தமிழீழத் தேசியக் கொடிகளுடன் சிட்னி மாநகரில் 'உரிமைக்குரல்' பேரணி: 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி மாநகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இதில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

சிட்னி மாநகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வு அகவணக்கத்துடன் தொடங்கியது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தமிழர்களின் கைகளில் தமிழீழ தேசியக் கொடிகளும் தமிழீழ தேசியக் கொடி தாங்கிய பதாகைகளும் தமிழீழ தேசியத் தலைவரின் படங்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்களுடன் பதாதைகளையும் தாங்கிய வண்ணம் இருந்தனர்.





"எங்களுக்கு வேண்டும் தமிழீழம்"

"எங்கள் தலைவன் பிரபாகரன்"

"அவுஸ்திரேலிய அரசே தமிழர்களை காப்பாற்று"

"சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"

"விடுதலைப் புலிகள் சுதந்திரப் போராளிகள்"

"முல்லைத்தீவில் ஆமியா தலைவருக்கே சவாலா"

போன்ற முழக்கங்களை எழுப்பியவாறும் கைகளில் பதாகைகளை தாங்கியவாறும் பேரணி நகரத் தொடங்கியது.





பேரணியின் முன்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை சித்தரிக்கும் வகையில் பிரேதப் பெட்டிகளையும் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை வெளிப்படுத்தியவாறு இளையோர் அரங்காற்றுகையை அவுஸ்திரேலிய மக்களுக்கு வெளிப்படுத்தினர்.

அத்துடன், மக்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக பாண்ட் வாத்தியங்களை இசைத்தவாறு இளையோர் பேரணியை முன்நடத்த மற்றைய அனைவரும் பேரணியாக தொடர்ந்து சென்றனர்.

மார்ட்டின் பிளேசில் இருந்து புறப்பட்ட இப்பேரணியானது எலிசபெத் வீதியூடாக பார்க் வீதியை அடைந்து அங்கிருந்து ஜோர்ஜ் வீதி வழியாக நகர சபை தொடருந்து நிலையத்தை தாண்டி நகர சபை மண்டபத்தின் வெளிப்புறத்தை அடைந்தது.





இப்பேரணி மனிதச் சங்கிலியாக சுமார் மூன்று கிலோ மீற்றர் நீளத்துக்கும் அதிகமான தமிழ் மக்களோடு சிட்னியின் மையப்பகுதியின் ஊடாக நகர்ந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் இதுவரை நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஆகக்கூடிய மக்கள் தொகையை இந்நிகழ்வு கொண்டிருந்ததாக நீண்ட காலம் இங்கு வசித்து வரும் தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று காலை 9:30 மணியில் இருந்து மக்கள் சாரை சாரையாக தொடருந்து மற்றும் பொதுப் போக்குவரத்துக்கள் மூலம் மார்ட்டின் பிளேஸ் பகுதியை நோக்கி வந்திருந்த காட்சியையும் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன், ஆயிரம் கிலோ மீற்றர் தூரங்களுக்கு அப்பால் உள்ள பிற மாநிலங்ளில் இருந்தும் குறிப்பாக மெல்பேர்ணில் இருந்தும் பெருமளவிலான மக்கள் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சிட்னி வாழ் தமிழர்கள் மட்டும் அல்லாது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வேற்றின சமூகத்தை சேர்ந்த பல மக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக சோசலிச கூட்டமைப்பு எனும் அமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்கும் வகையிலான செயற்பாடுகளைச் செய்தனர்.





நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களான ஜானு, ஏட்றியன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த மயில்வாகனம் தனபாலசிங்கம், அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி மனமோகன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியில் அனைத்து மக்களும் ஒருமித்து விண்ணதிர முழக்கங்களை எழுப்பி "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனக்கூறி மாபெரும் உணர்வெழுச்சியோடு நிகழ்வு நிறைவடைந்தது.






Comments