஒருவேளை உணவைக்கூட உண்ணமுடியாத நிலைமைக்கு சிங்களப்படைகளின் எறிகணைத்தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. முல்லை பரந்தன் வீதி பயன்படுத்த மக்கள் அச்சப்படுகிறார்கள்.

இவ்வீதியின் எப்பகுதியும் எறிகணை வீச்சுக்கு தப்பவில்லை எனக்கூறும் அளவிற்கு இவ்வீதி பல படுகொலை நடத்தப்பட்ட இடமாக இருந்தது. இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த உழவூர்தி மீது எறிகணை வீழ்ந்து வெடித்து அது எரிந்துகொண்டிருந்த காட்சியும் அதன் அருகே அனாதரவாக மனிதச்சடலம் ஒன்று கருகி உருத்தெரியாத காணப்பட்ட காட்சியுமாக இங்கு படுகொலைகள் கணக்கற்றுத் தொடர்கின்றன.


தன் அயலவர், உறவினர் படை எறிகணை வீச்சால் இறந்த செய்திகூட பலருக்குத்தெரியாது துயரம் தொடர்கிறது இன்று இருப்போர் நாளை இருப்பாரா என்ற நிலையில் இன்று தமிழினம் மரணத்தின் விழிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் ஒன்று இரண்டாகத் தொடங்கிய சிங்களத்தின் படுகொலைகள் இன்று நாளாந்தம் பத்து நூறு எனத்தொடர்கிறது.

இம்மாதம் இன்று வரையான நாட்களில் மட்டும் 200இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் பலநூறுபேர் காயமடைந்திருக்கிறார்கள். இங்குள்ள வைத்தியாசலைகள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அதிகரித்த காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அவை பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினதும் மருத்துவர்களதும் மருத்துவமனை உத்தியோகத்தர்களதும் அர்ப்பணிப்பு நிறைந்த பணியினால் காயமடைந்தபல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. எங்கெல்லாம் வைத்தியசாலை உள்ளனவோ அங்கெல்லாம் இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து உயிர்பலியெடுக்கும் சூழலில் அதனைக்கண்டு அஞ்சாது உயிர்காக்கும் பணியைத் தொடரும் பணி அளப்பரியது.

சாதாரண சூழலுக்கு அப்பாற் பட்டது போர்பகுதியில் மனிதாபிமானப்பணியாற்றுகிறோம் என உலக அளவில் தமக்கு பட்டம்சூட்டி உலாவரும் சர்வதேச அமைப்பொன்று சிங்கள இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலுக்கு அஞ்சி மக்களையும் கடந்து ஓடிய நிலையில் எமது பகுதி மருத்துவ உத்தியோகத்தர்களாலே அம்மக்கள் காப்பாற்றப்பட்ட செய்தியும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்திவிட்டு அப்பகுதிகள் மீது சிங்கள அரசு தாக்குதல்களை நடத்தியிருப்பதை எந்த சர்வதேச அமைப்பும் இதுவரை சுட்டிக்காட்டிக் கண்டிக்கவில்லை.


எறிகணைத் தாக்குதலால் நாளாந்தம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அப்பால் தாக்குதல் அச்சத்தால் இடம்பெயருகின்ற மக்களின் துயரம் மிகப்பெரியது. குறுகிய நிலப்பரப்பு நோக்கி நகரும் பலர் கூரைவிரிப்புக்கள் அற்றநிலையில் வெறுமனே குந்தியிருக்கிறார்கள் அவர்களிடம் சமைத்து உண்பதற்கான உணவுப்பொருட்களோ சமைப்பதற்குரிய பாத்திரங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

முன்னர் இடம்பெயர்ந்திருந்த நிலைகளில் நிவாரணப் பொருட்களை பெற்ற மக்கள் தாம் நிவாரணம் பெற்றுவந்த ப.நோ.கூ.சங்கம் காணாத தேடியலையும் நிலையும் நடந்தேறுகிறது. ப.நோ.கூ.சங்கங்களும் பலமுறை இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவை பல தமது இயங்கு நிலைகளை இழந்துள்ளன.

ப.நோ.கூ.சங்கங்களின் நிவாரணக்கிளைகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு வலைக்குள் அகப்பட்டதால் நிவாரணவிநியோகங்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு இவற்றினால் இறுதியில் பாதிக்கப்படுவர்களாக இடம்பெயர்ந்து ஏதுமற்று இருக்கின்ற மக்களே உள்ளனர் என்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகளை எப்படியாயினும் நிவர்த்திக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்போது மக்கள் மிக மிக நெருக்கமாக குடியமர்வதால் அங்கே சுகாதாப் பிரச்சினைகளும் பெருமளவு ஏற்பட வாய்ப்புண்டு சுந்தந்திர புரம் நீர்மட்டம் மேலே உள்ள பகுதி உள்ளதால் குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை எனக்கருதினாலும் இப்பகுதிகளில் மலகூடம் அமைப்பதுகூட பெரும்பிரச்சினையாகவுள்ளது.


மக்கள் நெருக்கமாக குடியமர்வதற்கு ஏற்ற அவர்களுக்கான மலசல கூடங்கள் அமைக்கவில்லையேல் பெரும் சுகாதாரப்பிரச்சினை ஏற்படுவதில் ஐயமில்லை. இவைதவிர இப்பகுதிகளை நோக்கியும் இராணுவத்தின் கொலைவெறித்தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அடுத்த கட்டம் எங்கேயும் இடம்பெயராத நிலையில் குறுக்கப்பட்ட நிலப்பரப்பில் குடியமர்ந்துள்ள இம் மக்களுக்கான உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பு பதுங்குகுழிகளில் மட்டுமே தங்கியுள்ளது.

-க.ப.துஸ்யந்தன்-



Comments