"வேரோடு இணைதல்"

அன்று ஞாயிற்றுக்கிழமை. வழமை போலவே நூலகம் செல்ல ஆயத்தமானேன். இருபத்து மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்புத் தொகுதியில் பதினாறாவது மாடியில் எனது மனை. திரையை விலக்கி சாளரத்தூடாக வெளியில் பார்த்தபோதே இரவு கடும் பனி பொழிந்திருந்தமை தெரிந்தது.

கங்கணம் கட்டிக் கொண்டு வீசும் கடுங் காற்றுக்கு ஈடு கொடுக்கக் கூடியதாகத் தலையிலிருந்து கால் வரை தேவையான குளிர்கால ஆடைகளை அணிந்து பனிக்காலத்துக்குரிய பாதணியையும் போட்டுக்கொண்டேன்.

மறக்காமல் கைத்தொலைபேசி, தண்ணீர்ப்போத்தல் மற்றும் மீளக் கொடுக்கப்பட வேண்டிய சில நூல்கள், சர்வதேச விருதுகள் பல பெற்ற 'The Pianist' ஒளிநாடா ஆகியவற்றை எடுத்தபடி வீட்டுக் கதவைப் பூட்டி விட்டு ஏற்றியுள் நுழைந்து சில வினாடிகளுள் நிலக்கீழ் வாகனத்தரிப்பிடத்தை அடைந்தேன்.

அந்த நேரம், எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. ஆனாலும், கட்டிடத்தின் அடித்தளத்தில் சமிக்ஞை தெளிவற்று இருந்ததால், சில கணங்களில் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

யாராகவிருக்கும்? பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் யாருமே என்னுடன் தொடர்பு கொள்ளவதில்லை. அதை நான் விரும்புவதுமில்லை என்பது, எனது இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவருக்கு நன்கு தெரியும்.

ஒரு வேளை, ஊரிலிருந்து யாராவது அழைத்திருப்பார்களோ.... என்றெண்ணியவாறு வாகனத்தை இயக்கி வெப்பம் ஏறும் வரை சில நிமிடங்கள் காத்திருந்தேன்.

இப்படித்தான் சில வாரங்கள் முன் ஒரு நாள், நடுநிசி கழிந்து நாற்பத்து மூன்று நிமிடங்களைக் கடந்து கொண்டிருந்தவேளை தொலைதூர அழைப்பொன்று. துடித்துப் பதைத்து எழுந்து வீட்டுத் தொலைபேசியைக் கைப்பற்றிக் காதுக்குக் கொடுத்த போது, "வணக்கம். நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம்." என்று விட்டு, "அக்கா, கதையுங்கோ" என்றது ஓர் ஆண் குரல்.

அவரிடமிருந்து தொலைபேசி கை மாறவும் மறு முனையில் இருந்து, எறிகணைகளின் பின்னணிச் சத்தத்துடன் எனது உறவினர் ஒருவரின் பரீட்சயமான குரல்.
"ஆ, பிள்ளை, நான் தான், நீங்கள் அனுப்பினது பதினைந்து நாளில கிடைச்சுது. இப்ப, நாங்கள், இரணைப்பாலையில நிக்கிறோம், கேட்குதா.......நல்லா வந்து விழுகுது......
ஐயோ...........ஒரே புகை மண்டலமாக இருக்குது...............எல்லாரும் விழுந்து படுக்கினம்......கன பேர் காயப்பட்டு விட்டனம் போல இருக்கு. இங்கே பச்சைத்
தண்ணிக்குக் கூட பஞ்சம் வந்திட்டுது......எண்டாலும் பிள்ளை, நாங்கள் நல்ல நம்பிக்கையோட இருக்கிறம்...............நீங்கள் எல்லாரும் உங்களுடைய கடமைகளைச் சரியாச் செய்தால் சரி........வேறென்ன, கன சனம் காத்திருக்கினம்....
உயிரோட இருந்தால், திரும்பவும் எடுக்கிறேன்.......அப்பச் சரி...... என்ன..............
நான் வைக்கிறேன்......."

"ஓம், ஓம்" என்று மட்டும் கூறி அழைப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு, என்னை நானே கிள்ளிப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், அது கனவல்ல என்று. அதன் பின்பு நெஞ்சு பதைபதைக்க தாயக நிலைமைகளை எண்ணியவாறு விழித்திருந்து விட்டு, கணினி முன் போய் அமர்ந்தேன்.

இணையத்தளத்தில் முதலாவது செய்தியாக வழமை போலவே வன்னி மக்கள் மீது நடாத்தப்பட்ட அரச படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதுவரை கிடைக்கப்பெற்ற விபரங்களும் பதிவாகியிருந்தன.

நெஞ்சம் கனக்க, ஒவ்வொரு பெயராகப் படித்தேன். அன்று மட்டும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட நாற்பத்து ஆறு பேர் பலியாகி இருந்தனர். காயப்பட்டவர்களின் பட்டியலில் எனது உறவினர் இருவரது பெயர்களும்............. அதில் ஒன்றாக என்னுடன் இரவு கதைத்த அந்த வயதான பெண்மணியும்........

தலை சுற்றியது. நம்பவே முடியாமல் இருந்தது. எதிரியால் அவர்கள் மீது ஏவப்பட்ட எறிகணை வெடிக்கும் ஓசை என் செவிப்பறையிலும் வந்து வீழ்ந்ததையும் இக்கரையில் இருக்கும் நான், எதுவுமே செய்ய முடியாது தவித்த நிலைமையையும் எண்ண மிகவும் வேதனையாக இருந்தது.

புலம்பெயர்ந்து வந்ததால......எத்தனை போராட்டம் நடத்தியாச்சு........எத்தனை
ஆயிரமாகக் கூடி மனிதச் சங்கிலியாக நின்று கவனத்தை ஈர்த்தாச்சு..............
எத்தனை சந்திகளில் நின்று இத்தனை நாட்களும்......சொல்லிப் பார்த்தாச்சு..........
நாடு விட்டு நாடு போய்த் தலைநகரங்களில நின்று கதறி அழுதாச்சு.....இத்தனை ஆண்டுகளாக......எத்தனை தரம் புள்ளிவிபரங்களுடனான கண்டன
அறிக்கைகள் விட்டாச்சு........தெருத் தெருவாக ஊர்வலம் போய் மனுக்களும் கொடுத்தாச்சு.....உண்ணாவிரதமிருந்ததும் போதாதென்று சில உயிர்களை தீயில் இழந்தும்...............பார்த்தாச்சு..........

எனினும், செவிடன் காதில ஊதின சங்காக எங்களுடைய உரிமைக் குரல்கள்..........? இன்றுவரை ஏதிலிகளாக எமது மக்கள்......?? மூடை மூடையாக அறுவடை செய்து, நிறைவாக வாழ்ந்த எங்களுடைய மக்களா........இன்றைக்கு அரிசிக் கஞ்சிக்கு கை ஏந்தி பல மைல்கள் நீளத்துக்கு மணிக் கணக்காகக் காத்து நிற்கிறார்கள்...............?? இதைவிடவும் கொடுமை, தண்ணீர்ப்பஞ்சம்....!! என்னுடன் நானே கதைத்து, என்னை நானே சமாதானப்படுத்தி.................எத்தனை நாட்களுக்கு...................

இப்படி நினைத்தபடி, வாகனத்தை இயக்கிப் பொதுநூலகம் நோக்கிய திசையில் நகர்ந்தேன். நேரமோ பிற்பகல் இரண்டு ஐம்பது ஆகியிருந்தது. வார இறுதி நாட்களில், மாலை ஐந்து மணி வரை தான் நூலகம் திறந்திருக்கும்.
கடும் பனிப்புயல் வீசவுள்ளதாக எச்சரிக்கப்பட்டு இருந்ததால், வீதிகளில் வாகன நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. தூரத்தில் பொன்னிறப் பொட்டுக்கள் மட்டுமே தெரிய ஒரு சில வாகனங்கள் எதிர்த்திசையில் சென்ற வண்ணம் இருந்தன.

எதிர்பார்த்தவாறு சில நிமிட தாமதத்துடன் 3:04 க்கு நூலகத்துக்குள் நுழைந்தேன். அதற்குள் பனிக்குளிர் காற்றுத் தாங்க முடியாமல் நான் பட்ட பாடோ பெரும் பாடகி விட்டது. ஆனாலும், புலம் பெயர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியிருந்ததால் பழகி விட்டிருந்தது.

மீள ஒப்படைக்க வேண்டியிருந்தவற்றை, கடமையிலிருந்த நூலகரிடம் ஒப்படைத்து விட்டு வழமையான எனது மூலை மேசைக்கு விரைந்தேன். எதிர்பார்த்தபடி எவரும் அங்கு இருக்கவில்லை. அதனால், என் மனதில் ஒரு நிம்மதி, திருப்தி, இன்பம் அல்லது இவை யாவும் இணைந்த உணர்வுகளின் கலவை எனலாம்.

முன்னொருமுறை இந்நூலகத்திலேயே இல்லாத ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக
நான் கொண்டு வந்திருந்தேன். அதுதான் அந்த மூலையில் நான் வந்தமர்ந்த முதல் நாள். "பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும்" - தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைத் தொகுப்பின் முதற் பதிப்பு. மொத்தம் நானூற்று முப்பது பக்கங்கள்.

புதையல் ஒன்றைக் கண்ட, இல்லையில்லை......... .அதனிலும் மேலான மகிழ்ச்சி கரை புரண்டோடக் கண்களை மூடி, உள் மூச்சொன்றை ஆழ இழுத்து மெதுவாக விட்டபடி, எழுந்தமானமாக அப்புத்தகத்தைத் திறந்தேன். பக்கம் 53.

இடது பக்கத்தில் ஒரு கறுப்பு - வெள்ளை புகைப்படம். ஈருருளியில் ஒருவர். பாதையின் இரு மருங்கிலும் மரங்களும் அடர் செடி கொடிகளும். உச்சிக்குச் சற்றுக் கீழே சூரியன். காலைப் பொழுதா அன்றி மாலைப் பொழுதா, பயணி எமை நோக்கி வருகிறாரா இல்லை எதிர்த்திசையிற் போகிறாரா என்று கூறிட முடியாதிருந்தது. ஆனாலும் அது ஒரு சந்தி என்பது தெளிவாகத் தெரிந்தது.

யாருக்குத் தெரியும்......நானும் முன்னொரு போது அப்பாதையினூடாகப் பயணித்திருக்கலாம்.......என்றெண்ணியவாறு வலது பக்கத்தைப் பார்த்தேன்.
"பனி விழும் தேசத்து நண்பனுக்குப் பதிற் கடிதம்" - அந்தத் தலைப்பைப் பார்த்ததுமே அதனைப் படிக்க வேண்டும் போல் ஆவல் எழுந்தது.

இதயம் படபடக்கப் படித்தேன். நான்கு பக்கங்களில் தொண்ணூற்று ஏழு வரிகள். அவற்றில் சில வரிகளை வாசித்த போது, எனக்கு - எனது கடிதமொன்றுக்கு அவர் எழுதிய பதிலாகவே நான் உணர்ந்தேன்.
"இசைந்து போக அசைந்து கொள்"
"பழையன மீட்டல் பழுது"
"புதிய மண்ணில் வேர்விடப் பழகிக் கொள்"
ஆகிய வரிகள் என்னை வதைத்தன.

'95ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன், அவர் எவரை நினைத்து அந்தக் கவிதையை எழுதினாரோ என யோசித்தவாறு மேலும் இரு தடவைகள் அக்கவிவரிகளை
முழுமையாகப் படித்துப் பார்த்தேன்.

இறுதிப் பக்கத்தில் அவர் எழுதியிருந்த 'அந்த இரு வரிகள்' என்னை ஏதோ செய்தன; ஏலவே என்னுள் இருந்த எண்ணத்திற்கு இன்னுமின்னும் உரமூட்டின. மேலும் மேலும் வசிக்க வாசிக்க என்னுள் கனன்று கொண்டிருந்த 'ஏதோ ஒன்று' வலுப் பெற்று என்னை முழுமையாக ஆக்கிரமித்தது. சிந்தனைப் பறவையோ பத்தாண்டுகள் பின்நோக்கிப் பறக்கத் தொடங்கிற்று.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இடப்பெயர்வும் அதன் பின்னான உயர்தரப் பரீட்சையும் அதன் முடிவு கூடத் தெரிந்து கொள்ளாமல் வீட்டுச் சூழ்நிலையை முன்னிறுத்திப் பெற்றோரின் இயலாமை காரணமாகவும் சகோதர சகோதரியரின் வற்புறுத்தலாலும் எனக்காக இல்லாவிட்டாலும் என்னை எதிர்பார்த்திருப்பவர்களுக்காக, அவர்களுடைய ஏக்கங்களிக்கு விடை தேடிப் புகலிடம் நாடிப் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் பனி விழும் தேசத்தில் தடம் பதித்தமை வரையான நாட்கள் முதல், அன்று வரையான அத்தனை நாட்களும் பத்தாண்டுகள், பத்து நிமிடத்தில் என்ற வேகத்தில் ஓடி முடித்த போது, மனம் ஓர் ஆறுதல் நிலையை அடைந்திருந்தது.

ஆனால் அது திரும்பவும் காட்டாற்று வெள்ளம் போல் ஓடத் தொடங்கிய போதே என் மனவுணர்வுகளுக்கு வடிகாலாக, ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கத் தொடங்கினேன். மனதில் வந்து விழுந்தவை எல்லாவற்றையுமே எழுதினேன். எழுதியவற்றை மீண்டும் படித்தேன். அன்று முதல் இன்று வரையான நாட்களுள் செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகத் திட்டமிட்டேன். அதோடு நின்று விடாது அவற்றைச் சீராக நிறைவேற்றியும் வந்தேன்.

ஓடும் புளியம்பழமும் போல் இங்கு ஒட்டியும் ஒட்டாமலும் பிடிப்பின்றி வாழ்ந்த
நாட்களில் சிறுகச் சிறுகச் சேர்த்தவற்றையும் மனத் திருப்திக்காகச் செய்தவற்றையும் எண்ணிப் பார்த்தேன். சேமிப்பு அதிகம் இல்லாவிடினும், கடனென்று ஏதுமில்லை. எனது வீட்டுக் கடமைகளையும் எதிர்பார்க்கப்பட்டபடி உரிய நேரத்தில் நிறைவேற்றியும் விட்டேன். எனது ஆசைக்கும் எதிர்காலத் தேவைக்குமாகப் படித்துப் பட்டமும் பெற்று விட்டேன். இனியென்ன? ஆம்! அதுதான், என் இறுதி இலட்சியத்தினை நிறைவேற்றுவது தான்!!

பத்து நிமிடத்தில் நூலகம் பூட்டப்படவுள்ளதாக உள்ளக ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். அதைக் கேட்டதும் என் நினைவுப் புத்தகத்தில் இருந்து சுயநினைவுக்கு மீண்ட நான், சுதாரித்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். சற்று முன் வரை ஆங்காங்கே நின்றவர்கள், நூல்களைத் தேடியவர்கள், 'கதை நேரம்' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிறுவர்கள் என எவருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது அந்தப் பகுதி.

அதுவரை நான் அமர்ந்திருந்த அந்த மூலையைச் சற்று எட்ட நின்று ஒரு தடவை பார்த்தேன். எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறேன். பல நூல்களைப் படித்திருக்கிறேன். பரீட்சைகளுக்கு என்னைத் தயார் செய்திருக்கிறேன். மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டு பல நூறு தடவைகள் வந்து திரும்பியுமிருக்கிறேன். ஆனால்........ஆனால்...........இன்று......ஏன் என் கண்களில் ஈரம்?? அதுவும் என்னுள் இருந்த வீரம் விழுதெறிந்த இடத்தில்...???

ஆம்! இன்று, காலம் கை கூடும் என்று காத்திருந்த கடைசி நாள்.....இதோ அந்தக் கடைசி நிமிடங்கள்....... அறுபது விநாடிகள் நிமிடத்துக்கு எனும் வேகத்தில் கரைந்து கொண்டிருக்கின்றன. திடீரென ஒரு ஆசை. அருகில் நின்ற நூலகரிடம் என் விருப்பத்தைக் கூறி அனுமதி கேட்டேன். அவரும் உடனே எவ்வித மறுப்புமின்றி "ஆம். அதற்கென்ன....." எனக் கூறி, என்னை அந்த மூலையில் நிற்கச் சொன்னார்.

நான் கொடுத்த எனது கைத்தொலைபேசியில் இருந்த நிழற்படக் கருவியை இயக்கி "Smile please......." என்றார். நானும் மறுக்காது சிரிப்பதாகப் பாவனை செய்தேன். அதில் ஏதோ ஒரு சிறு திருப்தி. ஏனெனில், அது எனக்கு ஞானமளித்த இடம்; தைரியம் தந்த மூலை. நூலகத்தின் ஒரு சிறு பகுதி எனினும் சிந்திக்கவும் சிந்திப்பவற்றில் தெளிவைப் பெறவும் எனக்குத் தாராளமாக - உதவிய இடம்.

உள்ளே வந்த பின், அந்தச் சுவர் நோக்கும் திசை தெரியாவிடினும், என் இலட்சியப் பயணம் நோக்கிய திசையைத் தீர்மானித்த கணத்தில் நான் அமர்ந்திருந்த மகத்துவம் மிக்க பூமி. மற்றையவர்களுக்கு அது வெறும் கட்டடம். ஆனால், எனக்கு, உற்ற நண்பனாய் உணர்வூட்டி, பிரதிபலன் பாராது உதவிய வலிமை மிகு ஞான பீடம்.

"நம் எண்ணங்களாலும் செயல்களாலும் நம் வாழ்வை உருவாக்குகிறோம்" என்பதை அறிந்து என்னை நானே பரிசோதித்து என் வாழ்வின் சில மணித்துளிகள் நேரத்தையாயினும் பரிசோதனைக்களமாக்கிச் செயற்படுத்திட என்னை உந்தித் தள்ளிய - என் சக்தியை ஒன்று குவிப்பதை சாத்தியமாக்கி நம்பிக்கையூட்டிய இந்த நூலகத்துக்கு நான், மீண்டும் வருவேன் என்று இன்றும் கூறலாம். ஆனால், ஏனோ அப்படிக் கூற வேண்டும் எனத் தோன்றவில்லை; வர வேண்டும் போலும் இல்லை. வரலாம்.....வராதும் போகலாம். அது காலத்தின் கரங்களிலேயே அன்றி என் கைகளில் இல்லை - அது மட்டும் உண்மை.

பொங்கிய பல உணர்வுகளுடன், பிறப்பு உரிமைகள் பற்றிய எண்ணங்களுடன் தாயகக் கனவுடன் கைத்தொலைபேசியைக் கைப்பையுள் இட்டபடி நூலகர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, மீதமிருந்த அரைப்போத்தல் தண்ணீருடனும் ஆனந்தக் கண்ணீருடனும், இம்முறை நூல்கள் ஏதுமின்றி நூலகத்தை விட்டு வெளியேறினேன்.

அன்றொரு நாள் வாசித்த கவிஞரின் 'அந்த இரு கவி வரிகள்' என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தன.
"சேர்ந்து வாழப் பழகிக் கொள் அல்லது
திரும்பி வந்து சேர்

- ஆதவி -

தமிழ்க்கதிர்

Comments