புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் கவசப் போர் ஊர்தி தாக்கியழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது கவசப் போர் ஊர்தி (Tank) தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது.

இதில் படையினரின் கவசப் போர் ஊர்தி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.

அதன் அறிகுறியாக, விடுதலைப் புலிகள் இரவு நேரத்தில் ஊடுருவித் தாக்கி விடலாம் என்ற அச்சத்தில் சிங்களப் படைகள் தங்கள் முன்னணி நிலைகளைச் சுற்றி மின் விளக்குகளை பொருத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் முல்லைத்தீவு நகர காப்பு நிலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் 59 டிவிசனின் துருப்புக்கள் பலர் தற்போது தப்பியோடுவதாகவும் கடந்த 27 ஆம் நாள் வரையுமான ஒரு மாதத்தில் மட்டும் அந்த டிவிசனில் இருந்து குறைந்தது 100 படையினர் வரை தப்பியோடியுள்ளதாகவும் நம்பகமான உள்ளகத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஏனைய சிங்களப் படையினரின் டிவிசன்களில் இருந்து தப்பியோடுவோர் தொகையும் இந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் அது குறித்த சரியான தொகை விபரங்களைப் பெற முடியவில்லை.

Comments