சீமான் கைது பழிவாங்கும் செயல்: ராமதாஸ்

புதுச்சேரி: திரைப்பட இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்று, சிறையில் அவரை சந்தித்துப் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுளார்.

Ramadoss

File
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது தமிழக காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள இயக்குனர் சீமானை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில், "அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தென்திசையிலே (இலங்கை) ஒரு இனம் அழிக்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுவதைக் கண்டித்து, குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் சீமான் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் நோக்குடன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோள் ஆகும்" என்றார்.

Comments