புலிகளையும் தமிழர்களையும் சேர்த்துக்கொல்லுங்க! -எமன் ஆன ராஜபக்சே!



இலங்கைப் பிரச்சனையில் இதுவரை இருந்து வந்த நிலையிலிருந்து இந்திய அரசின் குரல் கொஞ்சம் மாறியிருக் கிறது. சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், இதனை ஏற்காத அதிபர் மகிந்த ராஜபக்சே, ""ஆயுதங்களைக் கீழே போடாமல் யுத்த நிறுத்தம் கிடையவே கிடையாது'' என்று அறிவித்துள்ளார். மேலும் இவரது சகோ தரரான கோத்தபாய ராஜபக்சே, ""ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நாங்கள் ஏற்க முடியாது. இந்தியா தற்போது கூறியுள்ள யோசனையையும் நிராகரிக்கிறோம்'' என்கிறார் மிகக் கடுமையாக.

இந்த சூழலில், பிரணாப் முகர்ஜியின் கருத்து பற்றி புலிகள் தரப்பும் விவாதித்தது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன், ""பிர ணாப் விடுத்துள்ள வேண்டுகோளை அரசியல் அழுத்தத்தால் சொல்லப் பட்ட விஷயமாகத்தான் பார்க் கிறோம். மக்களை வெளி யேற்றுவதற்காக போர் நிறுத்தம் என்ற நிலையை இந்தியா எடுப்பது இடைக்கால நடவடிக்கையாகத்தான் இருக்கும். மேலும், தமிழர் தாயகம் மீது படை யெடுப்பு நடத்த வழங்கப்படும் ஒப்புதலாகவே கருத முடியும். ஆயுதங்களை கீழே போட இலங்கை மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதை நாங்கள் ஏற்க முடியாது. இந்த ஆயுதங்கள் எங்களின் அரசியல் கருவிகள் மட்டுமல்ல; தமிழ் மக்களின் பாதுகாப்பு கவசங்களும் இதுதான்'' என்று உரத்த குரலில் மறுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தங்கள் தங்கள் மீது வலிமையாக பரவுவதற்குள் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை முழுமையாக ஆக்ர மித்துக்கொள்ள தமிழர்கள் மீது கடுமையான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது ராணுவம். மார்ச் 2 மற்றும் 3-ம் தேதிகளில் மட்டும் நடத்தப் பட்ட தாக்குதலில் 98 பேர் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். 160 பேர் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

""இடைவிடாமல் தொடர்ச்சியாக எறி கணை தாக்குதலை ராணுவம் நடத்திக் கொண் டிருப்பதால் படுகொலை செய்யப்படுகிறவர்களின் உடல்களைகூட எடுக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் ராணுவ தாக்குதலில் கையை இழந்த கோவிந்தராசன். இறந்து போனவர்களின் உடல்களை அப்புறப்படுத்த முடியாத நிலையால் உடல்கள் அழுகிப்போய்க் கிடக்கிறது.

""இதனால் தொற்றுநோய் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனை சரிசெய்யா விட்டால் தொற்றுநோய்கள் தாக்கி மரணமடை பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாத்தளன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 3000 நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான மருந்துகள் இல்லை. மருந்துகளை அனுப்ப அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்திருக்கிறோம். மருந்துகள் அனுப்ப மறுக்கிறது அரசு. இதனால், படுகாயமடைந்துள்ள 3000 பேரும் அடுத்தடுத்து மரணமடைய நேரிடும் அபாயம் இருக்கிறது.

அத்துடன், சத்தான உணவும் கிடைக்காததால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து குழந்தைகள் இறந்து கொண்டிருக் கிறார்கள். போர் நடக்கும் பகுதிகளில் ராணுவ தாக்குதலில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையை போல, மருத்துவ மனையில் மருந்துகள் இல்லாமலும் உணவுப்பொருட்கள் இல்லாமலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் துவங்கியுள்ளது'' என்கிறார் முல்லைத் தீவு மாவட்ட சுகாதார சேவைகள் துறையின் பணிப்பாளர் டாக்டர் வரதராசன்.

உலக உணவுத் திட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி சமீபத்தில் முல்லைத்தீவுக் குள் வந்தது. இந்த உணவுப் பொருட்களை வாங்க மக்கள் அலை மோதினர். ஆனால், ஒருவேளை கஞ்சிக்கு மட்டுமே உணவுப்பொருட் கள் கிடைத்தன. முழுமையாக கிடைக்கவில்லை. தற்போது, உலக உணவுத் திட்டத்தால் வந்த உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டதால் மீண்டும் உணவு பற்றாக்குறை கடுமையாக முல்லைத் தீவினை சூழ்ந் துள்ளது. இதனால் பட்டினிச் சாவுகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் சாப்பிட எதுவும் கிடைக்காமல், 18 முதி யவர்களும் 12 சிறுவர், சிறுமிகளும் பட்டினியால் மரணமடைந்துள்ளனர்.

இதுதவிர, காடுகளில் சுற்றித் திரியும் மக்கள், கீரைவகைகள் என விஷ செடிகளை பறித்து சாப்பிட்டு விடுகின்றனர். இத்தகைய விஷ செடிகளை சாப்பிட்டும் மரணமடைந்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் இந்த பேரவலங்களை தடுத்து நிறுத்த ஐ.நா. உள்ளிட்ட உலக நாடுகள் பெரிய அளவில் முயற்சி எடுக்காததை கண்டித்து, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதுக்குடியிருப்பை 3 முனைகளில் சுற்றி நிற்கும் ராணுவத்தினர் மேற்குபுறம் தேவிபுரத்திலிருந்தும் கிழக்கில் கேப்பாபுலவிலிருந்தும் தெற்கே ஒட்டுச்சுட்டானிலிருந்தும் எறிகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர். புதுக்குடியிருப்பிலிருந்து இந்த 3 முனைகளும் 3 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து ஒரு அங்குலம்கூட நகர விடாமல் புலிகளின் ஊடறுப்பு படை யணியினர் ஆட்லெறிகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தி தடுத்து வைத்துள்ளனர். இதனை முறியடிக்க, கார்பட் பாம்களை சரமாரியாக வீசி வருகிறது ராணுவம். இந்த குண்டுகள் மக்களின் தற்காலிக குடியிருப்புகள் மீது விழுந்து தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையே, மேற்கு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்புக்குள் நுழைந்து விட்டோம் என்று சொல்லும் ராணுவம், புலிகள் சேட்டிலைட் மையத்தை கைப்பற்றியிருப்பதாக வும் அங்கு பிரபாகரனும் வைகோவும் (பழைய படங்கள்) எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கைப்பற்றியுள்ளோம் என்றும் தெரிவித்துள் ளது. இந்நிலையில், இந்தியாவில் நாடாளு மன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதை அடுத்து, 2-ந்தேதி இரவு ராணு வம் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை நடத்தியிருக்கிறார் ராஜபக்சே.

இந்த ஆலோசனையில், "இந்தியாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்திய அரசியல்வாதிகளின் கவனம் தேர்த லில்தான் இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு முழுமையான தாக்குதலை நடத்த வேண்டும். இதில் மக்களையும் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். ஒட்டு மொத்தமா கொல்லுங்க' என்று ஆலோசிக்கப் பட்டதாக கொழும்பில் செய்தி பரவியுள்ளது.

-கொழும்பிலிருந்து எழில்

Comments