வன்னியில் உள்ள முக்கிய மருத்துவமனை மூடப்படும் அபாயம்: பிபிசி செய்தி நிறுவனம்

சிறிலங்கா படையினரின் வன்னிப் பகுதி மீதான படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று மருந்துகள் அற்ற நிலையில் மூடப்படும் நிலையை அடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா படையினர் வன்னிப் பகுதி மீதான படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் வேளையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று மூடப்படும் கட்டத்தை அடைந்துள்ளது.

மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாகவே இந்த மருத்துவமனை மூடப்படும் நிலையை அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துவமனை மூடப்படுவது நோய்களினாலும் காயங்களினாலும் துன்பப்படும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளுவதாகவே இருக்கும் என மருத்துவர் ரி.வரதராஜா தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இந்த மருத்துவமனை மூடப்படுவதற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோதல் நடைபெறும் பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் கவனம் அதிகரித்து வருகையில் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை சிறிலங்கா படையினர் கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் பாரிய மனித அவலங்கள் தோன்றியுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மருந்துப் பொருட்களும் உணவுப் பொருட்களும் வன்னிக்கு அனுப்பப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments