செஞ்சிலுவைச் சங்கத்திற்கே பாதுகாப்பு இல்லை என்றால்? தமிழ் மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்?

கொழும்பு தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையலுவலகம் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதல் மகிந்த அரசின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளையே எடுத்துக் காட்டுகின்றது.

இதன் மூலம் சிறிலங்கா அரசின் அராஐக நடவடிக்கையை சர்வதேச சமுகம் உணர்ந்து கொள்ள வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அதுவும் தலைநகரமான கொழும்பில் பாதுகாப்பு உயர் வலயத்தில் அமைந்திருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கே பாதுகாப்பில்லை என்றால்

வடகிழக்கில் உள்ள அதுவும் குறிப்பாக வன்னியில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமுகம் புரிந்து கொள்ள வேண்டும்ஃ

இன்றைய நிலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக மாறிவிட்டது. வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் பாதுகாப்பு வலயத்தை அமைத்த சிறிலங்கா அரசு அதன் படையினரைக் கொண்டு அப்பகுதியில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. வைத்தியசாலைகள் அனைத்தும் இன்று செயலிழந்து விட்டன. அங்கு செஞ்சிலுவைச் சங்கம் அமைந்திருந்த கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் செய்திகளை வெளியிட்டதன் காரணமாகவே கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கம் தாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு சிறிலங்கா அரசின் குண்டர்களே காரணமாகும்.

இணைத்தலைமை நாடுகள் உட்பட சர்வதேச சமுகம் சிறிலங்காவுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்காவி;ட்டால் மகிந்த அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் சர்வதேச சமுகம் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் அறிக்கைகளை விடுகின்றதே தவிர ஆக்கபூர்வமான முறையில் சிறிலங்காவுக்கு போரை நிறுத்துமாறு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் அடுத்தபடியாக இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை தமிழ் மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியுள்ளது.

இந்த விடயத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாளராகப் பணியாற்றிய நோர்வே கூட யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் நடந்துள்ளது இந்நடவடிக்கை தமிழ் மக்களை ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

இணைத்தலைமை நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து தமிழின அழிப்பை நிறுத்துவதென்றால் சிறிலங்கா அரசுக்கு இந்நாடுகள் நிதி வழங்குவதை நிறுத்தி பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியா இராணுவ தளபாடங்கள் மற்றும் இராணுவ பயிற்சி உள்ளிட்ட அனைத்து படைத்துறை உதவிகளையும் நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


Comments