மிகை வெற்றிப் பிரசாரங்கள் போர் வெற்றிக்கு உதவுமா?

விடுதலைப் புலிகளுடனான போர் இலங்கை அரசாங்கத்துக்கு செலவுமிக்க ஒன்றாக மட்டுமன்றி பெரும் இழப்புகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் படையினரின் தொகையை வெளியிடுவதில்லை.

கடந்த நவம்பர் மாதத்துக்குப் முன்னர் நாடாளுமன்றத்தில் மாதாந்த அவசரகாலச் சட்ட நீடிப்பின் போது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முந்திய மாதத்தில் கொல்லப்பட்ட, காயமுற்ற படையினர் மற்றும் பாதி;ப்புக்குள்ளான பொதுமக்களின் எண்ணிக்கை விபரத்தை வெளியிட்டு வந்தார்.ஆனால், போர் உக்கிரமடைந்து படையினர் அதிகளவில் கொல்லப்பட்டு, காயமடையத் தொடங்கியதும் இந்த இழப்புக் கணக்குகளை வெளியிடுகின்ற முறையைத் தவிர்த்து வருகிறார்.

கடந்த நான்கு மாதங்களாக இந்த விபரங்கள் வெளியிடப் படவில்லை. ஆனால், நான்காம் கட்ட ஈழப் போரில் இந்தக் காலப் பகுதியிலேயே

அதிகளவிலான இழப்புக்களைப் படைத்தரப்பு எதிர்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.சண்டைகள் அக்கராயன் - நாச்சிக்குடா, முறிகண்டிப் பகுதிக்கு வடக்கேயும், ஏ - 9 வீதிக்குக் கிழக்கேயும் நகரத் தொடங்கிய போது - புலிகளின் தீவிரமான எதிர்த் தாக்குதல்கள் இடம்பெற்றன. படையினர் பெருந்தொகையில் கொல்லப் பட்டனர். ஆயிரக் கணக்கில் காயமடைந்தனர்.ஆனால், அரசாங்கமோ அந்தக் கணக்குகளை எல்லாம் கூட்டி மாதாந்தம் வெளியிட்டால் மக்கள் மத்தியின் போரின் தாக்கம் எத்தகையது என்ற உண்மை வெளிப்பட்டு விடும் என்று அஞ்சுகிறது. இதனால் போரின் இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைத்து வருகிறது.

முன்னர் புலிகளின் இழப்புக் கணக்குளை மிகைப்படுத்தியும், படைத்தரப்பு இழப்புகளை குறைத்தும் வெளியிடுவது அரசாங்கத்தின் ஒரு மரபாகவே இருந்து வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இந்தக் கணக்குகள் அனைத்தையும் கூட்டி - மொத்தக் கணக்குகளைப் பார்த்து கொழும்பு ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியன. இதையடுத்து புலிகள் தரப்பு இழப்புக் கணக்கை வெளியிடும் போக்கையும் அரசாங்கம் நிறுத்திக் கொண்டது.இப்போது நாளாந்த இழப்புக் கணக்கும் வெளியிடப் படுவதில்லை. மாதாந்த அறிக்கையும் தாக்கல் செய்யப் படுவதில்லை.

மொத்தத்தில் போரில் படையினருக்கு ஏற்படுகின்ற பாரிய இழப்புகள், சேதங்கள் முற்றாகவே மூடி மறைக்கப் படுகின்றன.நாளாந்தம் பாதுகாப்பு அமைச்சும், பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையமும் வெளியிடும் அறிக்கைகளில் படையினருக்கு சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டிருக்கும். இது வழக்கமான நிகழ்வாகி விட்டது.கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி ஒன்று எழுப்பப் பட்டது.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சண்டைகளில் கொல்லப்பட்ட படையினர் மற்றும் காயமடைந்தோர் விபரங்களையும், அவர்கள் காயமுற்ற அல்லது கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட முழுமையான விபரங்களையும் வெளியிடுமாறு கோரிக்கை விடபட்டிருந்தது.ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விபரங்களை வெளியிட முடியாதென்று அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்து விட்டார்.

போரில் கொல்லப்பட்ட படையினரின் விபரங்களை வெளியிடுவது எந்த வகையில் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்?படையினர் பேரிழப்பைச் சந்தித்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகுமே தவிர, இழப்புகள் குறைவாக இருந்திருந்தால் அரசாங்கம் இதை மறைத்திருக்காது.அப்படி மறைப்பதற்கான தேவையோ - நியாயமோ இருக்காது.அதேவேளை, கடந்த மாதம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கத் தொலைக்காட்சி பேட்டி கண்டது.ஜனவரி 6 ஆம் திகதி ஒளிபரப்பான இந்தப் பேட்டியின் போது-“கெரில்லா எதிர்ப்பு போரில் ஒரு கணக்கீட்டு முறை உள்ளது. கெரில்லாக்களுக்கும் படையினருக்கும் இடையிலான சண்டைகளில் மரணவீதம் 1:5 என்ற அடிப்படையில் இருக்கும்.

ஆனால், 11,000 புலிகள் கடந்த 3 வருடங்களில் அதாவது 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இறந்த போதும் - படையினர் வெறும் 2,000 பேர் தான் கொல்லப் பட்டிருக்கின்றனர்” என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.அதேவேளை, கடந்த 14 ஆம் திகதி அதே தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பேட்டியளித்திருந்தார்.அதில் கடந்த 3 வருடங்களில் 3,703 படையினர் கொல்லப் பட்டதாக தெரிவித்திருந்தார்.ஆக, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கணக்குக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கணக்குக்கும் இடையிலான வித்தியாசம் என்பது சாதாரணமானதல்ல.

1700 படையினரின் மரணத்தை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா குறைத்துக் காட்ட முயன்றிருக்கிறார்.அதேவேளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கூட, உண்மையான கணக்கைக் காட்டியிருப்பார் என்பதற்கில்லை.இப்போது வன்னிப்போர் உக்கிரமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அளித்துள்ள பேட்டியொன்றின் போது - கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1000 படையினர் வரை காயமுற்றதாக கூறியிருந்தார்.ஆனால், அவர் கொல்லப்பட்ட படையினரின் கணக்கை வெளியிடவில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் பல நூற்றுக் கணக்கானவை. ஆனால், அரச படைகளோ இழப்புக்களைப் பற்றி வாய் திறக்கவில்லை.கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில வாரஇதழ் 33 படையினர் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது. அதேவேளை ஒரு பாதுகாப்பு இணையத் தளம் 18 படையினரே மரணமானதாக தகவல் வெளியிட்டது.இப்போது அதே இணையத்தளம் படையினரின் 3 பஸ்கள் மீது குறித்த தினத்தன்று புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி. தாக்குதலில் மாத்திரம் 60 இற்கும் அதிகமான படையினர் மரணமானதாகக் கூறுகிறது.

இது போரில் ஏற்படும் இழப்புகள், காயங்களை படைத்தரப்பு எந்தளவுக்கு மறைக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.புதுக்குடியிருப்புக்குத் தெற்கே புலிகள் நடத்திய ஊடறுப்பின் போது 59-3 பிரிகேட் சிதைந்து போனது. அதன் கட்டளை அதிகாரியான கேணல் ஜெயந்த குணரட்ண இடமாற்றம் செய்யப்பட்டார்.அதுமட்டுமன்றி அந்த பிரிகேட்டே இப்போது ஓய்வு நிலையில் வைக்கப் பட்டிருக்கிறது. அந்தளவுக்கு அடி வாங்கிய களைப்பு.இதற்குப் பதிலாக 53 ஆவது டிவிசனையும், புதிதாக உருவாக்கிய 68 ஆவது டிவிசனையும் களத்தில் இறக்கியிருக்கிறது படைத்தலைமை.புலிகளின் ஊடறுப்பின் போது படையினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படவில்லை - இழப்புகள் ஏற்படவில்லை என்றால், எதற்காக 59-3 பிரிகேட் அங்கிருந்து அகற்றப் பட்டது? அதன் கட்டளை அதிகாரி எதற்காக மாற்றப் பட்டார்?எதற்காக மாங்குளத்தில் றிசேவ் நிலையில் வைக்கப்பட்டிருந்த 53 ஆவது டிவிசன் களமுனைக்கு கொண்டு வரப் பட்டிருக்கிறது? இப்படிப் பல கேள்விகளை நீட்டிக் கொண்டே போகலாம். ஆனால், அரசதரப்பில் இருந்து பதில் வராது.

படைத்தரப்பும் சரி- அரசாங்கமும் சரி, ஒரு விடயத்தை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். போரில் ஏற்படும் இழப்புகளை மறைத்து விட்டால் புலிகளை இலகுவாக வென்று விட்டதாக மக்கள் நம்புவார்கள் என்பதே அந்த நம்பிக்கை.இது கண்ணை மூடிக் கொண்டு பூனை பால் குடித்ததற்கு ஒப்பானது

.இப்போது கொழும்பில் இருந்து வெளியாகும் எந்த ஊடகமுமே போர்க்கள நிலவரம் பற்றிய உண்மையான ஆய்வை எழுதுவதில்லை.அரசுக்கு சார்பான கருத்துகள் மட்டும் வெளிவருகின்றன. அரசின் தகவல்கள், கணக்குகள் பற்றி எவரும் ஆராயவோ- ஆய்வு செய்யவோ அல்லது கேள்வி எழுப்பவோ முற்படுவதில்லை. இது அரசாங்கத்துக்கு இன்னமும் வசதியாகி விட்டது.படையினர் பின்னடைவைச் சந்திக்கவில்லை என்றால் - சண்டையில் இழப்புகளை எதிர்கொள்ளவில்லை என்றால் முன்னர் இருந்த படையணி எதற்காக மாற்றப் பட்டது? புதிய படையணிகள் எதற்காக கொண்டு வரப்பட்டன? பொறுப்பாக இருந்த தளபதி எதற்காக மாற்றப் பட்டார் என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதில் கூறமுடியாது.

இத்தகைய கேள்விகளை ஆய்வுகளாக்க முடியாத நிலை கொழும்பு ஊடகங்களுக்கு இருப்பதால் அரசின் இப்போதைய பொய்க் கணக்குகளும், மூடி மறைப்புகளும் மக்களுக்கு உண்மையாகத் தெரிகிறது.வன்னியில் இப்போது நடக்கின்ற போரில் படையினருக்கு ஏற்படுகின்ற இழப்புகளை மட்டும் அரசாங்கம் மறைக்கவில்லை.இந்தப் போருக்கு முடிவுகட்டப் போவதாக - நாட்கணக்கான காலக்கெடுக்களைக் கூட விதித்து தென்னிலங்கைச் சிங்கள மக்களை ஏமாற்றி வருகிறது.மத்திய, வடமேல் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது - கடந்த மாதம் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் போன்றோர், புலிகள் இயக்கம் பெப்ரவரி 7 ஆம் திகதிக்குள் அழிக்கப்பட்டு விடும்.அவர்களின் வசம் இருக்கின்ற பகுதிகள் அனைத்தும் படையினரால் கைப்பற்றப்பட்டு விடும் என்று காலக்கெடு விதித்திருந்தனர்.ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் புலிகளை அரச படைகளால் அழிக்க முடிந்ததா? ஆனாலும் அரசாங்கம் இன்னமும் புலிகளை முற்றாகத் தோற்கடிப்பது என்ற பகல் கனவோடு படைநகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

புலிகள் இயக்கத்தின் அழிவு என்பது எது என்பதை இலங்கை அரசாங்கம் தப்பான கணிப்புகளினூடாகவே பார்க்கிறது.இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களில் ஒருவரேனும் சுதந்திரமாக - சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கு ஆசை கொண்டிருக்கிறாரோ அதுவரையில் புலிகள் இயக்கத்தின் அழிவு சாத்தியப்படாது.

இன்றைய நிலையில் புலிகளின் பின்னடைவு, பிரதேசங்களின் இழப்பாக, தளபதிகள், போராளிகள், ஆயுதங்களின் இழப்பாக, படையணிகளின் இழப்பாக இருக்கலாம்.ஆனால் இது நிரந்தரமானதா என்பது தான் முக்கியம். இப்போது புலிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றிக் கொள்வதில் அக்கறை காட்டி வரும் படைத்தரப்புக்கு, அடுத்த கட்டத்தில் நடக்கப் போகின்ற சண்டைகளைக் கையாள்வது சுலபமானதாக இருக்குமா என்பது சந்தேகமே.புலிகள் இப்போதே அரசபடைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் நடமாடத் தொடங்கி விட்டனர்.

கடந்த வாரத்தில் ஒட்டுசுட்டானுக்கு தெற்கே, புளியங்குளத்துக்கு அருகே என்று சண்டைகள் நடந்திருக்கின்றன.இந்தச் சண்டைகளானது புலிகள் தமது அணிகளை உட்புறமாக நகர்த்தியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.இது படைத்தரப்புக்கு அடுத்த கட்டச் சமர் மிகவும் சிக்கலான கண்ணுக்குப் புலப்படாத எதிரியை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலை ஏற்படுத்தப் போகிறது.

அரசபடைகள் வன்னியின் காடுகள் எங்கும் புலிகளைத் தேடி அலைந்து அலைந்து களைத்துப் போகும் நிலை உருவாகப் போகிறது. புலிகளிடமிருந்து முழுப் பகுதியைக் கைப்பற்றினாலும் சரி- கைப்பற்றா விட்டாலும் சரி அடுத்த கட்டமாக இதுவே நடக்கப் போகிறது என்பதையே புலிகளின் ஊடுருவல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.அரசாங்கம் தனது படை பலத்தைக் கொண்டு புலிகளை அழித்து விடலாம் என்று கணக்குப் போட்டாலும் அது அந்தளவுக்கு இலகுவான விடயமாக இருக்காது என்பது இப்போது புரியத் தொடங்கியிருக்கும்.

வன்னிக்கான சண்டைகளை பெப்ரவரி மாதத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரும் படைத்தரப்பின் காலக்கெடு பிசகிப் போனதில் இருந்தே அரசாங்கத்துக்கும் படைகளுக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும்.ஆனால், அதைப் புரிந்தாலும் புரிய மறுக்கின்ற வகையில் - சிங்களப் பேரினவாதத் திமிரும் அதன் ஆதிக்க மனப்பாங்கும் போரை ஒரு போதும் இடைநிறுத்த இடமளிக்காது.

எனவே, முடிவில்லா அழிவுப் போருக்குள் தானே சென்று சிக்கிக் கொள்வதில் பிடிவாதமாக இருக்கின்றது இலங்கை அரசும் மற்றும் அதன் படைகளும். இவற்றின் இராணுவத் திமிர் அடக்கப்படும் வரையில் போரை நிறுத்தும் எண்ணம் அவர்களுக்கு வரப்போவதில்லை.

எனவே படைத்தரப்பின் மேலாதிக்கத்தை தகர்கின்ற சக்தியைப் புலிகள் மீளப் பெறும் வரையில் போருக்கு முடிவோ ஓய்வோ கிடைக்காது.அத்துடன் இந்தப் போருக்காக அரசாங்கமும் படைத்தரப்பும் கொடுக்கப் போகின்ற விலையும் குறைவானதாக இருக்கப் போவதில்லை.

அங்கதன்

நன்றி: நிலவரம்

Comments