ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நேற்று இருவர் தீக்குளிப்பு

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் தமிழகத்தில் நேற்று இருவர் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சியையும் மற்றொருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரான இராஜசேகர் (வயது 30), ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராஜசேகர் கூறியிருக்கின்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும்
மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


மருத்துவமனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் ஆனந்த்


தீக்குளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் இராஜசேகர்

இதனால் அவரின் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தீக்குளித்த இராஜசேகர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொருவரின் பெயர் ஆனந்த் (வயது 23). கடலூரை அடுத்த அன்னவெலி சிற்றூரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகனான இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டராக உள்ளார்.

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனவேதனை அடைந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடி "இலங்கைத் தமிழர்கள்!" வாழ்க
என்றும், "இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்" என்றும் ஆவேசமாக முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இவர் தீயிட்டுக் கொள்வதைத் தடுக்கப் பலர் முயற்சித்த போதிலும், அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தீயிட்டுக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆனந்த், இராசசேகரன் ஆகிய இருவருக்கும் 99 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம், சிறீதர் என்கிற எழில்வளவன், கடலூர் தமிழ்வேந்தன், சிவகாசி கோகுலரத்னம், வாணியம்பாடி
வள்ளப்பட்டு சீனிவாசன் ஆகிய 9 பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கடலூர் ஆனந்தும், தத்தனூர் கீழவெலியைச் சேர்ந்த இராசசேகரும் தீக்குளித்திருக்கின்றனர்.

Comments