தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி ஜெனீவாவில் 'சாவிலும் எழுவோம்' பேரணி

தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணியாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மார்ச் மாதம் 16 ஆம் நாளை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அனைத்துலகம் அங்கீகரிப்பதற்கான நாளாக பிரகடனப்படுத்தி 'சாவிலும் எழுவோம்' கண்டனப் பேரணி ஊர்வலம் தற்போது நடைபெறுகின்றது.

ஜெனீவா நகரின் பிரதான கண்காட்சியகப் பகுதியான கெம்பின்ஸ்கி (Kempinski) ஹோட்டல் என்கிற நீரூற்றுப் பூங்காவில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை தொடங்கி வானதிரும் முழக்கங்களோடும் தேசிய தலைவரின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளுடன் பேரணி தற்போது சென்று கொண்டிருக்கின்றது.



சிங்கள அரசினது தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் ஊர்தி முன்னே நகர்ந்து செல்ல தொடர்ந்து இரத்தமும் சதையுமாகி நாளாந்தம் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் அவல வாழ்வினை சித்திரிக்கும் தெருவோர காட்சிகளும் மனதை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன.’

இக்கவனயீர்ப்பு வெளிப்பாடு பிரதான நகர்ப்பகுதியை அரவணைத்து நிற்கும் மக்களின் பார்வைக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளததக நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வழமையான பேரணிகளைப் போன்று அல்லாது ஜெனீவா நகரின் பிரதான பகுதிகள் ஊடாக இந்தப் பேரணி அலை அலையாக நகர்ந்து செல்வதால் மக்கள் நெரிசல் மிகுந்த ஜெனீவா நகரம் முழுமையாக செயலிழந்துள்ளது.

இதேவேளையில் பேரணி தொடங்கிய இடத்தில் இன்னும் மக்கள் நகர முடியதாவாறு திணறி நிற்கும் நிலையில் முன்நகர்ந்த பேரணி ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலை சென்றடைய அதிகம் நேரம் எடுக்கலாம் என ஜெனீவாவில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.



ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டுள்ள அதேவேளை, சுவிஸ் வாழ் தமிழர்கள் ஜெனீவாவின் மனித உரிமை சதுக்கத்தில் ஒன்றுகூடி ஈகம் செய்த முருகதாசனின் உணர்வுகளை ஒவ்வொரும் நெஞ்சில் தாங்கியவாறு பிற்பகல் 4:00 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தவுள்ளனர்.

ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையார் ஈகச்சுடரினை ஏற்றி நிகழ்வினை தொடங்கி வைக்க இந்த மாபெரும் கூட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததனைத் தொடர்ந்து உள்ளநாட்டு-வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பேராளர்களின் உரைகளோடு சிறிலங்காவிலிருந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் லங்கா சமசமாய கட்சியின் மூத்த உறுப்பினர் ரணத் சிறப்புரையாற்றவுள்ளார்.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்கும் தமிழீழ தேசியக் கொடிகளுடன் சிவப்பு- மஞ்சள் நிற கொடிகளும் பட்டொளி வீசி பறந்து கொண்டிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக 'புதினம்' செய்தியாளர் கூறுகின்றார்.



அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கான 10 ஆவது கூட்டத்தொடரின் காலகட்டத்தில் இந்த மாபெரும் பேரணியில் பொதுக்கூட்டம் இடம்பெறுவதால் அனைத்து இராஜதந்திரிகளின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக அமையும் என்று சுவிஸ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் தமிழர் பேரவையால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கையளிக்கப்படவுள்ள மனுவின் விபரம்:

மேதகு திரு. பான் கீ மூன்
பொதுச் செயலாளர்
ஐக்கிய நாடுகளின் செயலகம்
நியூயோர்க்
ஜெனீவா
16.03.2009

மேதகு ஐயா,

தமிழ் மக்களின் அவல நிலை

சுவிசில் உள்ள நாடற்ற தமிழர்களின் 30-க்கும் அதிகமான அமைப்புக்களின் ஒன்றியமான சுவிற்சர்லாந்தின் தமிழர் பேரவை தங்களால் சோர்வின்றி இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு ஒரு நிலையான அமைதித் தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறது. ஆனாலும் ஐ.நா.வினாலும் ஐ.நா. துணை அமைப்புக்களாலும் வெளியிடப்பட்டு வரும் சில அறிக்கைகளையிட்டு திருப்தி கொள்ள முடியாதுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் 1905 ஆம் ஆண்டில் இருந்தே அமைதி அரசியல் வழியில் தாம் இழந்துவிட்ட தன்னாதிக்கமான இறையாண்மையை மீளப் பெறப் போராடி வந்துள்ளனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரம், மொழி மற்றும் பண்பாட்டு தனித்துவத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட அனைத்து முறையான நேர்மையான முயற்சிகளும் தோல்வி கண்ட பின்னரே ஆயுதப் போராட்டத்தை தொடங்கினர்.

தமிழ் மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மை இனத்தவர் மீதும் அரசுகளால் முறையே 1956, 1958, 1961, 1970, 1977, 1980, 1983 என மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகளும் 1987 முதல் இன்று வரை தொடரும் இராணுவ நடவடிக்கைகளும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவர்களின் ஆதரவுடன் தமது துயரங்களுக்கு ஒரு நிலையான தீர்வைக் காணத் தமிழர் அயராது முயன்று வருகின்றனர்.

எனினும், அனைத்துலக அரங்கின் நாயகர்கள் தள யதார்த்தத்தை உதாசீனம் செய்து தமது அரசியல் பொருளாதார நலன்கள் சார்ந்த விருப்பங்களுக்கு அமைய மாறுபட்டு நடப்பதாகத் தெரிகிறது.

இதற்கு அண்மைக்கால உதாரணமாக, வன்னித் தமிழ் மக்களை அவர்களின் விருப்பம் இன்றியே அவர்களது வாழ்விடங்களில் இருந்து இடம் மாற்றும் கோரிக்கை அமைகிறது.



இத்தகைய கோரிக்கையை விடுப்பவர்கள், அத்தகைய செயற்பாடு அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் சிங்கள வல்லாதிக்க அரசின் இராணுவ நோக்கங்களுக்கே துணை போவதைக் கவனிக்கத் தவறுகின்றனர்.

அதற்கும் அப்பால், தமிழ் மக்களை அகற்றி இராணுவத் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் எந்த ஒரு முயற்சியும் அவர்களின் அடிப்படை உரிமைகளை முற்று முழுதாக மறுக்கும் நிலையில் இப்பாவத்தை ஐ.நா. கூடச் செய்ய முற்பட்டிருக்கக் கூடாது.

மேலும், உண்மையான சுயாதீனமான ஆதாரங்கள் இல்லாது மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடுத்து வைத்துள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஐ.நா.வின் நேர்மை, நடுநிலைமை என்பவற்றைச் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

இதன் மூலம் சிறிலங்கா அரசின் பயங்கரவாத ஓழிப்புப் போர் எனப் பிழையாகக் கூறி நடத்தும் தமிழருக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு, இன அழிப்புப் போர்க் குற்றங்களுக்கு ஐ.நா. உடந்தையாகச் செயற்படும் குற்றம் செய்வதாகக் கருத இடமளிக்கிறது.

இப்பொழுது வன்னியில் 300,000-க்கும் அதிகமான மக்கள் போதுமான அளவு உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றிப் பட்டினியாலும் கடுங்காயங்களாலும்; நோயாலும் அவஸ்தைப்படுகின்றார்கள். சிறிலங்கா அரசினால் 'பாதுகாப்புப் பிரதேசம்' என அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்தவர்களும் மருத்துவமனைகளில் உள்ளவர்களும் தொடர்சியான எறிகணை குண்டுவீச்சு மழைக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கானோர் நாளாந்தம் கொல்லப்பட்டும் காயப்பட்டும் வருகின்றனர்.

கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்து எறிகணைகள் அப்பாவிப் பொதுமக்கள் மேல் இரவு - பகல் பாராது மழைபோல் பொழிவதால் அவர்கள் மழைநீர் நிறைந்த மண் பதுங்கு குழிகளுக்குள் போதிய உணவும் சுத்தமான குடி நீரும் இன்றித் தவிக்கும் நிலை உள்ளது.

அனைத்துலக போர்ச் சட்டங்களை மீறும் வகையில் உணவு மருந்து என்பவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் குற்றங்களை சிறிலங்கா அரசு செய்கிறது என நாம் அனைத்துலகத்தின் கவனத்துக்குப் பல தடவைகள் விளக்கி உள்ளோம். அரசு வன்னிக்கு உணவு, மருந்துகளை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கிறது என வெறுமனே கூறுவதால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிட்டிவிடாது.

எனவேதான் அனைத்துலக சமூகத்திடம் இருந்து உருப்படியான உறுதியான செயல் வடிவங்களைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக சமூகத்தினால் இதனைச் செய்ய முடியாது என்றால் நாமே இவற்றை வன்னிக்கு எடுத்துச் செல்ல எமக்கு உதவுமாறு கேட்கிறோம்.

இந்திய அரசை இந்தப் போரில் ஒரு முக்கிய பங்காளியாக நாம் பார்ப்பதால் அவர்களின் கைகளில் எமது நோயாளிகளையும் காயப்பட்டவரையும் கவனிக்கும் பொறுப்பை நாம் ஒப்படைக்க முடியாதுள்ளது.

ஏதிலியான ஈழத் தமிழரான முருகதாஸ் என்பவர் ஐ.நா. முன்றலில் அதிஉயர் தியாகமான தீக்குளிப்பு மூலம் தமிழ் மக்களின் அவல நிலையைச் அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வுக்கான ஒரு தூண்டுதலுக்கு வழி தேட முயற்சித்தார். ஆயினும் இதுவரை அவ்வாறான எந்தவித உருப்படியான முன்னெடுப்பும் இதுவரை தென்படவில்லை.

தென்னிலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தெடுப்பின் தரவுகள் சிங்கள மக்கள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றது.

ஏனெனில், அவர்கள் சிறிலங்கா, சிங்கள பௌத்த தேசம் என்பதை வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அந்தத் தீவில் வேறு எவரும் வாழும் உரிமை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஏற்கனவே தமிழ் மக்களும் போதும் போதும் எனும் அளவுக்கு துன்பப்பட்டுவிட்டதால் பிரிந்து செல்லவே விரும்புகின்றனர். இப்படியான நிலையில் அனைத்துலக சமூகம் எப்படித் தமிழர்களை சிறிலங்காவின் ஒற்றை ஆட்சிக்குள் வாழ அறிவுரை வழங்க முடியும்?

சிங்கள அரசுகளிடம் நீதியை எதிர்பார்த்து முன்னரும் நாம் மிகவும் கேவலமாக ஏமாந்து விட்டோம் என்பதை முழு உலகமே அறியும். இந்த உண்மையை பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு சாட்சியமாக உள்ளது. இந்த நிலையில் நாம் அனைத்துலக சமூகத்திடம் உள்ளக சுயாட்சி அடிப்படையில் ஒரு தீர்வை எதிர்பார்க்கிறோம்.

அனைத்துலக சமூகத்தை தூண்டும் வகையில், சுவிசில் வாழும் ஏதிலித் தமிழர்களாகிய நாம், ஐ.நா. முன்றலில் மார்ச் 5 ஆம் நாள் முதல் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தி வருகிறோம்.

வன்னி மக்களுக்கு உடனடி உணவும் மருந்தும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும் எனவும், உடனடிப் போர் நிறுத்தம் தேவை; என்பதை வலியுறுத்தியும் நாம் இதனை மேறகோள்கிறோம். எமது கோரிக்கைகள் நிறை ற்றப்படும் வரை இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வைத் தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.

ஐ.நா. பொதுச் செயலாளர் என்ற வகையில் காலத்தின் கட்டாயம் கருதி இந்த இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்தும் உருப்படியான நடவடிக்கையினைத் தாங்கள் மேற்கொள்வீர்கள் என நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்

சண் தவராஜா (துணைத் தலைவர்)
தம்பிப்பிள்ளை நமசிவாயம் (செயலாளர்)

Comments