ப.சி.யை எதிர்த்துப் போட்டியிடுவேன்! -சீமான் சிறை பேட்டி!



மேடைகள்தோறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அனல் பறக்கப் பேசி, பொதுமக்களுக்கு உணர்வூட்டிய இயக்குநர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

புதுச்சேரியில் நடந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திப் பேசியவை இந்திய இறையாண்மைக்கு எதி ராக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட, நெல் லையில் சீமானே முன்வந்து போலீசிடம் கைதானார்.

புதுவைக்குக் கொண்டு வரப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிலையில், பாளை யங்கோட்டையில் அவர் ஏற்கனவே பேசிய பேச்சு களுக்காக என்.எஸ்.ஏ. சட்டம் பாய்ந்திருக்கிறது. சிறைப் பட்டிருக்கும் சீமான் இதை எப்படி எதிர் கொள்கிறார்? எம்.பி. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது வியூகம் என்ன? உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்வதற்காக புதுச்சேரி சிறையில் சீமானை சந்திக்கச் சென்றோம்.

இயக்குநர் தங்கர்பச்சான் உள்பட பலரும் சீமானை பார்க்க இயலாமல் திருப்பியனுப்பப்பட்ட நிலையில், "வாரத்தில் ஒருநாள்தான் சந்திக்க முடியும். இன்று முடியாது' என நம்மிடமும் கடுமை காட்டியது சிறை நிர்வாகம். இதனையடுத்து, சீமானின் திருநெல்வேலி வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக சீமானை பேட்டி கண்டோம்.
சினிமாதுறையில் இருப்பவர்கள் தங்கள் உழைப் பின் மூலமாக பொழுதுபோக்கு-கேளிக்கைகள் என சொகுசாக இருக்கிறார்கள். நீங்கள் போராட்டம், அதிதீவிரப் பேச்சு என செயல்பட்டு இப்படி சிறையில் கஷ்டப்படு கிறீர்களே?
சீமான்: என் சொந்த ரத்தங்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருக்கும்போது, சொகுசு வாழ்க்கை என்ன வேண்டிக்கிடக்குது!
சிறையில் தனிமையாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சீமான்: வெளியில் இருந்து கையா லாகாத்தனமாக இருப்பதைவிட, உரிமைபேசி கம்பிக்கு பின்னால் இருப்பதே மேல்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி அரசால் கைது செய்யப்பட்ட உங்கள் மீது இப்போது தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட் டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதே?
சீமான்: என்னை சிறைப் படுத்த வேண்டும் என முடிவு செய்தபிறகு, அது என்ன சட்டமானால் என்ன? அரசு அதன் கடமையைச் செய்கிறது. நான் என் கடமையைச் செய்கிறேன். இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இருக்குமளவிற்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் அனைத்து பத்திரிகைகளும் வார இதழ்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன. அதையே நான் மேடையில் பேசினால், அதைப் பொறுக்க முடியாமல் என்னைச் சிறைப்படுத்துகிறார்கள். இதுதான் இங்குள்ள பேச்சு சுதந்திரம்!
ஒவ்வொரு மேடையிலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பேசிவந்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியான சிவ கங்கையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன? ப.சியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா?
சீமான்: தேர்தல் குறித்து நான் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. அது பற்றி என் தமிழ் உறவுகளும், என் பின்னால் இருக்கும் பெரிய மனிதர்களும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் முடிவு செய்தால் போட்டி யிடுவேன். சிறைக்குள் இந்த சீமானை பிடித்துப் போட்டுவிட்டால் பயந்து முடங்கி விடமாட்டான். எங்கு இருந்தாலும் என் குரல் ஒலிக்கும். என் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேரும்.

-காசி

Comments