மருந்துப் பொருள் தடை மூலமாகவும் மரணத்தை அதிகரிக்கும் சிங்களம்.

சிங்களப் படைகளின் வன்கொடுமைத் தாக்குதல்களால் மரண ஓலங்கள் மலிந்த பகுதியாய் மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகள் மாறியுள்ளன. இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வால் நிரம்பியுள்ள இப்பகுதிகள் சிங்கள அரசின் கொலை வலயமாக்கப்பட்டு நாளாந்தம் பல பத்து பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவருகின்றனர்.

பெருமளவானோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எந்தவொரு சனநாயக அரசுமே செய்யாத படுகொடூரமான இன அழிப்பை மகிந்த அரசு இன்று இந்த மண்ணிலே நடாத்திக் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை இந்த உலகம் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறது என்ற உண்மையையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்.

போர் நடக்கிற பகுதிகளிலே உதவக்கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி அந்நிறுவனங்களின் உதவிமூலம் தமிழினம் தப்பிப் பிழைத்துவிடக்கூடாது என்ற கொடூர நோக்கில் தனது இறையாண்மைக் கொள்கையைப் பேசிவந்த மகிந்த குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் அரசாங்கம்தான் உதவி செய்யவேண்டும் அவ்வாறுதான் செய்துவருகிறது என்ற போலிமுகத்தைக் காட்டமுனைந்தது.

இந்நிலைப்பாட்டை ஏற்று பல தொண்டு நிறுவனங்கள் இந்த மக்களை தவிக்கவிட்டு வெளியேறிய கொடுமையை உலகின் மனச்சாட்சிமுன் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் மிகக் கொடுமையான போரை சிறுபான்மை இனம் ஒன்றின் மீது திணித்து நிற்கும் அரசின் மிரட்டலுக்கு அஞ்சி தாம் ஏற்றுக்கொண்ட மனிதாபிமானப் பணிகளை இடை நிறுத்தி வெளியேறியமை அவ் அமைப்புக்களின் அப்பாவி மக்களுக்கான பணி இதுதானா? என்ற வினாவை தமிழினத்தின் மத்தியில் ஏற்படுத்தியது.

அவ்வாறு வெளியேறிய தொண்டு அமைப்புகள் தாம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமை தொடர்பில் சரியான முறையில் வெளிப்படுத்தத் தவறியமையும் சிங்கள அரசின் அதிகார மிரட்டல் போக்கை ஆசீர்வதிப்பதாய் அமைந்தது. இன்று ஒருவேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது மிகக் கொடும் மனிதப் பேரவலத்தில் சிக்கித் தவிக்கும் இம் மக்களை எறிகணை வீச்சில் கொன்றொழிக்கும் மகிந்த அரசின் வலைப்பின்னல் திட்டம் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதில் உடனடியாகப் பலியாகும் மக்கள் தவிர காயமடையும் படுகாயமடையும் மக்களும் பிழைத்துவிடக்கூடாது என்ற நோக்கிலேயே மருந்துப் பொருட்களுக்கான தடையை மகிந்த அரசு மாதக்கணக்காய் நீடித்துள்ளது. இது மிக மோசமானதொரு இன அழிப்பு. மாத்தளன் பாடசாலையில் இயங்கும் பிரதான மருத்துவமனைபோல் உலகில் எந்தவொரு மருத்துவமனையும் இந்த காலத்தில் செயலாற்றியிருக்காது என கூறும் அளவிற்கு அங்குள்ள மருத்துவர்களினதும் மருத்துவ உத்தி யோகத்தர்களினதும் அயராத அர்ப்பணிப்பு நிறைந்த சேவை மட்டுமே பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

நாளாந்தம் நூற்றுக்கணக்கில் வரும் காயம் அடைந்த பொதுமக்களைச் சமாளிப்பதில் அவ் வைத்திய சாலை பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. காயப்பட்டவர்களை படுக்கவைக்க இடமில்லை காயத்தை மாற்றுவதற்குரிய மருந்தில்லை அவர்களுக்கு உண்ணக் கொடுக்கக்கூடிய போசாக்கான உணவில்லை. விடுதியில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ள ஓரளவு குணமான காயப்பட்டவர்களைக்கூட தொடர்ந்தும் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாதநிலை என அவ் வைத்தியசாலை சந்திக்கின்ற நெருக்கடிகள் ஏராளம்.

இவைதவிர சாதாரண வருத்தம் தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்கள் என அத்தனை பேருக்குமான மருத்துவ தேவையும் அதிகரித்தே செல்கிறது. காயத்தை மாற்றக்கூடிய மருந்துப் பொருட்களைத் தனியார் கடைகளில் தேடி அலையும் நிலையில் பல காயப்பட்ட பொதுமக்களைக் காணமுடிகிறது. கப்பல்மூலமாக இம் மருத்துவ மனைக்கான மருந்துப் பொருட்களை அனுப்பப்கூடிய நிலையிருந்தும் தமிழ் மக்களை நாளாந்தம் அவலப்படுத்தும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க இவ்வுலகில் யாரும் இல்லாத நிலையே தொடர்கிறது.

உலக நிறுவனங்களின் அனுசரணையுடன் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களைக்கூட தமிழ் மக்களுக்கு சீராக வழங்கவிடாது சிங்கள அரசு தடுத்துவருகிறது. தமிழ் மக்கள் தனது மக்கள் என்றும் தனது நாடு இறைமையுள்ள நாடு என்றும் உலகின் முன் கூறி ஒரு இனத்தையே பட்டினிச் சாவிற்குள் தள்ளும் படுபயங்கரத்தை எந்தக் கொடிய அரசும் செய்ததாக வரலாற்றில் இல்லை.

இப்படிப்பட்ட சிங்கள அரசிடத்தில் நியாயமான உரிமைக் கோரிக்கையையோ பாதுகாப்பான வாழ்வையோ எதிர்பார்ப்பது முதலைவாய்க்குள் அடைக்கலம் தேடும் மீனினைப் போன்ற நிலையினை உருவாக்கிவிடும் என்ற உண்மையை தமிழினம் இத் தருணத் தில் தெளிவாகப் புரிந்தாக வேண்டும்.

நன்றி: ஈழநாதம் (13.03.2009)

Comments