வன்னி மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பினால் 67 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு

வன்னி மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் 67 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் உள்ள ஏறத்தாழ 67 ஆயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாது வீட்டில் முடங்கிக் கிடப்பது நாகரிகம் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் அரச தலைவர் என்ற வகையில் தாங்கள் இம் மாணவர்களின் அவலம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்த்து இம்மடலை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்.

நாங்கள் போரை எதிர்க்கின்றோம். போரின் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதில் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றோம்.

ஆனால், தங்கள் அரசாங்கம் தீவிரமாக படை நடவடிக்கைகளை முன்னெடுத்து எமது மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கி வருகின்றது.

இது தொடர்பாக முன்னரும் தங்களுக்கு எழுதியுள்ளோம். ஆனால் பயன் ஏற்படவில்லை. இவ்வாறான போரின் வெளிப்பாடாகவே வன்னியில் வாழும் மக்கள் மாபெரும் மனிதப் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாகவே மாணவர்கள் நிலையும் உள்ளது. இது நீக்கப்ட வேண்டியதாகும்.

2008 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் பாடசாலைகள் இயங்கவில்லை.

2008 ஆம் ஆண்டின் டிசம்பரில் எந்தப் பாடசாலையிலும் வகுப்பு ஏற்றத் தேர்வுகள் நடைபெறவில்லை.

2009 ஆம் ஆண்டு பிறந்த போதும் பாடசாலைகள் இயங்குவதற்கான களநிலை இருக்கவில்லை. போரும் இடப்பெயர்வும் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. இதுவே இப்போதும் தொடர்கின்றது.

தென்னிலங்கை மாணவா்களுக்கு ஆண்டு முடிவடையும்போது பாடப்புத்தகங்களும் சீருடைகளும் வழங்கப்படும் நிலையில் வன்னி மாணவா்களுக்கு இவை புறக்கணிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டிலும் இவை ஒரு பகுதி மட்டுமே கிடைத்தன. அனால் இந்த ஆண்டும் இம் மாணவர்களுக்கு முழுமையாகவே வழங்கப்படாமல் இருக்கின்றன. இது ஒரு பாரபட்சமான நடவடிக்கையாகும்.

சிறார்களின் நலன் குறித்து உலகில் அதிக கவனம் செலுத்தப்படும்போது வன்னியில் மட்டும் அது நிராகரிக்கப்படுவது கவலையளிக்கின்றது. தங்கள் பணிப்பின்படி போரைத் தீவரமாக முன்னெடுக்கும் படை மக்களை இலக்கு வைத்தே தாக்குதலை முன்னெடுக்கின்றது.

பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அப்பகுதிக்குள்ளே எறிகணை வீச்சை நடத்துவதனால் அன்றாடம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவா்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 300 பேருக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுள் ஏறத்தாழ 300-க்கும் அதிகமானவர்கள் குழந்தைகளும் சிறுவா்களும் ஆவர்.

இந்த குரூரமான படைத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இவர்கள் பொதுமக்கள் மட்டுமல்ல இவர்களில் குழந்தைகள், சிறுவா்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் அடங்குவர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவர்களில் பெரும்பாலான மாணவா்களின் தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் ஆவர். இதனால் இவர்களின் உளவுரண் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

2008 இறுதி ஆண்டின் தகவல்களின்படி வவுனியா வடக்கு மடு, துணுக்காய், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய 5 கல்வி வலயங்களிலும் உள்ள 350-க்கும் அதிகமான பாடசாலைகளில் ஏறத்தாழ 60 ஆயிரம் வரையான மாணவர்கள் கல்வி கற்று வந்திருக்கின்றனர்.

ஆண்டின் இறுதியில் முன் பள்ளிகளில் 7 ஆயிரம் சிறார்கள் தொடக்க கல்வியை கற்று வந்திருக்கின்றனர். இவர்கள் இந்த ஆண்டு பாடசாலைகளில் சேர உள்ளனர். மொத்தமாகப் பார்த்தால் 67 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் உள்ளனர்.

போரின் விளைவாக இம் மாணவர்கள் சொல்லொண்ணாத அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். இதில் முதலாவதாக பாடசாலைகள் இதுவரை திறக்கப்படாதால் கல்வி கற்றலுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

இது அப்பட்டமான மாணவா்களின் கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதேவேளையில் உணவு, உறையுள், குடிநீர், மலசலகூடம், மருத்துவம், சுகாதாரம் போன்றன இம் மாணவா்களுக்கு கிடைப்பதில்லை. இவை யாவும் சிறார்களின் பிறப்புரிமையை மீறும் செயலாகும். இதனை அரசாங்கம் மீறுவதை எம்மால் ஏற்றுக்கொளள முடியாது உள்ளது.

அதேவேளையில் கடந்த டிசம்பரில கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தேர்வில் கணக்குப் பாடம் திரும்ப எழுத முடிவு செய்யப்பட்டது. இதன்படி தென்னிலங்கையில் இப்பாடம் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

ஆனால், வன்னி மாணவா்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்களின் ஒரு ஆண்டு வாழ்வு பாழடிக்கப்பட்டு விட்டது. இம் மாணவாகள் மீண்டும் கணக்குப் பாட தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் படையினரின் தாக்குதல்களால் சிறுவா்களும் குழந்தைகளுமே அதிகளவில் பாதிக்கப்படுகினறனர். இது அவா்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எனவே, மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பாடசாலைகள் மீள திறக்கப்பட்டு மாணவா்கள் பாதுகாப்பாக கற்றல் செயறபாடுகளில் ஈடுபட வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

இப்போதைய புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 67 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுளளது.

எனவே, இம்மாணவா்கள் தங்கள் கல்வியைத் தொடர இருக்கும் முட்டுக்கட்டைகளை அகற்றி வன்னியில் உள்ள பாடசாலைகளை திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு மக்கள் சார்பாக தங்களை விநயமாக வேண்டிக்கொள்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments