''ஐ.நா-வின் குரலை எதிரொலிப்போம்!''

ழத் தமிழர் பிரச்னை எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் மையப் பிரச் னையாக மாறிவருகிறது. ஒருபுறம் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளை யில், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஐ.நா. போன்ற அமைப்பு கள், முன்னிலும் அழுத்தமாக இப்போது வலியுறுத்தத் தொடங் கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் ஹைகமிஷனர் நவநீதம் பிள்ளை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐ.நா. ஹைகமிஷனரோடு என்ன விவாதிக்கப்பட்டதுஎன்பதை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனால், 'இலங்கைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இந்தியா முனைப்போடு நடவடிக்கை எடுக்கவேண்டும்!' என வலியுறுத்தியதாக நவநீதம் பிள்ளை செய்தி யாளர்களிடம் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெற்காசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், அதன் கடமைகளையும்

சுட்டிக்காட்டியிருக்கிறார். 'உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தியா, சர்வதேச அரங்கில் முக்கியமான பங்கை ஆற்றிவருகிறது. அதற்கு செல்வாக்கு இருக்கும் அதேவேளையில், அதற்கென சில கடமைகளும் உள்ளன...' என்று குறிப்பிட்டுள்ள நவநீதம் பிள்ளை, 'ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஆசிய குழுவுக்குத் தலைமை வகிக்கும் இந்தியா, இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாடுபடவேண்டும்!' என்றும் வலியுறுத்தியிருக்கிறார். 'இந்தப் பகுதியில் எங்கெல்லாம் சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் இந்தியா தலையிட்டுத் தீர்வு தேடவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, இந்தியாவுக்கு மிக அருகிலுள்ள இலங்கை மற்றும் மியான்மரில் நிலவும் மிக மோசமான நிலைமைகளை சரி செய்வதற்கு இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!' என்று நவநீதம் பிள்ளை தன்னு டைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுடெல்லியில் பேட்டியளித்த நவநீதம் பிள்ளை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனஅழித்தொழிப்புப் போரை வன்மையாகக் கண்டித்ததோடு... 'போர் நடக்கும் பகுதிக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அனுமதிக்கவேண்டும்!' என இலங்கை அரசை வற்புறுத்தியிருக்கிறார். தற்போது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் முல்லைத் தீவு பகுதியில் எந்தவொரு சர்வதேச அமைப்பையும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் சிலர் மட்டும்தான் அங்கே இருக்கின்றனர். அவர்களும்கூட உண்மை நிலையை எடுத்துக்கூற முடியாதநெருக்கடியில் உள்ளனர். அவர்கள் உண்மையைக் கூறினால்... உடனடியாக சிங்கள அரசு அவர்கள்மீது தாக்குதல் நடத்துகிறது. ஏற்கெனவே செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் கொழும்பு நகரில் சிங்கள இனவெறியர்களால் தாக்கப்பட்டது. முல்லைத் தீவு பகுதியில் பணியாற்றிவரும் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் சிலரும் சிங்கள ராணுவத் தாக்குதலில் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

'முல்லைத் தீவு பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை!' என சிங்கள அரசு கூறிவந்தாலும் அது பச்சைப்பொய் என்பது நமக்கெல்லாம் தெரியும். நம்முடைய கருத்தை வலுப் படுத்தும் விதமாக ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கையன்றை வெளியிட்டிருக்கிறது. 'கடந்த ஜனவரி இருபதாம் தேதி முதல் மார்ச் ஏழாம் தேதி வரையிலான காலத்தில் முல்லைத் தீவு பகுதியில் 2,683 பேர் கொல்லப்பட்டதாகவும், 7,241 பேர் படுகாயப்படுத்தப்பட்டதாக'வும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அரசாங்கம் வரையறுத்த பாதுகாப்பு வளையத்தில் இருந்தவர்கள்தான்' என்றும் ஐ.நா-வின் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களும்கூட மிகவும் சிரமப்பட்டு சேகரிக்கப்பட்டதுதான். எனவே, 'இதை விடவும் அதிக எண்ணிக்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டி ருக்கக்கூடும்...' என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. மேலே குறிப் பிட்டுள்ள காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நூறு சதுர கிலோமீட்டரில் இருந்து நாற்பத்தைந்து சதுர கிலோ மீட்டராகச் சுருங்கிவிட்டது என்றும், அந்த நாற்பத்தைந்து சதுர கிலோமீட்டரில் பதினான்கு சதுர கிலோமீட்டர் பகுதி பாது காப்பு வளையமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. அமைப்பு குறிப்பிடுகிறது. பாதுகாப்பு வளையம் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த பதினான்கு சதுர கிலோ மீட்டர் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் இருப்பதாக 'சாட்டிலைட் இமேஜிங்' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஐ.நா. அமைப்பு கண்டறிந்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த முல்லைத் தீவு பகுதியில் எழுபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறிவந்தது பச்சைப் பொய் என்பது அம்பலமாகிவிட்டது. அந்தப் பொய் யைத்தான் இந்தியாவும் வழிமொழிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் தயாரித்துள்ள இந்த அறிக்கை இது வரை ஐ.நா-வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறிவந்த செய்திகளையும் மறுப்பதாகஉள்ளது. இலங்கையைப் போலவே தாக்குதல்கள் நடை பெற்றுவரும் சூடான் நாட்டின் தார்ஃபுர், பாலஸ் தீனத்தின் காஸா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பற்றி ஓரளவுக்குச் சரியான புள்ளி விவரங்களை வெளியிட்டு, அந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்,இலங்கை விஷயத்தில் உண்மையை மறைப்ப தாக ஏற்கெனவே விமர் சனங்கள்எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதத் தில் ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மோண்டாஸ் என்பவரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''நாங்கள் மக்களை காப்பாற்றத்தான் முயற்சிக்கிறோம். பிணங்களை கணக்கிடுவது எங்கள் வேலையல்ல...'' என்று கூறியிருந்தது இங்கே நினைவு கூறத்தக்கதாகும்.

இலங்கையில் போர் நடைபெற்றுவரும் முல்லைத் தீவு பகுதியில் சர்வதேச மனித உரிமை அமைப்பு களை அனுமதிக்கவேண்டும் என்று நவநீதம் பிள்ளை கூறியிருப்பதற்கு இலங்கை அரசு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் பலித கோஹனா இதைக் கடுமையாகக் கண்டித் திருக்கிறார். அதுபோலவே இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ''இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்யாவிட்டால்... அதை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்!'' எனப் பேசியிருப்பதற்கும் சிங்கள அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர், ''எங்களுக்கு அதிர்ஷ்டவசமாக சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நட்பு நாடுகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் சர்வதேச நாடுகளின் முயற்சியை நாங்கள் முறி யடிப்போம்!'' என்று கொக்கரித்திருக் கிறார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்னை பற்றி வழக்கமான விளக்கத்தைக் கொடுத்து பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போதுள்ள ஆட்சியின் அதிகாரம் வரம்புக்குட்பட்டதாக மாறிவிட்டது என்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால், இலங்கைப் பிரச்னையில் இந்தியா செய்ய வேண்டிய கடமைகளை அது எவ்விதத்திலும் தடுத்து விடவில்லை. அதைத்தான் ஐ.நா. ஹைகமிஷனர் நவநீதம் பிள்ளையின் கூற்று நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எனவே, மீண்டும் மீண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடக்கும் இன அழித்தொழிப்புப் போரை நிறுத்துவதற்கு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நவநீதம் பிள்ளை வலியுறுத்தியிருப்பது போல சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.

முல்லைத் தீவு பகுதியில் இப்போது மருத்துவ முகாம் அமைத்து உதவி நடவடிக்கைகளைச் செய்துவரும் இந்தியா, அங்கு கொல்லப்படும் தமிழர்கள் பற்றிய உண்மை விவரங்களை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒருங் கிணைப்பு அலுவலகம் தயாரித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் இன அழித்தொழிப்பு நடவடிக்கை பற்றி சர்வதேச அரங்கில் இந்தியா புகார் செய்யவேண்டும். இலங்கையை சார்க் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதோடு... காமன்வெல்த் மற்றும் ஐ.நா. அவைகளிலிருந்தும் நீக்குவதற்கும் இந்தியா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவேண்டும். 'இப்படிச் செய்வோம்...' என்று சொன்னாலே போதும், உடனடியாக சிங்கள அரசு போரை நிறுத்திவிடும். இதைச் சொல்வதற்கு இன்றைய மத்திய அரசுக்கு நிச்சயமாக அதிகாரம் இருக்கிறது. தேர்தல் வந்துவிட்டது என சாக்குப்போக்குச் சொல்லி, மத்திய அரசு தன்னுடைய கடமையைப் புறக்கணித்துவிடக் கூடாது.

சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகியவற்றை தன்னுடைய நட்பு நாடுகளாகக் கூறும் இலங்கை அரசு, இந்தியாவை அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை என்பதை மத்திய அரசு கவனிக்கவேண்டும். இன்னும் எவ்வளவு ராணுவ, பொருளாதார உதவிகளை இந்தியா செய்தாலும் சிங்கள அரசு, இந்தியாவை ஒருபோதும் நட்பு நாடாக நினைக்காது. எனவே, மத்திய அரசு தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டு தென்னாசிய பிராந்தியத்தில் தனக்குள்ள அதிகாரத்தையும், கடமை யையும் செயல்படுத்த முன்வரவேண்டும். இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்தவேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் பிரச் னையை தேர்தல் பிரச்னையாக முன்வைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் நடத்த முயற்சிப்பது சரியல்ல.

குறுகிய அரசியல் லாபங்களை எண்ணாமல் ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க எல்லாக் கட்சி களுமே குரலெழுப்ப வேண்டிய நேரம் இது. இங்குள்ளவர்கள் ஒருவரையருவர் விமர்சித்துக் கொள்வதில் ஆற்றலை வீணாக்காமல் அனைவரும் ஒரே குரலில் மத்திய அரசை வலியுறுத்தினால்... ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழித் தொழிப்புப் போர் நிறுத்தப்படுவது நிச்சயம்.

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

Comments