ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு கண்டனம்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத்தொடரில் சிறிலங்கா பல நாடுகளினால் கண்டிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

இதேவேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பலவிதப்பட்ட அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்டனத்திற்கும் சிறிலங்கா ஆளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பிரதான கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்திற்குள் அனைத்துலக அரச சார்பற்ற வேறு நிறுவனங்களின் கூட்டங்களும் நடைபெறுகின்றன.

இவற்றில் குறிப்பாக கடந்த திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அல்காக நிறுவனம், ஹிமாலயன் கலாச்சார நிறுவனம், அனைத்துலக சர்வ நம்பிக்கை ஆகிய அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களினால் இரு முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டங்களில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும் மனித பாதுகாப்பும்', 'தென் ஆசியாவில் மக்களின் கூட்டாச்சியை நோக்கி' போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் இடம்பெற்றன.

கூட்டங்களில் பல அனைத்துலக மனித உரிமையாளார்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்து உரையாற்றியிருந்தனர்.

இதில் மனித உரிமை மீறல், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் வேறுபட்ட விவாதங்களுடன் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் மிக நீண்டகால அங்கத்தவரும், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளருமான ச.வி.கிருபாகரனும் உரையாற்றியிருந்தார்.

அத்துடன் பிரபல அரசியல் ஆய்வாளரும் இளைப்பாறிய சிவில் நிர்வாகியுமான வன்னித்தம்பி கனகரட்னம் மூத்த ஊடகவியலாளர் கனகரவி, எஸ்.ஜே.இமானுவேல் அடிகளாருடன் வேறு பல தமிழ்ப் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments