தேர்தல் அறிவிப்புடன் புது வேகத்தில் நகரும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள்

ஈழத்தில் தொடரும் தமிழினப் படுகொலையை கண்டித்தும் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் "புயலில்' சிக்கி தொவு ஏற்பட்டு விடுமோ என்று தமிழுணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்துக்கு மாறாக போராட்டங்கள் புதுவடிவம் பெற்று முழுவீச்சில் வீறுகொண்டுள்ளதுடன் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியல் ஆக்குவோம் என்று தேசிய, மாநில அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் "தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பின்' சார்பில் இருபத்து ஐந்து அமைப்புகள் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பாக "தூதரகத்தை இழுத்து மூடும்' போராட்டத்தை ஒருபுறம் நடத்த, மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஐம்பது கிலோ மீற்றர் தூர "நாம் தமிழர் நடைப்பயணம்' அறுநூறு குழுக்களாக மாவட்டம் தோறும் பிரிந்து செயல்பட மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை நிரப்பியுள்ளனர்! இத்தனைக்கும் நடுவே, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென அறிவித்திருக்கும் ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் சிகரம் வைப்பதுபோல் அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மும்முனைப் போராட்டங்களில் மக்கள் இன்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர்.ஒருபக்கம் வழக்கறிஞர்கள், பொலிஸார் மோதல் விவகாரம்.மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தலின் எதிரொலி.நடுவே இருபக்கங்களையும் இணைக்கும் ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மூண்ட பயங்கரமோதலைத் தொடர்ந்து இருசாராருக்கும் ஆதரவாக அங்குமிங்கும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கறுப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த வாரம், வழக்காட முயற்சித்த தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றப் புறக்கணிப்பு செத அ.தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர் களுக்குமிடையில் மூண்ட மோதல், பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்திலும் தொடர்ந்து வன்செயலில் முடிந்தது. தி.மு.கழக வழக்கறிஞர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையையும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கலைஞர் கருணாநிதி உருவ பொம்மையையும் எரிக்கமுயன்று தடுக்கப்படவே இவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் பதாகைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

சென்னையில் ஐநூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில மாவட்ட தலைநகரங்களில் வாயில் கறுப்புத் துணி கட்டி வழக்கறிஞர்கள் மௌன ஊர்வலம் நடத்தினார்கள். சென்னை உயர் நீதிமன்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா,(டில்லி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் அறிக்கை தாக்கல் செதிருந்த போதிலும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வரை மேற்படி அறிக்கை மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், மோதலுக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அந்த நடவடிக்கையும் வெறும் இடமாற்றம் என்றில்லாமல் இடைநீக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பொலிஸ் வழக்கறிஞர்கள் மோதல் பின்னர் வழக்கறிஞர்களுக்கிடையே மோதலாக மாறி, இப்பொழுது கட்சி ஆதரவு வழக்கறிஞர்கள் மோதலாக முடிந்திருக்கிறது. இவர்கள் மோதலினால் நீதிமன்றங்களே இயங்கமுடியாதிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நிலைமை

கட்சியைக் கட்டிக் காப்பதிலும் கூட்டணி உருவாக்குவதிலும் கடந்தவாரம் முழுவதும் கணக்குப் பார்த்த அரசியல் தலைவர்கள், நாளை முதல் தங்கள் பலத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்குவார்கள். இன்றைய நிலையில் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி என்றும் பாரதிய ஜனதா கூட்டணி என்றும் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் எட்டுக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணி என்றும் மூன்று முக்கிய அணிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி உதயமாகும் மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், பார்வார்ட் புளக், புரட்சிகர சோஷலிஸ்ட், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, மதசார்பற்ற ஜனதாதளம் அ.தி.மு.க. காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்து, அழைப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் "நான் விடுத்தது அழைப்பல்ல, வெறும் ஆலோசனை' என்று ஜெயலலிதா இப்பொழுது விளக்கம் அளித்திருப்பதன் மூலம் மூன்றாம் அணியில் அ.தி.மு.கழகம் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது நிலைபற்றி வாதிறக்காவிட்டாலும் அவருக்கு காங்கிரஸ் தி.மு.க.கூட்டணியில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பதாக தகவல். தொல்.திருமாவளவனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியில் வைகோ இருப்பதையும் உரத்தகுரலில் புலி ஆதரவு எழுப்பியும் "அம்மா' கண்டுகொள்ளாமல் இருப்பதையும் காரணம் காட்டி வெற்றி ஒன்று மட்டும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று "டில்லி அம்மா' கூறி வாயை அடைத்துவிட்டாராம். "நான் தி.மு.க. கூட்டணிக்காரன். காங்கிரஸ் கூட்டணியில் நான் இல்லை' இது திருமா மந்திரம். இதுமட்டுமல்ல, "ஈழத்தமிழன் தமிழினம் இதுதான் எனது குறிக்கோள். இலட்சியம். தேர்தல், பதவி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!' என்று அடிக்கடி கூறுகிறார் தொல்.திருமாவளவன்.

தேர்தலில் குதிக்கும் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் தனித்துப் போட்டியிட தயாரில்லை. ஏதாவது ஒரு அணியின் பச்சை விளக்கை எதிர்பார்த்திருக்கிறார்.

ஈழத் தமிழர் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலினால், பிரசாரத்தினால்,ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் தொவு ஏற்பட்டுவிடுமோ என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சப்பட அவசியமில்லாத அளவுக்கு உணர்வுத் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிகள் முழு அளவில் திறக்கப்படாதபோதிலும் மாணவர்களின் பங்களிப்பு நீடிக்கிறது. பல்வேறு போராட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். கட்சிகள் தரப்பில் மட்டுமன்றி தமிழ் அமைப்புகள் கூட மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இருபத்து ஐந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் போரா?ட்டத்தை நடத்தின. "தமிழ் மக்களே அணிதிரள்வோம்' "ஈழத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவோம்' என்று முழக்கமிட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழீழ விடுதலை ஆதரவுக் கூட்டமைப்பு ஆதரவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் முந்நூறு பேர் கைதாகி விடுதலை செயப்பட்டனர். ஈழத் தமிழின விடுதலைக்கும் ஆதரவுக்கும் உரமேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு "தமிழ் மாணவர் பேரவை' என்ற வலுவான அமைப்பையும் அழிவிலிருந்து இனத்தையும் மொழியையும் காப்பாற்ற அரசியல் கடந்து பணியாற்ற "தமிழ் இளைஞர் பேரவை'யும் தொடக்க விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. தொல். திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், பாவாணன், இயக்குநர் மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்.கனகராஜ், வணிகர்சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார், மு.பாலகுரு, பேராசிரியர் அறிவரசு உட்பட பலர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

கட்சி சார்பற்ற தமிழ் இன உணர்வாளர்களை ஒன்றுசேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இயக்குநர் விஜ டி.ராஜேந்தர், ""தமிழ் இன பாதுகாப்பு முன்னணி' எனும் அமைப்பை ஆரம்பித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். தமிழினப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக கண்டனக் கூட்டங்களையும் ஐ.நா.வுக்கான மனுவில் இரண்டு கோடி கையெழுத்து வேட்டையும் நடத்திவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திவருகிறது.

வழக்கறிஞர்கள் பொலிஸ் மோதல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் களைகட்டியபோதிலும் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் போராட்டங்கள் எதுவுமே வலுவிளக்கவில்லை. மாறாக கொளுந்து விட்டெரிந்து தேர்தல் முடிவுகளையே மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிட்ட ஈழத் தமிழர் பிரச்சினை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு உடனடியாகவே பச்சை விளக்கு காட்டிவிட்டது!

பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதை முன்வைத்து பா.ஜ.கட்சி பிரசாரம் செயும் என்று பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். செதியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இலங்கை இனச் சிக்கலில் தமிழர்களுக்கு மத்திய அரசு இரண்டகம் செதுவிட்டது. பொறுப்பும் கடமையும் இருந்தும் செய வேண்டியதை செயாமல் செயக்கூடாததை இந்திய மத்திய அரசு செதிருக்கிறது.

தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாகர் கோவிலில் அத்வானியால் தொடங்கிவைக்கப்படும் பா.ஜ.கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை இனப்பிரச்சினையே முக்கிய சிக்கலாக முன்நிறுத்தப்படும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்' என்று இல.கணேசன் சூளுரைத்தார்.

இதே கருத்தை இயக்குநர் தங்கர் பச்சானும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சீமானைப் பார்த்துவிட்டுவந்த தங்கர்பச்சான் செதியாளர்களிடம், "தமிழர் அணி எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக வேண்டும். இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கட்சியே தங்களைத் துறந்து இதில் திரள வேண்டும். இந்த அமைப்பின் அரங்கேற்றமாக இயக்குநர் சீமான் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இயக்குநர் மணிவண்ணன் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அங்கு தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறும் குரல் கொடுத்து வருகின்றார். தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு மணிவண்ணன் அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் போட்ட "கணக்கு' இது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது பிரணாப் முகர்ஜி அங்கு போகவில்லை. ரணிலும் சந்திரிகாவும் டில்லி வந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வசம் இரண்டரை லட்சம் தமிழர் சிக்கியிருப்பதாக சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால், இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவித்துள்ளது. இதே எண்ணிக்கையைத்தான் ரணிலும் சந்திரிகாவும் இப்போது சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துகின்றார். அப்படியானால் இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை மறைத்து அல்லது ஈழத் தமிழருக்கான வெளிப்படை ஆதரவைக் குறைத்து மதிப்பிடும் அரசியல் கட்சிகள் நிச்சயம் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அரசியல் அவதானிகள் கருத்து.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

Comments