உக்கிரமடையும் வன்னிப்போர்

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கரையோரச் சமர் அரங்கிலும் நடந்துவரும் சண்டைகள் நாளுக்கு நாள் தீவிரமான கட்டத்தை அடைந்து வருகின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 40 சதுர கிலோமீற்றரை விடவும் குறுக்கி விட்டதாகப் படைத்தரப்பு கூறியுள்ள நிலையில் அதற்கு வெளியேயும் கடந்த வாரத்தில் சண்டைகள் நடந்திருக்கின்றன.

இந்தச் சண்டைகள் பல நாட்கள் நீண்டதோடு பெரியளவிலான இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் புலிகள் சாலைக்கு தென்மேற்கேயும் புதுக்குடியிருப்புக்கு வடக்கேயும் உள்ள தேவிபுரம் பொதுப்பிரதேசத்தில் புலிகள் பெரியளவிலான ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலை முறியடித்து விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் இராணுவ முன்னரங்கில் சுமார் 300 மீற்றர் வரையான பகுதியைக் கைப்பற்றிய புலிகள், அதன்வழியே தமது பெரியதொரு அணியை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவச் செய்திருந்தனர்.

அன்று பகல் 2 ஆவது கொமாண்டோ பற்றாலியனின் துணையுடன் இழந்த முன்னரங்கை 58ஆவது டிவிசன் படையினர் மீளக் கைப்பற்றிய போதும் புலிகளின் பெரியதொரு அணி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்துவிட்டது. ஆளில்லா வேவு விமானம் ஒன்று தற்செய லான எடுத்த படம் ஒன்றின்மூலம்தான் புலிக ளின் பெரியதொரு அணி உள்ளே நடமாடு வது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் மறுநாளும் புலிகள் இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவும் தாக்குதல்களை நடத்தினர். கடந்த 5 ஆம் திகதி அதிகாலை தொடக்கம் 10ஆம் திகதி வரைக்கும் இந்தப் பகுதிகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக 7ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 8 ஆம் திகதி நண்பகல் வரையிலும் கடுமையான மழைக்கு மத்தியில் உக்கிரமான சண்டைகள் நடைபெற்றிருந்தன.

தொடர்ச்சியாக விமானப்படையின் ஆளில்லா வேவு விமானம் பறந்து நோட்டமிட்டு படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டிருக்க அவற்றை அடிப்படையாக வைத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்தச் சண்டைகளை வழிநடத்தியிருந்தார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள நடவடிக்கைப் பணியகத்தில் இருந்தவாறு அவர் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பிரிகேடியர் உதய பெரேரா, இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கருணாசேகர ஆகியோரும் இரவு பகலாக அவருடன் கூடவே இருந்தனர். இந்தச் சண்டைகளில் புலிகள் தரப்பில் பெருமளவானோரைக் கொன்றிருப்பதாகவும் அவர்களின் சடலங்களைக் கைப்பற்றியதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது.

புலிகளின் 150 சடலங்கள் வரை இந்த ஆறுநாள் சண்டைகளின் போது கைப்பற்றப் பட்டதாக படைதரப்பு அறிவித்திருந்தது. பாதுகாப்பு அமைச்சு சுமார் 50 வரையிலான புலிகளின் சடலங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. இதனிடையே இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவிய புலிகளின் அணிகளை தேடியழிக்கின்ற நடவடிக்கைக்காக விசேட படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு தொகுதிப் படையினர் புதுக்குடியிருப்புக்கு வடக்கேயுள்ள பகுதிகளுக்கு கடந்த 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் ஹெலிகொப்டர்கள் மூலம் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவை அடுத்தே இவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். காடுகள் சார்ந்த அந்தப் பிரதேசத்தில் புலிகளைத் தேடியழிக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் ஊடுருவிய புலிகளை தேடியழிக்கின்ற முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதை தேராவில் பகுதியில் அமைந்திருந்த ஆட்டிலறித் தளம் மீதான புலிகளின் தாக்குதலில் இருந்து ஊகிக்க முடிந்தது.

10ஆம் திகதி வரையில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் சாலைக்கும் தேவிபுரத்துக்கும் இடைப்பட்ட, காடுகள், நீரேரி சார்ந்த பிரதேசத்தில் பெரும் மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மோதல்களில் படைத்தரப்புக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக புலிகள் அறிவித்திருந்தனர். அவர்களின் கணிப்புப்படி நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் காயமுற்றதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், குறைந்தளவு இழப்புகளே தமக்கு ஏற்பட்டதாக படைத் தரப்பு கூறியிருக்கிறது.

இதற்கிடையே புலிகள் தமது தாக்குதல்களை கடந்த 9ஆம் திகதி இரவுடன் இடைநிறுத்தியிருந்த போதும் தேராவில் பகுதியில் ஊடுருவிய புலிகளின் அணியொன்று இராணுவத்தினரின் ஆட்டிலறித் தளம் மீது தாக்குதல் நடத்தியது. 58ஆவது டிவிசன் படையினருக்கு உதவியாகத் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இந்த ஆட்டிலறித் தளத்தின் மீது கரும்புலிகள் அணியும், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

ஆட்டிலறித் தளத்தை கைப்பற்றிய புலிகளின் அணிகள் அதனைக் கொண்டு முகமாலை, பளை, போன்ற தென்மராட்சியிலுள்ள படைத்தளங்களை நோக்கி தாக்குதல் நடத்தின. இதன்பின்னர் புலிகளின் அணிகள் தளத்தை அழித்து விட்டு அங்கிருந்து திரும்பியதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 3 கரும்புலிகள் மற்றும் 4 கேணல் கிட்டு பீரங்கிப் படையணி போராளிகள் உயிரிழந்ததாக புலிகள் அறிவித்திருக்கின்றனர். படையினர் தரப்பில் 50 பேர் வரை மரணமானதாகவும் 6 ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர். புலிகளின் இந்தத் தாக்குதல் மற்றும் விசுவமடுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த கடும் சண்டை என்பன படைதரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

புலிகளின் அணிகள் பெருமளவில் இராணுவப் பிரதேசத்துக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து பின்னணித் தளங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக் கிறது. ஏ9 வீதி ஊடான படையினரின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தபட்டிருக் கிறது. ஏ9 வீதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். படையினர் முன்னேறிச் செல்லச் செல்ல புலிகள் இராணுவப் பிரதேசங்களுக்குள் ஊடு ருவுவது அதிகரிக்திருப்பது இராணுவத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அதேவேளை 53, 55, 57, 58, 59, 62, 63, 64, 68 ஆகிய ஒன்பது டிவிசன்கள் அலம்பில் மாங்குளம், மாங்குளம் பரந்தன், பரந்தன் தேவிபுரம் ,தேவிபுரம் புதுக்குடியிருப்பு என்ற ஒரு பெட்டிக்குள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதைவிட கொமாண்டோ படைப்பிரிவு, கவசப்படைப்பிரிவு, ஆட்டிலறிப் படைப்பிரிவு மற்றும் சேவைப் படைப்பிரிவுகள் என்பனவும் இந்தப் பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டு வந்தன.

இந்தநிலையில் தான் அண்மையில் விசேட படைப்பிரிவும், 52ஆவது டிவிசனின் இரண்டு பிரிகேட்களும் முல்லைத்தீவுக் களமுனைக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இது போரின் தீவி ரத்தை எடுத்துக் காட்டுகிறது. கடந்தவாரம் பெரும் சண்டைகளுக்குப் பின்னர் 53, 68ஆவது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைப் பகுதியைக் கைப்பற்றினர்.

புதுக்குடியிருப்பில் புலிகளின் வழிமறிப்புச் சண்டைகள் மிகத் தீவிரமாக நடந்து வருவதை இதிலிருந்து உணரமுடிகிறது. புதுக்குடியிருப்பு சந்தியைக் கைப்பற்றி ஒருவாரத்துக்குப் பின்னரே படையினரால் வைத்தியசாலைப் பகுதியை அடைய முடிந்திருக்கிறது. புதுக்குடியிருப்பு சந்தியும் வைத்தியசாலையும் சில நூறு மீற்றருக்குள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே படையினர் புதுக்குடியிருப்புச் சந்திக்குத் தெற்கேயும் சில நூறு மீற்றரைக் கடக்க பல வாரங்கள் சென்றிருந்தது. புலிகளைப் பொறுத்தவரை, இப்போது இருக்கின்ற இடங்களையாவது பாதுகாக்க வேண்டியிருப்பதால் அவர்கள் கடுமையாக எதிர்ச் சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் இரண்டாம் நிலை தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். கடந்த 5ஆம் திகதிக்கும் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்தது 11 லெப்.கேணல் தரத்திலான அங்கத்தவர்களை புலிகள் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இன்னமும் அதிகமாக இருக்கலாம்.

கடந்த 9ஆம் திகதி மட்டும் லெப்.கேணல் நிலையில் இருந்த தளபதிகள் 5 பேர் மரணமாகியிருக்கின்றனர். லெப்.கேணல்கள் அன்பழகன், எழிற்செல்வன், தேவன், புனிதன், சைமன் (சிறிதரன்), அகல்யா, வள்ளுவன் (தில்லை), கிரிதரன், உமாசுதன், ஜனா(சேரன்), கரும்புலி மாறன் ஆகியோரே இந்தக் காலப்பகுதியில் மரணமானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதேவேளை சண்டைகளின் போது புலிகளின் தளபதிகளான லோறன்ஸ், தமிழேந்தி, செழியன், சலீம் போன்றோர் மரணமாகியிருக்கலாம் என்று படைத்தரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தது. ஆனால் புலிகளிடம் இருந்து இதுபற்றி எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

போர்முனையில் புலிகள் இப்போது மூத்த தளபதிகளை களமிறக்கி சண்டைகளை நடத்துவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக பொட்டுஅம்மான், கேணல் சூசை, கேணல் சொர்ணம், கேணல் தீபன், கேணல் பானு, கேணல் விதுசா என்று முக்கிய தளபதிகள் அனைவரும் படையினருக்கு எதிரான தாக்குதல்களின் போது கட்டளைகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது. எனினும் புலிகள் சண்டைகளில் காட்டும் தீவிரமும், எதிர்த் தாக்குதல்களில் காண்பிக்கும் கடும் போக்கும் மாறவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதற்கிடையே கடந்தவாரம் திடீரெனப் பெய்த கடும் மழையால் படைதரப்புக்கும் புலிகளுக்கும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக முல்லைத்தீவின் வீதிகளில் காட்டாறுகள் குறுக்கிடும். அதிலும் சண்டைகளால் சிதைந்து போய் மண் அணைகளால் காட்டாற்று வெள்ளம் பாய்வதற்கு வழியின்றி பல இடங்களில் நீர் தேங்கியது. புலிகளைக் குறுகிய நிலப்பரப்புக்குள் அடைத்து விட்டதையிட்டு அரசாங்கம் பெருமை கொள்கின்ற போதும் புலிகள் தமது வலிமையை அவ்வப்போது நிரூபிக்கத் தவறவில்லை. இந்தநிலையில் புலிகளை முற்றாக ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இராணுவம் அடுத்து வரும் நாட்களில் தீவிரமாக இறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Comments